பெண்கள் செய்ய வேண்டிய தானங்கள்
உலகில் இருக்கும் அனைத்து மதங்களும் தானங்கள் செய்வதை மிகவும் போற்றுகின்றன. தானங்களில் பல வகைகள் இருக்கின்றன. பெண்கள் தான் ஒரு குடும்பத்தின் அஸ்திவாரமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்கள் சில வகை தானங்கள் செய்வதால் அவர்களுடைய வாழ்வும். அவர்களின் சந்ததியினரின் வாழ்வு சிறப்படையும் என நமது சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. அந்த தானங்கள் என்னென்ன என்பதை இங்கு நாம் காணலாம்.நமது வீட்டிற்கு நமக்கு வேண்டப்பட்டவர்கள் அல்லது எதிராளிகள் என்று யார் வந்தாலும் முதலில் அவர்கள் பருக தண்ணீர் அல்லது மோர் போன்றவற்றை கொடுக்க வேண்டும். இப்படி செய்வதால் ஒரு வேளை நம் வீட்டிற்கு வந்திருக்கும் நபர்கள் எத்தகைய கெட்ட எண்ணத்தோடு வந்திருந்தாலும், தண்ணீர் அல்லது மோர் பருகுவதால் அவர்களின் வயிறு மற்றும் மனம் குளிர்ந்து, அவர்களின் தீய எண்ணங்கள் மறைகின்றன. எனவே தான் வீட்டுக்கு வருபவர்களுக்கு தண்ணீர், மோர் போன்றவற்றை முதலில் பருகக் கொடுக்க வேண்டும் என்கின்ற விதியை நமது முன்னோர்கள் நமக்கு வழியுறுத்தி கூறியிருக்கின்றனர். நமது வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும் போது, அவர்கள் நமக்கு ஆகாதவர்களாக இருக்கும் பட்சத்திலும் அவர்களுக்கு மஞ்சள் மற்றும் குங்குமத்தை தர வேண்டும் என கூறப்படுகிறது. நாம் கொடுக்கின்ற குங்குமத்தை வீட்டுக்கு வந்திருக்கும் பெண்கள் நெற்றியில் இட்டுக் கொள்ளும் போது, அவர்களை அறியாமலேயே அவர்களின் மனதில் நல்லெண்ணங்கள் உருவாகும். இதனால் நம் வீட்டில் நேர்மறையான அதிர்வு ஏற்படும். இது அஷ்டலட்சுமிகள் நம் வீட்டிற்குள் வாசம் செய்யும் நிலையை உண்டாக்கும்.திருமணமான சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் கிழங்கின் துண்டை, மஞ்சள் கயிற்றில் கட்டி தானம் வழங்குவது மிகவும் சிறந்தது. இந்த தானத்தை கோவிலில் வைத்து செய்வது மிகவும் விசேஷமாகும். மேலும் இந்த தானத்தை செய்வதற்கு நல்ல நாள், நட்சத்திரம், நேரம் எதையும் பார்க்க வேண்டியதில்லை. எந்த கிழமை வேண்டுமானாலும், எந்த தினத்திலும் இந்த தானத்தை செய்யலாம். உங்களுக்கு வசதி இருக்கும் பட்சத்தில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு மாங்கல்ய தானம் செய்யலாம். மஞ்சள் கயிறு மற்றும் மாங்கல்ய தானம் செய்யும் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும். எனவே மிகச் சிறப்பான இந்த தானத்தை குறைந்த பட்சம் வாழ்வில் ஒருமுறையாவது செய்வது நல்லது.ஆடை என்பது மனிதர்களுக்கு இன்றியமையாததாகும். அதிலும் பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு விடயமாக ஆடை இருக்கிறது. எனவே வசதி குறைவான நிலையில் இருக்கும் ஏழைப் பெண்களுக்கு வஸ்திரதானம் செய்யும் பெண்களின் வாழ்வில் மிகச் சிறந்த நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சங்கள் பெருகும். ஏழைப் பெண்கள் மட்டுமல்லாமல் ஏழ்மை நிலையில் இருக்கும் ஆண்களுக்கும் வஸ்திர தானம் செய்யலாம். வஸ்திர தானம் செய்யும் போது ஏற்கனவே உபயோகித்த பழைய ஆடைகளை தானமாக தராமல், புத்தாடைகளை வஸ்திரதானம் செய்வதே ஏற்புடையதாகும்.அடுத்ததாக அனைத்து தானங்களையும் விட சிறந்த தானமாக சொல்லப்படுவதும், முக்கியமானதாக கருதப்படுவதுமாக இருக்கிறது அன்னதானம். பெண்கள் சக்தியின் வடிவமாக கருதப்படுகிறார்கள். எனவே பசியோடு வரும் எந்த ஒரு மனிதருக்கும் இல்லத்தில் வசிக்கும் பெண்கள் நிச்சயமாக அன்னதானம் இட வேண்டும் என முன்னோர்கள் கூறுகின்றனர். கடும் பசியில் வாடி வீட்டைத் தேடி வரும் நபர்களுக்கு பெண்கள் அன்னதானம் செய்யாமல் போவதால், அவர்களுக்கு சாபம் ஏற்படும் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. பிறருக்கு ஒரு வேளை கூட அன்னதானம் செய்ய இயலாத கடுமையான பொருளாதார கஷ்டத்தில் வாழும் நபர்கள் குறைந்தபட்சம் ஒரு பிஸ்கட் பொட்டலத்தை வாங்கி, உங்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் தெரு நாய்களுக்கு அந்த பிஸ்கட்டுகளை உணவாக தருவதும் அன்னதானம் செய்ததற்கு நிகரான பலனைத் தரும்.குழந்தையை பெற்றெடுக்க போகும் ஏழை பெண்களின் சீமந்தத்திற்கு உதவுவது சிறந்த புண்ணியத்தை உங்களுக்கு கொடுக்கும். வசதி குறைந்த ஏழைப் பெண்ணின் சீமந்த செலவை ஏற்றுக் கொள்வது அல்லது குறைந்தபட்சம் ஒரு நூறு ரூபாயாவது அப்பெண்ணிற்கு தருவதும் கூட மிகுந்த பலன்களை உங்களுக்கு தரும். இது போல ஏழ்மை நிலையில் இருக்கும் பெண்ணின் பிரசவத்திற்கு பிறகான பொருளாதார உதவிகளை செய்வது, உங்கள் மகள் அல்லது மருமகளுக்கு தடையில்லா புத்திர பாக்கியமும், ஆரோக்கியமான, அழகான குழந்தை பிறக்கின்ற அமைப்பு ஏற்படும்.தினமும் காலையில் வீட்டுக்கு வெளியே பெண்கள் அரிசி மாவு கொண்டு கோலம் போடுவது சிறந்தது. அந்த அரிசி மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள், ஈக்கள் போன்றவை சாப்பிட்டு பசியாறுகின்றன. இதனால் அந்த உயிர்களின் ஆசிகளும் நமக்கு கிடைக்கிறது. எனவே எப்போது கோலமிடும் போதும் அரிசி மாவு கோலம் போடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதே போல் நமது வீட்டில் இருக்கும் தானியங்களை பறவைகளுக்கு உணவாக வைக்க வேண்டும். அதனுடன் ஒரு சிறு பாத்திரத்தில் அப்பறவைகள் அருந்துவதற்கு நீரையும் வைப்பது நல்லது. கோடைகாலங்களில் பறவைகள் பல இடங்களில் நீர் தேடி அலைகின்ற அவல நிலை ஏற்படுகிறது. அப்போது நம் வீட்டில் அப்பறவைகளின் பசியாற உணவும், தாகம் தீர்க்க நீரும் இருப்பதைக் கண்டு அவை மகிழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கின்றன.மேலே சொல்லப்பட்டிருக்கும் தானங்கள் அனைத்துமே நாம் எல்லோரும் எளிதில் செய்யக்கூடிய தான வகைகளாகவே இருக்கின்றன. இந்த தானங்கள் எளிமையானதாக தோன்றினாலும், இவற்றை செய்வதால் நமக்கும் நமது சந்ததியினருக்கும் ஏற்படும் பலன்கள் எண்ணிலடங்காதவை. எனவே இந்த தானங்களை அனைவரும் வாழ்வில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது செய்வது மிகவும் சிறப்பானதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக