9 டிசம்பர், 2021

சர்ஜிகல் ஸ்ட்ரைக் மாஸ்டர்- பிபின் ராவத்

 


     “அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் ராணுவம்தான் எல்லை தாண்டிச் சென்று சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தும் என்றிருந்த நிலையை மாற்றி, இந்திய ராணுவத்துக்கும் அப்படி ஒரு முகம் கிடைக்கக் காரணமாக இருந்தவர் பிபின் ராவத்”

     தற்போதைய உத்ததரகாண்ட் மாநிலத்தின் பௌரியில் 1958 ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி இந்து ரஜபுத்திர வம்சத்தில் பிறந்தவர் பிபின் ராவத். அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்திய ராணுவத்தில் பல தலைமுறைகளாக பணியாற்றியுள்ளனர். பிபின் ராவத் தந்தை லெட்சுமண் சிங் ராவத், இந்திய ராணுவத்தில் போர்க்குணத்துக்குப் பெயர் பெற்ற கூர்க்கா ரெஜிமென்டில் லெப்டினன்ட் ஜெனரலாகப் பணிபுரிந்தவர் . அவரைப் போலவே அந்த கூர்க்காப் படையில் போர்க்கலை பயின்றார் மகன்.

     பிபின் ராவத் டேராடூன் மற்றும் சிம்லாவில் பள்ளிப் படிப்பை படித்தார். அப்போதே கடக்வாஸலா தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் டேராடூன் இந்திய ராணுவ அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றவர். வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு பிரிவு உயர் அதிகாரிகளுக்கான கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் அமெரிக்காவின் ஃபோர்ட் லீவன்வொர்ட் நகரில் உள்ள ராணுவ கல்லூரியில் உயர் படிப்பை படித்தார். மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் எம்.பில்., மேலாண்மை மற்றும் கணினிஅறிவியலில் பட்டயப்படிப்பையும் முடித்துள்ளார்.

      இருப்பதிலேயே சீனியர் ஆபீஸரைத்தான் இந்திய ராணுவத்துக்குத் தலைமைத் தளபதியாக நியமிப்பது மரபு. இதனால், போர்க்கள அனுபவம் இல்லாதவர்கள்கூட தலைமைத் தளபதி ஆகியிருக்கிறார்கள். காலம் காலமாக இருந்த இந்த மரபை மாற்றி, சீனியர்கள் இருவரைப் புறக்கணித்துவிட்டு மூன்றாவது இடத்தில் இருந்த பிபின் ராவத்தை கடந்த 2017 ஜனவரியில் ராணுவத் தளபதி ஆக்கினார் பிரதமர். 

    காரணம், சியாச்சின் எல்லையின் நிலவரமும் அவருக்குத் தெரியும். காஷ்மீரில் எங்கெங்கு தீவிரவாதிகள் ஊடுருவல் நிகழ்த்துவார்கள் என்பதையும் அவர் அறிவார். வடகிழக்கு மாநிலங்களில் இயங்கும் தீவிரவாதக் குழுக்களின் ஜாதகமும் அவருக்கு அத்துபடி.அதி உயரத்தில் நிகழும் போர்முறைகளில் அதிக அனுபவம் கொண்டவர். யூரி, ஜம்மு & காஷ்மீர் ஆகிய பகுதிகளில் மேஜராகப் பணியாற்றியுள்ளார். 

     மத்திய அரசு இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் தலைமை தளபதி என்றொரு புதிய பதவியை உருவாக்கியது.  அந்த பதவிக்கு பிபின் ராவத்தை தேர்வு செய்தது. அதன்படி 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி இந்தியாவின் முதலாவது முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத்தை குடியரசுத் தலைவர் நியமித்தார். அதனையடுத்து 2020 ஜனவரி ஒன்றாம் தேதி முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் பொறுப்பேற்றார். இதன் மூலம் அந்த பதவியை அலங்கரித்த முதலாவது ராணுவ ஜெனரல் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. 

 

      ராணுவ உடையில் இல்லாதபோது பிபின் ராவத் ஓர் அமைதியான ஜென்டில்மேன். சீருடை போட்டுவிட்டால் அவர் டெர்ரர். இளம் அதிகாரியாக இருந்தபோதே அப்படித்தான். 1987ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேச எல்லையில் சும்தோராங் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது, சிறிய படையை வைத்துக்கொண்டு அவர்களை எதிர்த்தார் பிபின் ராவத். 1962 சீனப் போருக்குப் பிறகு சீனாவுடன் நிகழ்ந்த மிகப்பெரிய மோதலாக அப்போது அது கருதப்பட்டது. 'யார் இந்த ராவத்?' என்று அப்போதே கேட்க வைத்தார்.

   சர்வதேச அளவில் இந்திய ராணுவத்துக்குக் கௌரவம் தந்த ஒரு விஷயம், ஐ.நா அமைதி காக்கும் படையில் பங்கெடுத்து காங்கோ நாட்டில் அமைதியை நிலைநாட்டியது. அந்த மிஷனுக்கு தலைமைப் பொறுப்பு ஏற்றவர் ராவத். அதுவரை ஐ.நா அமைதி காக்கும் படைக்கு காங்கோ மக்கள் மத்தியில் மரியாதை இல்லை. இவர்களின் வாகனங்களைப் பார்த்தால் கல் எறிந்து தாக்குவார்கள்.

     பிபின் ராவத் அங்கே போனதும் சூழலையே மாற்றினார். 'அமைதி காக்கும் படை என்பது வேடிக்கை பார்க்கத் தேவையில்லை, நம்மிடம் பிறகு ஆயுதங்கள் எதற்கு?' என்ற கேள்வியுடன் களத்தில் இறங்கினார். மக்களைத் தாக்கவோ, தங்கள் படைக்கு ஆள் சேர்க்கவோ கிளர்ச்சியாளர்கள் வந்தபோது அவர்களை ஐ.நா படை விரட்டியது. கிளர்ச்சியாளர்கள் மீது விமானத் தாக்குதலையும் (MONUSCO) நடத்தினார் ராவத். அதன்பின் காங்கோ மக்கள் ஐ.நா படையை மரியாதையாகப் பார்த்தனர். விரைவில் அங்கு அமைதி திரும்பியது. அதற்காக இரண்டு முறை ஃபோர்ஸ் கமாண்டர் கமெண்டேஷன் விருது பெற்றார்

    இந்திய ராணுவத்தில் முப்படைத் தளபதி என்று ஒரு பதவி இதுவரை கிடையாது. ராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி. விமானப்படைத் தளபதி ஆகிய மூவரும் சம அந்தஸ்து உள்ளவர்கள்.அந்த வரலாற்றை மாற்றி, இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியாக 2020 ஜனவரி முதல் தேதி நியமிக்கப்பட்டவர் பிபின் ராவத். எல்லா படையினரும் வித்தியாசங்களைக் கடந்து மதிக்கும் ஒரு வீரராக இருந்தார் என்பதே பிபின் ராவத்தின் பெருமை!

    ஜெனரல் பிபின் ராவத் தனது பணிக்காலத்தில் பரம் விசிஷ்ட் சேவா விருது, உத்தம் யுத் சேவா விருது, அதி விஷிஷ்ட் சேவா விருது, விசிஷ்ட் சேவா விருது, யுத் சேவா விருது, சேனா விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

   

இத்தகு பெருமைவாய்ந்த ஒரு மாமனிதரை நம் நாடு இழந்துள்ளது. அன்னாருக்கு நம் வீர வணக்கங்களைச் சமர்ப்பிப்போம் 😭

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece