உத்தமர் காந்தியடிகளால் “எனது மனசாட்சியின் பாதுகாவலர்” என்றும், அரசியல் சாணக்கியர், ராஜதந்திரி என்றும் அழைக்கப்பட்டவர். பேரறிஞர் அண்ணா அவர்களால் மூதறிஞர் ராஜாஜி என்று பெருமிதத்தோடும், அழைக்கப்பட்டவர் இராஜகோபாலாச்சாரியார்.
சி.ராஜகோபாலாச்சாரி என்பது ராஜாஜியின் இயற்பெயர். விடுதலைப் போராட்ட வீரர், வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என, பன்முகம் கொண்டவர். 1900ம் ஆண்டிலேயே, ஒரு வழக்குக்கு கட்டணமாக, 1000 ரூபாய் வாங்கிய வெற்றிகரமான வழக்கறிஞர். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட பிறகு, விடுதலைப் போராட்டத்தில் இணைந்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடினார். 1930 இல் வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாக்கிரகம் நடத்தி, சிறை சென்றார்.
1937 இல் அப்போதைய மதராஸ் மாகாண பிரதான மந்திரியாகப் பொறுப்பேற்று, மாகாணம் முழுவதும், முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார்.
1947 - 1948 இல் மேற்கு வங்க ஆளுநராகவும், 1948 - 1950 வரை இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்தார்.
எவ்வளவு பெரிய கருத்தையும் குட்டிக் குட்டிக் கதைகளாக விளக்குவதில் மூதறிஞர் ராஜாஜி மிகவும் வல்லமை பெற்றவர். மகாபாரதக் கதையை "வியாசர் விருந்து' என்ற பெயரிலும், இராமாயணக் கதையை "சக்கரவர்த்தித் திருமகன்' என்ற பெயரிலும் இனிய தமிழில் எழுதினார். "வியாசர் விருந்து' நூலுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் சாகித்ய அகாதெமி, அவருக்கு விருது தந்து சிறப்பித்தது. திருமூலர் தவமொழி, முதல் மூவர் கைவிளக்கு ஆகிய நூல்களும் அவரது ஆன்மிகச் சிந்தனையின் அரிய படைப்புகளாக முகிழ்ந்தன.
"எல்லாப் பொருளும் இதன்பால் உள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்'- என்ற பெருமைக்குரிய திருக்குறளை, ஆங்கிலத்தில் அவர் மொழிபெயர்த்து வழங்கினார். அதன் மூலம் அவரது ஆங்கிலப் புலமையையும், மொழிபெயர்ப்புத் திறனையும் அறிஞர்கள் உணர்ந்து போற்றினர். குறிப்பாக, ஜி.யு.போப் அந்நூலைப் படித்துப் பாராட்டியது, ராஜாஜியின் மொழியாக்கத் திறனுக்குக் கிடைத்த நற்சான்று. சிந்தனையைத் தூண்டும் சிறுகதைகளை எழுதுவதிலும் ராஜாஜி தமக்கென்று தனி பாணியைப் பின்பற்றினார்.
"குடி குடியைக் கெடுக்கும்' என்னும் கருத்தை மையமாக வைத்து அவரால் புனையப்பட்டதே "திக்கற்ற பார்வதி' எனும் படைப்பாகும். பின்னாளில் அது வெண் திரையில் காட்சிக் காவியமாகத் திரைப்படமாயிற்று.கல்வி அறிவும், கலை பயில் தெளிவும் கொண்ட ராஜாஜி அவ்வப்போது கட்டுரை ஓவியங்களும் தீட்டினார். கல்கி, இளம் இந்தியா, சுயராஜ்யா ஆகிய ஏடுகளில் அவர் எழுதிய கட்டுரைகள் பலரால் பாராட்டப்பட்டவை.
அவரது இலக்கிய ஈடுபாடு ஓர் எல்லைக்கு உட்பட்டதல்ல. பஜ கோவிந்தம், உபநிஷதப் பலகணி, வேதாந்த தீபம், ஆத்ம சிந்தனை, ஸோக்ரதர், துறவி லாதென்சு ஆகியவை ஒப்புவமை இல்லாதவை. சிசுபாலனம், அபேத வாதம், கண்ணன் காட்டிய வழி, அரேபியர் உபதேச மொழிகள், குடி கெடுக்கும் கள், தாவரங்களின் இல்லறம், தமிழில் வருமா? என இப்படி அவர் எழுதிய நூல்கள் அனைத்தும் இலக்கிய வளர்ச்சிக்கு உரம் சேர்ப்பதாக அமைந்தன.
ஓர் எழுத்தாளர் எவ்வளவு நூல்கள் எழுதியிருந்தாலும் மன நிறைவைத் தந்த நூல் சிலவாகவே இருக்க முடியும். அந்த வகையில் இராமாயணத்தை "சக்கரவர்த்தித் திருமக'னாக அவர் எழுதிய அனுபவத்தை இப்படிக் கூறுகிறார்: "என்னுடைய அரசியல் பணிகளைக் காட்டிலும், இலக்கியப் பணியையே நான் விலைமதிக்க இயலாதது என்று கருதுகிறேன்.
இராமாயணம் எழுதும் பணி எனக்கு முடிந்துவிட்டது. நான் மகிழ்ச்சியான ஒரு கனவிலிருந்து விழித்துக் கொண்டவனைப் போல் இருக்கிறேன். இராமன் அயோத்தியை விட்டுச் சென்றபோது, அவன் வருந்தவில்லை. ஆனால், சீதையை இழந்தபோதுதான் அவன் வருத்தம் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டான். அதே நிலையில்தான் நானும் இருக்கிறேன்.
உயர்ந்த பதவியிலிருந்து விலக நேர்ந்தபொழுது நான் வருந்தவில்லை. அடுத்தாற்போல் என்ன செய்வது என்று திகைக்கவில்லை. ஆனால், அயோத்தி இராமனின் வரலாற்றை எழுதி முடித்த நிலையில் நான் ஒரு வெறுமையை, சூன்யத்தை உணர்கிறேன். ஆலயம் ஒன்றிலிருந்து ஆண்டவன் அகன்றுவிட்டதைப் போல் ஆகிவிட்டது என் மனம்!'' என்கிறார். இதன் மூலம் தொய்வின்றி எழுத வேண்டும் என்னும் அவரது ஆர்வம் வெளிப்பட்டது.
“சேலத்து மாம்பழம்” என்றும் ராஜாஜி என்று அன்புடன் அழைக்கப்பட்ட சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சரியார் 1972-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி 94-ம் வயதில் காலமானார்.
மூதறிஞர் இராஜாஜி நல்லடக்கம் செய்யும்பொழுது உடல் இயலாத நிலையிலும், தந்தை பெரியார் சக்கர நாற்காலியில் அமர்ந்து, குலுங்கி குலுங்கி அழுததே, நட்பிலக்கணத்திற்கு நற்சாட்சியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக