30 அக்டோபர், 2021

லா.ச.ரா(மாமிர்தம்) பிறந்த & நினைவு நாள் இன்று

 லா.ச.ரா எனும் மந்திரவாதி





        திருச்சி மாவட்டம் லால்குடியில் 1916 அக்டோபர்30 ஆம் தேதி பிறந்தவர், ராமாமிர்தம். எழுத்துலகில் லா.ச.ரா., என்றழைக்கப்பட்டார். இவர், காஞ்சிபுரம் அருகேயுள்ள அய்யம்பேட்டையில் வளர்ந்தார். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றினார்.

       தன் 16ஆவது வயதிலேயே கதை எழுதத் தொடங்கினார். ஆரம்ப காலத்தில் அவர் எழுதிய கதைகள், 'மணிக்கொடி' இதழில் பிரசுரமாயின. ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஆறு நாவல்கள், இரண்டு வாழ்க்கை வரலாற்று நூல்கள் உட்பட பல நூல்களை எழுதியுள்ளார்.

     பச்சைக்கனவு, கஸ்தூரி, சுமங்கல்யன், பாற்கடல் போன்ற கச்சிதமான யதார்த்தக் கதைகளைப் படைக்கும் திறன் கொண்ட இவர், படைப்பின் கட்டற்ற போக்குக்கு வழி விட்டுக் கதையின் கட்டமைப்பைத் தியாகம் செய்யவும் தயங்குவதில்லை.
 
     ஒவ்வொரு படைப்பும் எதைக் கோருகிறதோ அதைத் தருவதே ஒரு படைப்பாளியின் வேலை என்று நம்புபவர் லா.ச.ரா. அதனால்தான் அவரது பல கதைகளின் குவிமையம் சிதறுகிறது. சிறுகதைகளின் ஆதார பலமான குவிமையம் சிதறும்போது அதைப் பின் தொடர்ந்து செல்வது வாசகருக்குச் சிரமமாக இருக்கும். ஆனால், கிளை பிரியும் பாதைகளில் வெளிப்படும் தரிசனங்கள் படைப்பின் ஒவ்வொரு வரியையும் மதிப்பு வாய்ந்ததாக ஆக்குவதையும் உணரலாம். 

     ஒளிக் குவியத்தின் அழகைப் பல படைப்புகளில் தரும் இவர், ஒளிச் சிதறலின் எண்ணற்ற அழகுக் கோலங்களையும் காட்சிப்படுத்துகிறார். இத்தகைய எழுத்தைப் படிக்கும்போது கதையம்சத்தின் எல்லைகளைத் தாண்டி வாசக மனம் பயணிக்கிறது. அந்தப் பயணம் படைப்பாளியின் பயணத்துக்கு இணை யான பயணமாகி, படைப்பின் தரிசனத்தை விரிவு படுத்துகிறது.

   ‘உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் நெருப்பு என்று எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்’ என்று ஒருமுறை எழுதிய லா.ச.ரா.
 ஒவ்வொரு சொல்லுக்கும் முக்கியத்துவம் அளிப்பதை உணர முடியும். 

   ‘வாசனாதி திரவியங்களின் மணத்தைத் தமிழாக்கிக் கொண்டுவந்தவர் லா.ச.ரா.’ என்று சுந்தர ராமசாமி எழுதியிருப்பது இவரது சொல்லழகு தரும் மயக்கத்தைக் கச்சிதமாக உணர்த்துகிறது.

   இவரது படைப்புகள், இந்திய மற்றும் அயல் நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவரது,
'சிந்தாநதி' எனும் வரலாற்று நூல் 1989ல், 'சாகித்ய அகாடமி' விருதைப் பெற்றது.

   சென்னையில் 2007 இல், தான் பிறந்த அதே அக்டோபர் 30ஆம் தேதி, தன் 92ஆவது வயதில் காலமானார். 

    எழுத்தாளர் லா.ச.ரா.பிறந்த மற்றும் காலமான தினம் இன்று!

29 அக்டோபர், 2021

சர்வதேச இணைய நாள்

 

சர்வதேச இணைய நாள் (அக்டோபர் 29)


இணையத்திற்கு வயது 52 ஆகிறது.

1969 ஆம் ஆண்டு இந்த நாளில் தான், கலிபோர்னியா பல்கலைக் கழகத்திற்கும் ஸ்டான்போர்ட் ஆய்வு மையத்திற்கும் இடையே முதல் டேட்டா மெசேஜ், இணையத்தின் முன்னோடியான ஆர்பாநெட் (ARPANET) வழியாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டது. கற்பனையிலும் எண்ண முடியாத வேகத்தில், திட்டமிடாத திசைகளில், இணையத்தின் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் வளர்கிறது. 

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 29-ஆம் தேதி சர்வதேச இணைய தினமாகக் கொண்டாடப்படுகிறது.2005ஆம் ஆண்டு முதல் சர்வதேச இணைய தினம் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப வரலாற்றில் நினைவுகொள்ளும் வகையில் முக்கியமான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.


இன்றியமையாத் தகவல்கள்:

1. 2014 ஆம் ஆண்டில், பன்னாட்டளவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் 280 கோடி. இவர்களில், 210 கோடி (75%) பேர் முதல் 20 நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். மீதம் உள்ள 70 கோடி பேர் மற்ற 178 நாடுகளைச் சேர்ந்தவர்கள். மொத்த இணையப் பயனாளர்களில், இந்த நாடு ஒவ்வொன்றிலும் 1% பேரே உள்ளனர்.

2. மொத்த இணையப் பயனாளர்களில், சீனாவில் 22% பேர் உள்ளனர். 2014ல் இவர்களின் எண்ணிக்கை 64 கோடியே 20 லட்சம். இதனை அடுத்து வரும் மூன்று நாடுகளான, அமெரிக்க, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் மொத்த இணையப் பயனாளர்களைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில், சீனாவில் உள்ளோர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

3. முதல் 20 நாடுகளில், இந்தியாவில், அதன் ஜனத்தொகையுடன் ஒப்பிடுகையில், இணையப் பயனாளர்கள் 19% பேர் மட்டுமே. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வரும் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, மிக வேகமாக வளர்ந்து வருவதும் இங்கே தான்.

4. ஒவ்வொரு நாட்டிலும் வாழும் மக்கள் அடிப்படையில், மிக அதிக இணையப் பயனாளர்களைக் கொண்டிருப்பது, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா ஆகும். இந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகையில், 80% பேர் இணைய இணைப்பு பெற்றுள்ளனர்.இது 1969-ல், முதல் மின்னணு செய்தியை ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு அனுப்பிய நிகழ்வாகும்.

        இன்றைய நவீன  உலகில் இணையம் என்பது மக்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. இணையப் பயன்பாடு என்பது தொழில் சார்ந்ததாகவும், மருத்துவம், பொழுது போக்கு என எல்லாவற்றிலும்  பரவியுள்ளது.இதன் காரணமாக கிராமங்கள் முதல் நகரம் வரை ஒன்றிணைந்ததுடன் இதன் பயன்பாட்டினால் உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் ஒரு விஷயத்தைக் கூட செய்தியாகவோ, வேறு வகையிலோ நம்மால் உடனுக்குடன்  அறிய முடிகின்றது.

      தற்போதைக்கு, மொபைல் வழி இணைய இணைப்புதான், இணைய வர்த்தகச் சந்தையில் மிகத்துடிப்போடு இயங்குகிறது. இணையம் மிகச் சிறந்த நண்பன்.

      நம் ஐயங்களைப் போக்கவும், நம் எண்ணக்கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும், அறிவைப் பெருக்கவும்,பாதுகாப்பாகப் பயன்படுத்துவோம்.

28 அக்டோபர், 2021

உலக பக்கவாத நாள் (அக்டோபர் 29)

 உலக பக்கவாத நாள் (அக்டோபர் 29) 

   


 இன்று உலக பக்கவாத நாள். உலகில் பக்கவாதத்தால் (ஸ்ட்ரோக்)ஆண்டுக்கு ஒன்றரை கோடிப் பேர் பாதிப்படைகிறார்கள். அதில், இந்தியாவில் மட்டுமே ஆறு லட்சம் பேர் என்று எச்சரிக்கை செய்கிறது மருத்துவத்துறை. பக்கவாத நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, ஆண்டுதோறும் அக்டோபர் 29 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

     பக்கவாதமானது திடீரென ஏற்படக் கூடிய ஒரு நோயாகும். அதாவது மூளைக்கான இரத்தக்குழாயில் திடீரென அடைப்பு ஏற்பட்டு, மூளைக்கான இரத்தவோட்டம் தடைபடும் போது இந்நோய் வெளிப்படும். இல்லாவிட்டால் மூளைக்கான இரத்தக்குழாயில் திடீரென ஏற்படும் வெடிப்புக் காரணமாக இந்நோய் வெளிப்படும். இவற்றின் விளைவாக மூளைக்குக் கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் கிடைக்காது போகும். இதனால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இந்நோய் வெளிப்படுகின்றது. இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையில் தான் பக்கவாதம் ஏற்படுகின்றது.

    மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் நரம்புகளுக்கு பத்து நிமிடம் சரியாகச் செல்லவில்லை என்றாலே, உடல் செயலிழக்க ஆரம்பித்துவிடும். இந்நோய் ஏற்படும் முன் 48 மணி நேரத்துக்குள் வழக்கத்திற்கு மாறான சில அறிகுறிகள் திடீரென உடலில் தோன்றி, சில நிமிடங்களில் தானாகவே பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.

    தீவிரத் தலைவலி, பார்வைக் குறைபாடு அல்லது பார்வை மங்குதல், விழுங்க முடியாத நிலைமை, நா குழறுதல், கை, கால் செயலிழந்த உணர்வு, முகம், கை மற்றும் காலின் ஒரு பகுதி விறைப்பு என்பன குறிப்பிடத்தக்க அறிகுறிகளாகும். இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால், தாமதியாது உடனடியாகச் செயற்பட வேண்டும். காலத்தை வீணாக்கக் கூடாது. 

    இந்த அறிகுறிகள் பேராபத்திற்கான முன் அறிவிப்புகளாக அமையும். அதனால் இவ்வறிகுறிகள் தென்பட்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று அறிகுறிகளை விவரமாக எடுத்துக் கூறி மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் பக்கவாதத்தின் பேராபத்தைப் பெரிதும் தவிர்க்கலாம். 

     உயர் ரத்த அழுத்தம், உடம்பில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பது, இரத்தக் குழாயில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றால் முதியவர்களுக்கு இப்பாதிப்பு வருகிறது. அதேபோல, நீரிழிவு நோயாளிகளுக்கும் சில காரணங்களால் பக்கவாதம் ஏற்படுகிறது. 

     1. உங்கள் குடும்பத்தில் யாருக்கவாது பக்கவாதநோய் இருந்திருந்தால், உடனே பக்கவாதம் ஏற்படுத்தக் கூடிய காரணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். 

     2. இரத்தக் கொதிப்பு தான் பக்கவாதம் ஏற்படுவதற்கான முழு முதற் காரணம், உடனே உங்கள் மருத்துவரை அணுகி, உங்களுக்கு இரத்தக் கொதிப்பு உள்ளதா என்பதை உறுதிச் செய்து கொள்ளுங்கள். அதைக் கட்டுப்படுத்தத் தேவையான உணவு வகைகளையும், உடற்பயிற்சிகளையும் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். இரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள தேவையான மருந்துகளை மருத்துவரிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். 

     3. அடுத்தது, இருதய நோய் & முழுவதுமான இருதயம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் இருதயத்தில் ஏற்படும் சில நோயாலும், அடைப்புகளாலும் கூட, பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் மருத்துவரை அணுகி அறுவை சிகிச்சையின் தேவை குறித்தும், இரத்தக் கட்டுகளைக் கரைக்கும் மருந்துகள் குறித்தும் ஆலோசனை செய்து தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள். 

     4. உயர் கொழுப்புச் சத்து, உங்கள் இரத்த நாளங்களில் படிந்து, இரத்த நாளத்தின் விட்டத்தை குறுகச் செய்கிறது. இதனால் மூளைக்கு செல்ல வேண்டிய இரத்த அளவு குறைந்து பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொழுப்பு இல்லாத உணவுகளை உண்ணப் பழகுங்கள், உடற்பயிற்சி செய்து கொள்ளுங்கள். மருத்துவரிடம் கேட்டு, கொழுப்பைக் குறைப்பதற்கான மருந்துகளை உட்கொள்ளுங்கள்.


இனிய வளமான வாழ்விற்கு, மனமார்ந்த வாழ்த்துகள்

சர்வதேச இயங்குரு பட தினம் ( International Animation Day) அக்டோபர் 28

      International Animation Day

    இயங்குரு படங்களின் (Animation) முக்கியத்துவம், அழகை ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி, திரைப்படங்களில் காண்கிறோம். அசையும் படங்களைக் கொண்டு உருவாக்கப்படும் அனிமேஷன் திரைப்படங்கள் தற்போது குழந்தைகளை மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.

     இயங்குரு படம், தொலைக்காட்சி, இசை, ஊடகம், இணையம், விளையாட்டுத் துறைகளில் பயன்படுகிறது. 28.10.1892 அன்று, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சார்லெஸ் எமிலி ரெனால்ட் என்பவர் கிரெவின் மியூசியத்தில் முதன் முதலில் திரையரங்கு ஒன்றில் அனிமேஷன் திரைப்படத்தைத் திரையிட்டதை நினைவு கூறும் விதமாக இந்த சர்வதேச அனிமேஷன் தினம் அமைந்துள்ளது .

     யுனெஸ்கோவின் ஒரு அங்கமாகத் திகழும் சர்வதேச அனிமேஷன் திரைப்படச் சங்கம் , 2002 - ஆம் ஆண்டில் முதன் முதலாக இந்நாளை அறிமுகப்படுத்தியது . இந்நாளன்று உலகின் பல பகுதிகளில், இயங்குரு திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களை ஊக்குவிக்கும் விதமாக , புதிய இயங்குரு குறும்படங்கள், திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன .




27 அக்டோபர், 2021

இந்திய காலாட்படை தினம் இன்று (27.10.1947)

 


    இந்திய இராணுவத்தின் மிகப்பெரிய போர்ப் படையான காலாட்படையின் பங்களிப்பைப் போற்றும் வகையில் அக்டோபர் 27-ஆம் தேதி காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது. 

      1947 ஆம் ஆண்டு இதே நாளில், சீக்கியப் படைப்பிரிவின் 1ஆவது பட்டாலியன் ஸ்ரீநகர் விமானப்படைத் தளத்தில் தரையிறங்கி, விடாமுயற்சியையும், அசாதாரணமான துணிச்சலையும் வெளிப்படுத்தி, பழங்குடியினரின் உதவியுடன் காஷ்மீரைத் தாக்கிய பாகிஸ்தான் இராணுவத்தின் தீய எண்ணங்களை முறியடிக்கும் 'சுவராக' மாறியது. இதனால், ஜம்மு  காஷ்மீர் மாநிலம் காப்பாற்றப்பட்டது.

      நாட்டுக்காக பல்வேறு போர்களில் உயிர் நீத்த காலாட்படை வீரர்களை வணங்கும் வகையில் தேசியப் போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் காலாட்படை தினத்தை முன்னிட்டு இன்று நடைபெறுகிறது. 


24 அக்டோபர், 2021

ஐ.நா சபை தினம்

 ஐக்கிய நாடுகள் அவை (ஐ.நா சபை) தினம்

         ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24ஆம்தேதி ஐக்கிய நாடுகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு 1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம்தேதி தோற்றுவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1948ஆம் ஆண்டு முதல் ஐ.நா. தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

          ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்தத் தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஐ.நா.வில் உலகில் 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

         


2ஆம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அப்போரை நிறுத்தும் நோக்கத்துடன் சில உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி சமாதானத்தை நிலைநாட்டவும், எதிர்காலத்தில் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் உருவாக்கிய அமைப்பே ஐ.நா. சபை ஆகும்.

         1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் நாள் ஐக்கிய நாடுகள் கழகம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் இந்த அமைப்புக்கு அஸ்திவாரமிட்ட பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர பாதுகாப்புக்குரிய உறுப்பு நாடுகளாகும்.

          ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும்.ஐ.நா.வின் தலைமை அலுவலகம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது



மருதுபாண்டியர் நினைவுதினம்

 


மருது சகோதரர்கள் வளரிகுச்சியை எறியும் கலையில் வல்லுநர்கள் என்று கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான பாளையப்போர்களில் மருது சகோதரர்கள் வளரி ஆயுதத்தைப் பயன்படுத்தினர் என்று கூறப்படுகிறது. 12,000 ஆயுதம் தாங்கிய வீர்களுடன் மருது சகோதரர்கள் சிவகங்கையைச்சூழ்ந்தனர் மற்றும் நவாபின் பிரதேசங்களைச் சூறையாடினர். 1789 மார்ச் 10 ஆம் தேதி நவாப் சென்னை கவுன்சிலுக்கு உதவிக்காக முறையிட்டார். ஏப்ரல் 29, 1789 அன்று பிரிட்டிஷ் படைகள் கொல்லங்குடியில் மருது படைகளை தாக்கின. இங்கு நடைப்பெற்ற பெரியசண்டையில் பிரிட்டிஷ்படைகள் மருதுபடைகளினால் தோற்கடிக்கப்பட்டன.

பாஞ்சாலங்குறிச்சியின் மன்னன் வீரபாண்டியகட்டபொம்மனுடன் மருதுசகோதரர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். மருதுசகோதரர்களுடன் கட்டபொம்மன் அடிக்கடி ஆலோசனைகளை நடத்தினார். கயத்தாறில் 1799 அக்டோபர் 17 இல் கட்டபொம்மனுக்கு மரணதண்டனை நிறைவேற்றிய பின்பு சின்னமருது கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரைக்கு சிவகங்கையில் தஞ்சம் அளித்தார். அவர் இந்துக்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஆங்கிலேயருக்கு எதிராகப்போராட தென்னிந்தியத் தீபகற்பத்திலுள்ள மக்களுக்கு ஒரு ஜம்பு தீவுப்பிரகடனத்தை அறிவித்தார். கடைசியில், ஆங்கில மேலாதிக்கத்திலிருந்து தாய்நாட்டை விடுவிக்கப் போராடிய காரணத்திற்காக மருதுபாண்டியர்கள் கைது செய்யப்பட்டனர்.

1801 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள கோட்டையின் சிதறல்கள் மீது போராளிகளான மருதுபாண்டியனுக்கும், அவரது சகோதரன் வெள்ளைமருதுக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece