24 அக்டோபர், 2021

ஐ.நா சபை தினம்

 ஐக்கிய நாடுகள் அவை (ஐ.நா சபை) தினம்

         ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24ஆம்தேதி ஐக்கிய நாடுகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு 1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம்தேதி தோற்றுவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1948ஆம் ஆண்டு முதல் ஐ.நா. தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

          ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்தத் தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஐ.நா.வில் உலகில் 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

         


2ஆம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அப்போரை நிறுத்தும் நோக்கத்துடன் சில உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி சமாதானத்தை நிலைநாட்டவும், எதிர்காலத்தில் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் உருவாக்கிய அமைப்பே ஐ.நா. சபை ஆகும்.

         1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் நாள் ஐக்கிய நாடுகள் கழகம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் இந்த அமைப்புக்கு அஸ்திவாரமிட்ட பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர பாதுகாப்புக்குரிய உறுப்பு நாடுகளாகும்.

          ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும்.ஐ.நா.வின் தலைமை அலுவலகம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது



மருதுபாண்டியர் நினைவுதினம்

 


மருது சகோதரர்கள் வளரிகுச்சியை எறியும் கலையில் வல்லுநர்கள் என்று கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான பாளையப்போர்களில் மருது சகோதரர்கள் வளரி ஆயுதத்தைப் பயன்படுத்தினர் என்று கூறப்படுகிறது. 12,000 ஆயுதம் தாங்கிய வீர்களுடன் மருது சகோதரர்கள் சிவகங்கையைச்சூழ்ந்தனர் மற்றும் நவாபின் பிரதேசங்களைச் சூறையாடினர். 1789 மார்ச் 10 ஆம் தேதி நவாப் சென்னை கவுன்சிலுக்கு உதவிக்காக முறையிட்டார். ஏப்ரல் 29, 1789 அன்று பிரிட்டிஷ் படைகள் கொல்லங்குடியில் மருது படைகளை தாக்கின. இங்கு நடைப்பெற்ற பெரியசண்டையில் பிரிட்டிஷ்படைகள் மருதுபடைகளினால் தோற்கடிக்கப்பட்டன.

பாஞ்சாலங்குறிச்சியின் மன்னன் வீரபாண்டியகட்டபொம்மனுடன் மருதுசகோதரர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். மருதுசகோதரர்களுடன் கட்டபொம்மன் அடிக்கடி ஆலோசனைகளை நடத்தினார். கயத்தாறில் 1799 அக்டோபர் 17 இல் கட்டபொம்மனுக்கு மரணதண்டனை நிறைவேற்றிய பின்பு சின்னமருது கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரைக்கு சிவகங்கையில் தஞ்சம் அளித்தார். அவர் இந்துக்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஆங்கிலேயருக்கு எதிராகப்போராட தென்னிந்தியத் தீபகற்பத்திலுள்ள மக்களுக்கு ஒரு ஜம்பு தீவுப்பிரகடனத்தை அறிவித்தார். கடைசியில், ஆங்கில மேலாதிக்கத்திலிருந்து தாய்நாட்டை விடுவிக்கப் போராடிய காரணத்திற்காக மருதுபாண்டியர்கள் கைது செய்யப்பட்டனர்.

1801 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள கோட்டையின் சிதறல்கள் மீது போராளிகளான மருதுபாண்டியனுக்கும், அவரது சகோதரன் வெள்ளைமருதுக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

20 அக்டோபர், 2021

      எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நினைவு நாள் 




     எங்கோ நான்கு சுவர்களுக்குள் நாற்காலியில் அமர்ந்து எழுதுவது மட்டுமே இலக்கியமல்ல என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தவர், எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். 


    1925-ம் ஆண்டு முசிறியில் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடிக்கும் முன்பே 15 வயதில் ராஜத்துக்கு, அந்தக் காலத்தைய வழக்கப்படி திருமணம். கணவர் முத்துகிருஷ்ணன் மின்துறைப் பொறியாளர் என்பதால், தொடர்ச்சியாகத் தமிழகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் சூழல் அமைய, மனைவி ராஜமும் மகிழ்வுடன் பயணமானார். புதிய ஊர்களில், மனைவியின் தனிமையை விரட்டும் வகையில் எழுத ஊக்குவித்தார் முத்துகிருஷ்ணன். 


      சார்லஸ் டிக்கென்ஸ், ஜேன் ஆஸ்டென் என ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து உள்வாங்கத் தொடங்கினார். திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் கழித்து, 1944-ம் ஆண்டு ராஜம் கிருஷ்ணனின் முதல் ஆங்கிலச் சிறுகதை இந்திய சிவிக் கார்ப்ஸ் நூலில் பதிப்பிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 20.


       முறையான பள்ளிக்கல்வியற்ற, கல்லூரியில் காலடித்தடம்கூடப் பதிக்காத ராஜம், உலகமே போற்றும் எழுத்தாளராக வளர, அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும்தான் காரணம்.


     200 சிறுகதைகள், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள், 20 வானொலி நாடகங்கள், 20-க்கும் மேற்பட்ட புதினங்கள் எழுதி தமிழ் மொழியின் போற்றத் தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் ராஜம்.


     1946-ம் ஆண்டு முதல் ராஜம் கிருஷ்ணனின் தமிழ் சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகத் தொடங்கின. அவரது கதைமாந்தர்கள் அன்றாடம் நாம் காண்பவர்களாக, கடந்து செல்பவர்களாகவே இருந்தார்கள். பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தி, அவர்களது போராட்டங்களைச் சொல்பவையாக இருப்பவை ராஜத்தின் படைப்புகள்.


      முதன்முறையாக உயிருடன் இருந்தபோதே அரசுடைமை ஆக்கப்பட்டது இவரது நூல்களே. சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் என்ற பெருமையும் பெற்றார்.


     'நியூயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூன், சோவியத்லாண்ட் நேரு உட்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். கடந்த 2014 அக்., 20ம் தேதி தன் 89 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.




19 அக்டோபர், 2021

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம் (அக்டோபர் 19)

நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் இன்று



நாமக்கல் மாவட்டம் 1888 மாவட்டம் மோகனூரில் அக்டோபர் 19 அன்று பிறந்தவர், வெ.ராமலிங்கம் பிள்ளை. 

‘எட்டாவது குழந்தை கட்டி அரசாளும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, கவிஞர் தமிழ் நாட்டில் கவிதை உலகில் தனிப்பெரும் கவிஞராக விளங்கினார். இதற்குக் காரணம் அவர் இளமைப் பருவத்தில் பெற்ற கல்வியாகும். 

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அதற்கு நாமக்கல் கவிஞர் சிறந்த சான்றாவார்.

 நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தராகவும், அதன் பின், தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார். காங்கிரசில் இணைந்து, திருச்சி மாவட்டச் செயலர், கரூர் மற்றும் நாமக்கல் வட்டாரத் தலைவராகச் செயலாற்றினார்.

காந்தியப் பாதையில், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். 1932 இல் நடந்த உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று, ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தார்.

தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞரானார். சாகித்ய அகாதமியில், தமிழ் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தார். கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை என, பல தளங்களிலும் ஈடுபட்டுள்ளார். இவர் மிகச் சிறந்த ஓவியரும் கூட.

இவர் எழுதிய, மலைக்கள்ளன் என்ற புதினம்,எம்.ஜி.ஆர்.,நடித்து, அதே பெயரிலேயே திரைப்படமாக வெளிவந்தது. தமிழகச் சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

”கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”, 

“தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு”, 

”தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா”, 

”கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” 


போன்ற பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் !

 'பத்ம பூஷண்' உட்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். 1972 ஆகஸ்ட் 24 அன்று, தன் 83வது வயதில் காலமானார்.


21 மே, 2019

அயோத்திதாசர்

அயோத்திதாசர்
சமூகப் போராளி, தமிழறிஞர்

தென்னிந்தியாவின் முதல் ஜாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர், சித்த மருத்துவருமான அயோத்தி தாசர் (C.Iyothee Thass) பிறந்த தினம் இன்று (மே 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பெரும் கல்விப் பின்னணி உள்ள குடும்பத்தில் பிறந்தார் (1845). இவருடைய தாத்தா, வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன் குடும்ப சேமிப்பு ஏடுகளிலிருந்து மீட்டெடுத்து தமிழ் இலக்கியச் சுவடிகளைச் சேகரிப்பதில் தன் வாழ்நாளைச் செலவிட்ட எல்லிஸ் துரையிடம் வழங்கியவர். அதன் பின்னர்தான் திருக்குறள் அச்சு வடிவுக்கு வந்தது.

* தந்தையின் பணி காரணமாகக் குடும்பம் நீலகிரிக்குக் குடியேறியது. இவரது இயற்பெயர் காத்தவராயன். தந்தையிடமே ஆரம்பக்கல்வி கற்றார். பின்னர் காசிமேடு சதாவதானி வைரக்கண் வேலாயுதம் புலவர், வல்லக்காளத்தி வீ.அயோத்தி தாசர் பண்டிதர் ஆகியோரிடமும் கல்வி கற்றார். மேலும் சித்த மருத்துவம், தமிழ், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்த சமய தத்துவங்களையும் கற்றார்.

* தன் குரு மீது கொண்ட பற்றால் தனது பெயரை அயோத்தி தாசர் என மாற்றிக்கொண்டார். தான் சார்ந்த மக்களின் வாழ்க்கை, சமூகத்தில் அவர்களது நிலை, தீண்டாமைக் கொடுமை, கல்வியறிவின்மை இவற்றைப் பார்த்து வளர்ந்த இவர், அவர்களுக்காகப் போராடுவதையே தன் குறிக்கோளாகக் கொண்டார்.

* 1870-ல் நீலகிரியில் அத்வைதானந்த சபையை நிறுவினார். இதன் மூலம் தேயிலைத் தோட்டப் பணியாளர்கள், மலை ஜாதி பழங்குடியின மக்களை ஒன்றிணைத்து ஜாதி பேத உணர்வை ஒழிக்கப் பாடுபட்டார்.

* அனைவரும் கல்வி கற்கும் வாய்ப்புகளுக்கு உள்ள சமூகத் தடைகளை நீக்க வேண்டும், கிராம ஒன்றியங்கள், நகராட்சிகள் ஆகியவற்றில் அனைத்துப் பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும், பொது நீர்நிலைகளைப் பயன்படுத்துவதற்கான தடை நீக்கப்பட வேண்டும் ஆகியவற்றுக்காகப் போராடி வந்தார்.

* ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சென்னையில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட முக்கிய காரணமாக இருந்தார். ஏழைகளுக்கு இலவசக் கல்வி, மதிய உணவு வழங்குவதில் முன்னோடியாக இருந்தார். 1885-ல் ‘திராவிட பாண்டியன்’ என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

* 1891-ல் இரட்டைமலை நிவாசனுடன் இணைந்து பஞ்சமர் மகாஜன சபையைத் தோற்றுவித்தார். 1898-ல் ஏராளமான தீண்டத்தகாத மக்களுடன் இணைந்து புத்த மதத்தைத் தழுவினார்.

* 1907-ல் ‘ஒரு பைசா தமிழன்’ என்ற செய்தி வார இதழைத் தொடங்கினார். இதில் அரசியல், சமூகம், ஜாதி, மதம், இலக்கியம் குறித்து கட்டுரைகளை எழுதினார். பின்னர் இது ‘தமிழன்’ என்ற பெயரில் வெளிவரத் தொடங்கியது.

* ‘புத்தரது ஆதி வேதம்’, ‘இந்திரர் வேத சரித்திரம்’, ‘அம்பிகையம்மன் சரித்திரம்’, ‘அரிச்சந்திரன் பொய்கள்’, ‘கபாலீசன் சரித்திர ஆராய்ச்சி’, ‘சாக்கிய முனி வரலாறு’, ‘திருக்குறள் கடவுள் வாழ்த்து’, ‘புத்த மார்க்க வினா விடை’ உள்ளிட்ட பல நூல்கள், 30 தொடர் கட்டுரைகள், 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை, ஏராளமான அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில், பகுத்தறிவுக் கட்டுரைகள் என நூற்றுக்கணக்கில் எழுதியுள்ளார்.

* தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் விடிவெள்ளியாகத் தோன்றி அவர்களின் முன்னேற்றத்துக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த அயோத்தி தாசர் 1914-ம் ஆண்டு 69-வது வயதில் மறைந்தார்.

Rajiv Gandhi anniversary

நாட்டின் ரத்த‌ நாளங்களான உள்ளா‌ட்சி அமைப்புகள் தங்களது தேவையை தாங்களே திட்டமிட்டு நிறைவேற்றிக்கொள்ளும்‌ வகையில், பஞ்சாயத் ராஜ் எனும் சட்டத்தை‌ நிறைவேற்றியவர். இந்தியாவில் ஏற்பட்ட தகவ‌ல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்‌டவர். இன்று உ‌லகமெங்கும் கணினித்துறையில் இந்திய இளைஞர்கள் கோலோச்சி வருவதற்கு‌ மூல காரணமாகத் திகழ்ந்‌தவர். அரை மனதுடன் அரசியலுக்கு வந்த போதிலும் அளவற்ற சாதனைகளைப் படைத்த‌வர். 198‌5ஆம் ஆண்டு, சுற்‌றுச்சூழலை‌ப் பாதுகாத்திட தனி அமைச்சகத்தை உருவாக்கினார். அதே வருடம், 'கட்சித்தாவல் தடைச் சட்டத்தை'‌ அறிமுகப்படுத்தி‌, நேர்மையற்ற அரசியல்‌வாதிகள் கட்சித்தாவல் மூலம் அரசியலை பாழ்படுத்தி‌ கேலிக்கூத்தாக்கி வருவதற்கு முடிவு கட்டினார்.

நேர்மையானவர்களுக்கும், துடிப்பானவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க‌ வேண்டும் என்ற அடிப்‌படையில் தனது அமைச்சரவையை உருவாக்கினார். அப்போது இந்திரா காந்தியிட‌மே நற்பெயர் வாங்கியவர் என்பதால், வி.பி.சிங்கிற்கு நிதித்துறையை ஒதுக்கினார் ராஜீவ்.

"நேருவைப் போல உலக சமாதானத்திற்காக விழையும் உண்மையான தலைவர்" என சிங்கப்பூரை கட்டமைத்த முன்னாள் பிரதமர் லீ குவான் யூ- வால் பாராட்டப் பெற்றவர். அவர்தான் ரா‌ஜீவ் காந்தி.

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece