9 டிசம்பர், 2021

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்

 

      ஒவ்வோராண்டும் டிசம்பர் 9ஆம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    எந்த ஒரு நாட்டின் வளர்ச்சித் திட்டங்களையும் ஊழல் சீரழிப்பதோடு, அந்நாட்டின் நிலையான ஆட்சிக்கும், உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், பொருளாதாரச் சமநிலைக்கும் அச்சுறுத்தலாக விளங்குகின்ற நிலையை நம்மால் காண முடிகிறது.

   எனவே சர்வதேச அளவில் ஊழலைத் தடுக்க, ஐ.நா., அமைப்பு, 2003 அக்டோபர் 31 இல், ஊழலுக்கு எதிரான போரைத் தீவிரமாக நடத்தி, அதை உலக நாடுகளில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

   அதேபோல் ஒவ்வொரு நாட்டிலும் ஊழல் எந்த அளவில் உள்ளது என்பது குறித்து ஆண்டுதோறும் ஆய்வு செய்யும் 'Transparency International' என்ற நிறுவனம், 2014 இல் வெளியிட்ட அறிக்கையின்படி, ஊழல் மிகுந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. 175 நாடுகள் கொண்ட அந்தப் பட்டியலில் ஊழல் தரவரிசையில் இந்தியா 86 ஆம் இடத்தில் உள்ளது என்பது நாம் அனைவரும் கருத்தில் கொள்ளத்தக்கது.

     நமது வேலையை உடனே முடித்துக்கொள்வதற்காக, அதைச் செய்யும் நபருக்கு, ஒரு தொகையை லஞ்சமாகவோ அல்லது 'அன்பளிப்பு' என்ற பெயரிலோ கொடுத்து,  காரியங்களை முடித்துக்கொள்வதில் தவறில்லை என்ற மனநிலைக்குப் பொதுமக்கள் மாறிவிட்டனர்.

       இத்தகைய மனப்போக்கானது, தங்களது கடமையைச் செய்வதற்கு பெறப்படும் லஞ்சத்தை, பொதுமக்கள் அங்கீகரித்து விட்டனர் என்ற உணர்வை லஞ்சம் வாங்குபவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

     ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் லஞ்சம் கொடுப்பவராகவோ அல்லது லஞ்சம் பெறுபவராகவோ இருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய நிலை. விதிமுறைகளுக்குட்பட்ட காரியங்களை செய்து கொடுக்க, லஞ்சம் கொடுப்பவர்களுக்கு உடனடியாக செய்து கொடுப்பதும், கொடுக்காதவர்களுக்கு ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி இழுத்தடிப்பதும் இன்று வாடிக்கையாகிவிட்டது.

   இன்றைய சூழலில், ஒரு நியாயமான, சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்ட காரியத்தைச் செய்து கொள்வதற்கு லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டை ஒருவர் மேற்கொண்டால், அவர் சமுதாயத்தில் சந்திக்க வேண்டிய இடையூறுகளும், அதன் விளைவாக ஏற்படும் மனவேதனையும் அளவிட முடியாதது.

  தனது பணியில், லஞ்சம் வாங்கமாட்டேன் என்று கடமையாற்றும் ப்ல அரசு அலுவலர்களும் உள்ளனர். அவர்களது நேர்மையாகச் செயல்பாட்டால், உடன் பணியாற்றும் ஊழியர்கள், உயர் அதிகாரிகளின் விரோதம், அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

  அதுபோன்ற அலுவலர்களின் வாழ்க்கை நிலையை, அரசுப் பணியேற்கும் இளைய தலைமுறையினருக்கு உதாரணமாக காட்டப்படும் சூழலும் இன்று நிலவி வருவதைக் காணமுடிகிறது.நேர்மையான செயல்பாடு என்பது அரசுப் பணியில் இருப்பவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறையாகும்.

  லஞ்சம் கேட்பவரிடம், 'லஞ்சம் ஏன் கொடுக்க வேண்டும் ?' எனக் கேட்க வேண்டும். ஊழலுக்கு எதிரான செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும். லஞ்சப் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு, மாநில லஞ்சஒழிப்புத்துறை, மத்திய புலனாய்வுத் துறைக்குரியது என எண்ணி, தங்களது பங்களிப்பைப் புறக்கணிக்கக்கூடாது.

ஆசிரியர்களின் பொறுப்பு:

   ஊழலுக்கு எதிரான உணர்வை, இளைய தலைமுறையினருக்கு ஊட்ட வேண்டிய பொறுப்பில் பெரும்பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்களே.

    தேர்வுக்குரிய பாடங்களை மட்டும் கற்றுக்கொடுக்காமல், ஊழலின் கறைபடியாமல் களங்கமற்ற மனிதர்களாக வாழ்வில் திகழும் வழிமுறைகளையும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். ஊழலுக்கு அடிப்பணியாமல் பணியாற்றுபவர்களை ஊக்கப்படுத்தவும் மாணவர்களுக்குக் கற்றுத்தரவேண்டும்.

     “ஊழல் எதிர்ப்புணர்வை வளர்ப்பதில் வெளியில் இருந்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், தமக்குத்தாமே விதித்துக்கொண்டவையாக இருப்பின், அது நிச்சயமாக நல்ல பலனை தருகின்றன” என்ற காந்திஜியின் வாக்கு, இன்றைய எதார்த்த நிலையை உணர்த்துகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...