இரண்டாம் உலகபோரில் உலகம் முழுவதும் படுகொலைகள், சொத்து இழப்பு, பேரழிவுகள் ஏற்பட்டன. அதற்குப் பிறகு 1945ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இதில் 53 நாடுகள் அங்கம் பெற்றன.
முதல் பணியாக, சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்க வேண்டும் என்று இந்தக் குழு முடிவு செய்தது. இதற்காக அமெரிக்க அதிபரின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, 30 பிரிவுகளின் கீழ், மனித உரிமைகளை அடையாளம் கண்டு, உலக மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பித்தது.
மீண்டும் மனித உரிமை மீறல்கள் நடக்காமல் தடுக்க, உலக நாடுகள் இணைந்து 1948 ஆம் ஆண்டு, சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்கின.இதை, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்று கொண்ட டிசம்பர் 10 அன்றுஉலகம் முழுவதும் மனித உரிமைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
மனித உரிமைகள் என்றால் என்ன?
மனித உரிமைகள் என்றால் என்ன என்ற கேள்விக்கு பன்னாட்டு மனித உரிமைகள் சாசனத்தின் பதில் -
* சம உரிமையும், சுதந்திரமும்,ஒவ்வொருவரும் பிறக்கும் போதே, உடன் பிறக்கின்றன.
* யார் ஒருவரையும் இனம், நிறம், மொழி, மதம், பிறப்பால் பாகுபாடு செய்யக்கூடாது.
* யாரும், யாருக்கும் அடிமை இல்லை. யாரும் சித்ரவதைக்கு உட்படலாகாது.
* சட்டத்தின் முன் அனைவரும் சமம். நியாயமின்றி யாரையும் தடுத்து வைக்கக்கூடாது.
* நீதிமன்றத்தை அணுக, குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என கருதப்பட, அந்தரங்கங்களைப் பாதுகாக்க, சட்டத்திற்குட்பட்டு அனைத்து இடங்களுக்கும் செல்ல, சித்ரவதையிலிருந்து தப்பிக்க, புகலிடம் கேட்க, தேசிய அடையாளம் கேட்க, குடும்பம் நடத்த, சிந்தனை, சமய, கருத்து, மக்களாட்சி சேர்ந்திருக்க சமூக பாதுகாப்பு, விளையாட, ஓய்வெடுக்க, கல்விக்கு, உணவிற்குள்ள உரிமைகள் மனித உரிமைகளாகும்.
இந்தியாவில் மனித உரிமைப்பாதுகாப்பு
இந்திய அரசு 1993 ஆம் ஆண்டு, மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தில், மனித உரிமைகள் என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட அல்லது நீதிமன்றத்தால் அமல்படுத்தக்கூடிய பன்னாட்டு உடன்படிக்கை உள்ளிட்ட, வாழ்வுரிமை, தனி மனித மாண்பு, சமத்துவம் தொடர்பான உரிமைகளாகும் என குறிப்பிட்டுள்ளது.
மனித உரிமை மீறல்களைத் தடுக்க தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம், மனித உரிமை நீதிமன்றங்கள் ஏற்படுத்தப் பட்டன.
எவ்வாறு புகாரளிப்பது?
மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், அதைப் பறிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவரோ அல்லது பிறரோ ஆணையருக்குப் புகாரளிக்கலாம்.
மனித உரிமை மீறல், யாரால், எப்போது, யாருக்கு எதிராக எவ்வாறு நடந்தது என்றும், அதற்கு என்ன தீர்வு வேண்டும் என்றும் குறிப்பிட்டு, புகாரை நிரூப்பிப்பதற்கான ஆதாரங்களைக் குறிப்பிட்டு, வேறு நீதிமன்றத்தில் புகார் இருந்தால் அதையும் குறிப்பிட்டு அனுப்பலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மனித உரிமை நீதிமன்றமாகச் செயல்படுகிறது. மனித உரிமைகள் மீறலால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடர விரும்பினால், முதலில் சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தனிநபர் புகாராக, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளுக்கு எதிராகப் பதிவு செய்ய வேண்டும். புகாரைப் பரிசீலனை செய்து, சாட்சிகளை விசாரணை செய்து மனித உரிமை மீறல் நடந்தது என்று கருதினால் மனித உரிமைகள் நீதிமன்றத்திற்கு புகார் அனுப்பப்படும்.
மனித உரிமை நீதிமன்றத்தின் விசாரணைகளில், இரு தரப்பினரும் நேரடியாக ஆஜராக வேண்டும். வர முடியாத நாள்களில் காரணத்தை விளக்கி அனுமதி பெற வேண்டும். தகுந்த காரணமின்றி ஆஜராகாத அரசு அலுவலர், பிடிகட்டளை மூலம் கைது செய்யப்பட்டு, ஆஜர்படுத்த மனித உரிமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம்.
நம்மைச் சுற்றி நடக்கும், மனித உரிமை மீறல்களைத் தடுத்து, மக்களைப் பாதுகாக்க உரிய சட்டங்களும், பாதுகாப்பு நடைமுறைகளும் நம்மிடம் உள்ளன. அவற்றை முறையாக, அதிகமானோர் பயன்படுத்தினால்தான் நன்மைகள் கிடைக்கும். மக்களின் மனித உரிமைகள் அனைவராலும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக