27 ஜனவரி, 2022

ஆர்.வெங்கட்ராமன் நினைவுநாள்

      திரு.ஆர்.வெங்கட்ராமன் ஒரு விடுதலைப்போராட்ட வீரர்,தொழிற்சங்கத் தலைவர், நிதித்துறை மேதாவி,, சட்ட வல்லுனர், சிறந்த சிந்தனைவாதி. தஞ்சாவூர் மாவட்டம் ராஜா மடம் என்ற கிராமத்தில் பிறந்தவர். பட்டுக்கோட்டை யில் பள்ளிப் படிப்பைத் தொடங்கினார்.


    லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 1935ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்தார். 1949 இல் ‘லேபர் லா ஜர்னல்’ என்னும் இதழைத் தொடங்கினார். தமிழகத்தில் பல தொழிற்சங்கங்களின் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.

  தோட்டத் தொழிலாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள், உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்குச் சங்கம் அமைத்தவர் சென்னை மாகாண வழக்கறிஞர் கூட்டமைப்பின் செயலாளராகப் பணியாற்றினார்.தொழிலாளர் சட்ட ஜர்னலின் ஆசிரியர்.1951 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திலும் வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டார். சென்னை பிராந்திய பார் பெடரேசனின் செயலாளராகப் பணியாற்றினார். 

     சுதந்திரப் போராட்டக் காலத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் இணைந்து போராடியதால் கைது செய்யப்பட்டார். 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு காங்கிரஸ் இயக்கத்தின் தொழிலாளர் பிரிவில் தீவிரப் பங்காற்றினார். 

     இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1950 முதல் 1957 வரை நாடாளுமன்ற உறுப்பினராக, சிறப்பாகப் பணியாற்றினார். சர்வதேச நிதித்துறையில் ஆளுநராகவும், சர்வதேசப் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி வங்கியிலும் பணியாற்றினார்.

     நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால், இவரது சேவை தமிழகத்துக்குத் தேவை என்பதை உணர்ந்த அப்போதைய முதல்வர் காமராஜர், இவரை, தமிழக அமைச்சரவையில் பங்கேற்க வைத்தார். தொழிலாளர் நலத்துறை, மின் துறை, தொழில் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் வணிகத்துறை என பல துறைகளை இவர் நிர்வகித்தார். 

     அரசியல் விவகாரக் குழு, பொருளாதார விவகாரங்களுக்கான குழு உறுப்பினராகவும் பொதுக்கணக்குக் குழுவின் தலைவராகவும் 1975 முதல் 1977 வரை ‘சுயராஜ்ய’ பத்திரிகையின் ஆசிரியராவும் பணியாற்றினார்.1946 ஆம் ஆண்டு மலேசியா மற்றும் சிங்கப்பூர் சென்று, அங்குள்ள இந்தியர்களின் நலன்களுக்காக நீதிமன்றங்களில் வாதாடியுள்ளார். 

     1957ஆல் இருந்து 1967வரை தமிழக மேலவை முன்னவர். கிண்டி மற்றும் அம்பத்தூரில் உள்ள தொழிற் பேட்டைகள் இவர் உருவாக்கியவை. கலை, ஓவியம்,சிற்பங்களுக்கு ஊக்கம் அளித்தவர். மாமல்லபுரம் சிற்ப பள்ளி, சுவமிமலை வெண்கலச் சிற்பக்கூடம், நாச்சியார் கோவிலில் பாரம்பரிய விளக்குகளை உருவாக்கும் கூடம் ஆகியவை இவர் அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்டவை. 

     1980 இல் இந்திரா காந்தி தலைமையில் அமைந்த மத்திய அரசில் நிதி அமைச்சராகப் பதவியேற்றார். பிறகு பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். அந்த நேரத்தில்தான் இந்திய ராணுவத்துக்கான ஏவுகணை திட்டப்பணிகள் தொடங்கின. 

     1984 இல் நாட்டின் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார்.1987இல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1992 வரை அப்பதவியில் நீடித்தார். 4 பிரதமர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

    பாகிஸ்தானுக்குப் பயணம் செய்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் இவரே. இவர் குடியரசுத் தலைவராக பதவி வகித்தபோதுதான் மத்தியில் கூட்டணி அரசு தொடங்கியது. பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன.

     காமராஜருடன் இவர் மேற்கொண்ட ரஷ்யப் பயணத்தின் அனுபவங்களை ‘சோவியத் நாடுகளில் காமராஜரின் பயணம்’ என்ற புத்தகமாக எழுதினார். இதற்காக இவருக்கு ‘சோவியத் லேன்ட்’ பரிசு வழங்கப்பட்டது. 

    சிறந்த தொழிற்சங்கவாதியாகவும், நிர்வாகியாகவும் திகழ்ந்த ஆர்.வெங்கட்ராமன், தனது 98 ஆவது வயதில் காலமானார்.

26 ஜனவரி, 2022

73 ஆவது குடியரசு தினம்

     73


       ஆங்கிலேயர்கள், தங்களுக்கு எதிரான, தொடர் போராட்டங்களை எதிர்கொள்ள இயலாமல், இந்தியாவை விட்டு வெளியேற  முடிவு செய்தனர்.1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இந்தியா சுதந்திரமடைந்தது.அப்போது கிடைத்த சுதந்திரம் முழுமையானது அல்ல. ஏனெனில் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி ஆங்கிலேயர் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். 

    சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவிற்கான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க மாமேதை அம்பேத்கர் தலைமையில் 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28 ஆம் தேதி ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு அதே ஆண்டு நவம்பர் மாதம் வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த வரைவு அறிக்கை தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை அறியும் வகையில் விவாதங்கள் நடத்தப்பட்டன. 



     1949 நவம்பர் 26 ஆம் தேதி முழுமையாக வடிவமைக்கப்பட்டு, 1950 ஜனவரி 26ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. நாடு விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மா காந்தி ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26ஆம் தேதி, மக்களாட்சி மலர்ந்த நாளாகக் கொண்டாட, சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை முடிவு செய்தது. 

    308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.அம்பேத்கர் கொண்டு வந்த இந்த அரசியலமைப்புச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்து 73 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த நாளை நாம் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம்.

    அனைவருக்கும், இனிய குடியரசுதின வாழ்த்துகள். வலிமையான பாரதமே, நமது நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட தியாகிகளுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும். நாம், நமது பொறுப்புகளை உணர்ந்து, நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்.


25 ஜனவரி, 2022

தேசிய வாக்காளர் தினம்

     இந்தியத் தேர்தல் ஆணையமானது கடந்த 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதனைக் குறிக்கும் விதமாக ஒவ்வோராண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாகக் (National Voters’ Day) கொண்டாடப்படுகிறது. இது ராஷ்டிரிய மட்டதா திவாஸ் (Rashtriya Matdata Diwas) என்றும் அழைக்கப்படுகிறது. 


    இந்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) அமைப்பு தினத்தை நினைவுகூரும் வகையிலும்,  வாக்காளர்கள் சேர்க்கையை ஊக்குவித்தல், குறிப்பாக புதிய வாக்காளர்களை அதிக அளவில் சேர்ப்பதற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், இந்த தினம் கொண்டாப்படுகிறது. அரசியலமைப்பின் 324 ஆவது பிரிவு, இந்தியாவில் தேர்தல் ஆணையம் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். தேர்தல் ஆணையம் 1950-ல் நடைமுறைக்கு வந்திருந்தாலும், இந்தத் தினத்தை, முறையாகக்  கொண்டாடத் தொடங்கியது 2011 இல் தான்.

தேசிய வாக்காளர் தினத்தின் குறிக்கோள்
(Objective of the National Voters’ Day) 

    இந்தியாவில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதுதான் தேசிய வாக்காளர் தினத்தை மத்திய அரசு கொண்டாடத் தூண்டியது எனலாம். வாக்களிக்கும் பணியில் பங்கேற்க இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, வாக்காளர்களுக்கு  `Proud to be a voter, ready to vote’ என்று எழுதப்பட்ட பேட்ஜ்கள் வழங்கப்படும். வாக்காளர்களாகச் சேருவதில் பலருக்கும் ஆர்வமின்மை ஏற்பட்டதால், இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

    இந்த ஆண்டு, தேசிய வாக்காளர் தினத்தின் கருப்பொருள்,    "தேர்தல்களை, உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் பங்கேற்கத்தக்கதாக மாற்றுதல்” (Making Elections Inclusive, Accessible and Participative) என்பதே.

    தேர்தல்களின் போது வாக்காளர்கள் தீவிரமாக பங்கேற்பதை எளிதாக்குவதற்கும், முழுமையான செயல்முறையை சிரமமின்றி மற்றும் அனைத்து வகை வாக்காளர்களுக்கும் மறக்கமுடியாத அனுபவமாக மாற்றுவதற்கும் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்துகிறது.

    நாட்டில் அரசியல் நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபடுவதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதி நாடு முழுவதும் 8.5 முதல் 10 லட்சம் வாக்குச் சாவடிகளில் 18 வயதை எட்டும் அனைத்து தகுதியான வாக்காளர்களையும் அரசு அடையாளம் காணவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய வாக்காளர்கள் தங்கள் தேர்தல் புகைப்பட அடையாள அட்டையை ஜனவரி 25ஆம் தேதி பெறுவார்கள்.

    நாட்டை ஆளுகின்ற தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும், அதிகாரமளிக்கும் முயற்சியை மேலும் வலுப்படுத்த, இளைஞர்களிடையே ஒற்றுமை மற்றும் பெருமை உணர்வைத் தூண்டுவதற்காக,  `No voter to be left behind’ என்ற முழக்கம் உருவாக்கப்பட்டது.

    மக்கள், வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தவும், தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வுசெய்யவும், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதில் நம்பிக்கையுடனும் பெருமையுடனும் இருக்க குடிமக்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்களை அரசாங்கம் இருகரம்கூப்பி  வரவேற்கிறது. 


    வினாடி வினாக்கள், விவாதங்கள், மாதிரி வாக்கெடுப்புகளை (quizzes, debates, mock polls) நடத்துவதன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நாளை அனுசரிக்க ஊக்குவிக்கப்படுகின்றன.

    இதனால் தகுதியுடைய மாணவர்கள்/மாணவர்களின் பெற்றோர்கள் வாக்களிக்க ஒரு புரிதல் ஏற்படும். இந்த முயற்சியை இன்னும் அதிகரிக்கும் பொருட்டு, இந்திய அரசு புதுமைகளுக்கான தேசிய விருது (National Award for innovation), என்ற ஒன்றை தேர்தல் எந்திரங்களால் தேர்தல் நடைமுறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அளிக்கிறது.

    சமூக ஊடகங்களில் தேசிய வாக்காளர் 
விழிப்புணர்வுப் 
போட்டிகள்

    'எனது வாக்கு எனது எதிர்காலம்- ஒரு வாக்கின் சக்தி' 2022


     சட்டமன்றத் தேர்தல்களில் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு மூலம் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தையும் மீண்டும் வலியுறுத்தும் வகையில் தொடங்கப்படும். பாடல், ஸ்லோகன், வினாடி வினா, வீடியோ மேக்கிங் மற்றும் போஸ்டர் டிசைன், போட்டிகள் அனைவருக்குமானவை. வெற்றியாளர்களுக்கு உற்சாகமூட்டும் பணப் பரிசுகளும் பாராட்டுக்களும் வழங்கப்படும்.

உறுதிமொழி



24 ஜனவரி, 2022

தேசிய பெண்குழந்தைகள் தினம்

     ஜனவரி 24 பெண் குழந்தைகள் தினம், கடந்த 2008 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்ட இந்த நாள் இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெண் குழந்தைகளுக்கு நேரும் பிரச்னைகளைத் தடுக்கவும், பெண் குழந்தைகளுக்கான கல்வியை உறுதி செய்யவும், சமூகத்தில் அவர்களுக்கான சம உரிமையை அளிக்கவுமே தேசிய பெண் குழந்தைகள் நாள் கொண்டு வரப்பட்டது.ஏராளமான துறைகளில் சிறந்து விளங்கி, பெருமை சேர்க்கும் பெண் குழந்தைகளின் சாதனைகளை போற்றும் விதமாகவும் இந்த தினம் அமைகிறது.

பெண்குழந்தைகளின் பாதுகாப்புக்காக

    குழந்தை திருமணத் தடை சட்டம், 2006 

     இந்த சட்டம் குழந்தைத் திருமணத்தைத் தடுத்து பெண் குழந்தைகளின் கல்விக்கு உறுதியளிக்கிறது. இந்தச் சட்டத்தின்படி திருமணம் செய்து வைக்கும் பெற்றோர் மட்டுமல்லாது இதற்குத் துணை நிற்கும் உறவினர்கள், நண்பர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் தண்டனை அளிக்கப்படும். இச்சட்டம் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 1 லட்சம் வரை அபராதமும் விதிப்பதற்கு வழிவகை செய்கிறது.

மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம், 1971 

    ந்தியாவில் பெண் குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்கிறது இந்தச் சட்டம். அதாவது கருவில் இருக்கும் போதே குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிந்து, பெண்ணாக இருப்பின் கருக்கலைப்புச் செய்யும் போக்கு அதிகரித்த நிலையில், கருக்கலைப்புச் செய்வதே குற்றம் எனக் கூறி இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. அதேபோல் கர்ப்பிணியின் குழந்தைப் பிறப்பில் சிக்கல்கள் இருந்தால் மட்டுமே அதுவும் அந்த கர்ப்பிணிப் பெண்ணின் ஒப்புதலோடுதான் கருக்கலைப்புச் செய்ய வேண்டும். இல்லையெனில் அது சட்டத்திற்கு எதிரானது. அவ்வாறு செய்பவர்கள்,தண்டனைக்குரியவர்களாகக் கருதப்படுவார்கள்.

பெண் குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம், 2009 

     இது குழந்தைகளுக்கான பொதுவான சட்டம் என்றாலும்  பெண் குழந்தைகளின் கல்விக்கும் உறுதியளிப்பது பெரும் பயனளிக்கிறது. இந்தச் சட்டம் 1 - 8 வகுப்பு வரை குழந்தைகளின் கல்வி கட்டாயமாக்கியுள்ளது. இதற்குத் தடையாக இருக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனைக்குரியவர்கள்.

பெண் குழந்தைகளைப் பாலியல் தொழிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 

     18 வயதுக்குக் குறைவான பெண் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி அல்லது கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். அதேபோல் பாலியல் தொழிலுக்காக பெண் குழந்தைகளை விற்பதும், வாங்குவதும் குற்றமாகும். அப்படி செய்தால்  IPC பிரிவு 372 மற்றும் 373 இன் படி 10 வருடம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    சட்டப் பிரிவு 363-A இன் படி 10 வயதுக்குக் குறைவான பெண் குழந்தையைக் கடத்தினால் அவர்களுக்கு ஜாமினில் வெளிவராதபடி கடுமையான தண்டனை வழங்கப்படும்.

    18 வயதுக்குக் கீழ் உள்ள பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் , அபராதமும் விதிக்கப்படும். குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப மரண தண்டனை வரை விதிக்கப்படும் சட்டம் சமீபத்தில் கொண்டுவரப்பட்டது.

பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள்

சுகன்யா சம்ரித்தி: மத்திய அரசு பெண் குழந்தைகளின் சேமிப்புத் திட்டமாக ’சுகன்யா சம்ரித்தி’ என்ற நலத்திட்டத்தைக் கொண்டு வந்தது. இது பெண் குழந்தை பிறந்து 10 வயது வரை அவர்களின் பெயரில் மாதம் 1000 ரூபாய் பெற்றோர்கள் சேமிப்பாக வைக்க வேண்டும். 10 வயதுக்குப் பின் அந்த பெண் குழந்தையே தானாக வங்கிக் கணக்கைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 18 வயதில் இந்த சேமிப்பு முடிவடையும். இந்த திட்டம் பெண் குழந்தைகளின் உயர் கல்விக்கு அல்லது திருமணத்திற்கு உதவுவதற்கான கொண்டுவரப்பட்டது.

விளக்கமாக அறிய: செல்வமகள் சேமிப்புத்திட்டம்

    பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்: அதாவது பெண் குழந்தைகளைக் காப்போம் கற்பிப்போம் என்ற நலத்திட்டமும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இது குறைந்து வரும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதித்தை அதிகரித்து, அவர்களுக்கு அதிகாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. அதோடு இயல்பாக வாழ்வதற்காக உத்திரவாதம் அளிக்கவும் , அவர்களுக்குக் கல்வியை உறுதி செய்யவுமே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

பெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை: இடைநிலைக் கல்வி பயிலும் சிறுமிகளுக்கான தேசிய ஊக்கத் தொகை திட்டம் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவித்தொகை அளிக்கிறது. அதாவது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் குழந்தைகள் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தால் அவர்களின் பெயரில் 3000 ரூபாய் செலுத்தப்படுகிறது. அவர்கள் 10 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றபின் அந்த பணத்தை எடுத்து உயர்நிலைக் கல்விக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படியில்லையென்றால் 18 வயது பூர்த்தி அடைந்தபின் எடுத்துக்கொள்ளலாம்.

அதேபோல் தமிழக அரசும் பெண் குழந்தைகளுக்கான சில திட்டங்களை வகுத்துள்ளது.

    அதில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்: இத்திட்டம் பெண்குழந்தைகளுக்கு உதவித் தொகை அளிக்கிறது. 20 வயது முடியும் போது வட்டியுடன் முதிர்வுத் தொகையாக அளிக்கிறது.

    குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை என்றால் மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் 20  ஆண்டுகள் முதலீடு செய்து அதன் பிறகு 50,000 ரூபாய் அளிக்கிறது. அதேபோல் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் 25,000 ரூபாய் பணம் செலுத்தப்படுகிறது. மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தாலோ, தத்து எடுத்தாலோ இந்த திட்டம் செல்லாது.

23 ஜனவரி, 2022

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்

 “ரத்தம் கொடுங்கள் நான் சுதந்திரம் தருகிறேன்” 


     பார்வைக் குறைபாடு என்று ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட அந்த இளைஞர், பின்பு ஒரு ராணுவத்தையே தலைமையேற்று நடத்தினார் என்பது, தங்களது முயற்சிகளில் உள்ளம் சோர்ந்த இளைஞர்களுக்கெல்லாம் உற்சாகமும் ஊக்கமும் தரும் அனுபவப் பாடம். 

    ஓர் ஆன்மீகவாதி, சிறந்த தலைவர், தன்னார்வலர், தேசபக்தர், தனி ராணுவத்தைக் கட்டமைத்தவர், உலகத் தலைவர்களை நேர்கொண்டவர், மாற்றுக் கருத்துக் கொண்டோரையும் மதிக்கும் பண்பாளர் என,ஒரு சிறந்த தலைவருக்கு இருக்கவேண்டிய அத்தனை குணாதிசயங்களையும் ஒருங்கே பெற்றவர் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ். 

     நேதாஜி 1897-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கோதாலியா கிராமத்தில், வசதிமிக்க குடும்பத்தில் பிறந்தார். தந்தை ஜானகிநாதர், தாய் பிரபாவதி தேவி. தந்தை கட்டாக் நகரில் வழக்குரைஞர் தொழில் செய்து வந்தார். கட்டாக்கிலுள்ள ஐரோப்பியப் பள்ளியில் படித்த சுபாஷ், பின்னர் கல்கத்தா பிரசிடென்ஸி கல்லூரியில் படித்து எம்.ஏ. பட்டம் பெற்றார். 

     சிறுவயதில் தாயிடம் துர்க்காதேவி புராணம் கேட்டு வந்ததால் அவர் கடவுள் பக்தியோடு, எளிய வாழ்க்கை முறையை கைக் கொண்டார். பகட்டான உடையுடுத்துவதில்லை. அடுத்தவர் துயர் கண்டு வருந்துவார் அடுத்தவர்க்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து தயங்கமாட்டார். 

    இராமகிருஷ்ணரின் உபதேசங்களைப் படித்ததில் அவருக்கு ஆன்மிக நாட்டம் ஏற்பட்டது.1919 இல் எம்.ஏ பட்டம் பெற்றவர் தந்தையின் வற்புறுத்தலுக்கிணங்கி இங்கிலாந்து சென்றார். தந்தை விரும்பியபடி ஐ.சி.எஸ் (Indian Civil Service) தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால்,அப்பணியை ஏற்றால், இந்தியர்களுக்கு எதிராக, ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டியிருக்கும் என்பதால் ஐ.சி.எஸ் அதிகாரியாய் பணியாற்ற மறுத்து விட்டார்

    அவர் இந்தியா திரும்பியதும், சித்தரஞ்சன் தாஸுடன் இணைந்து சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தீவிரமாய் ஈடுபட்டார். சித்தரஞ்சன் தாஸைத் தனது அர்சியல் குருவாக ஏற்றுக்கொண்டார். 1922 இல் இங்கிலாந்து இளவரசர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது நாடெங்கும் கிளர்ச்சிகள் நடத்தப்பட்டன. வங்காளத்தில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கடையடைப்பு நடத்திய நேதாஜி கைதானார். ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

     1922 இல் ‘இளைஞர் கட்சி’ என்றோர் அமைப்பை ஏற்படுத்தினார் நேதாஜி. இளைஞர்களின் ஒத்துழைப்போடு 1924 இல் கல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் வென்று தலைவரானார். அவருடைய பலம் நாளுக்கு நாள் பெருகவும், ஆங்கிலேய அரசு அவரை 1924 அக்டோபர் மாதத்தில் கைது செய்து சிறையிலடைத்தது. அலிப்பூர் சிறை, பர்ஹாம்பூர் சிறை என்று மாற்றிக் கொண்டே போய் பர்மாவிலுள்ள மாண்டலே சிறையில் அடைத்து வைத்தது.

     சிறைவாசத்தில் அவருடைய உடல் நலம் சீர்குலைந்தது. நேதாஜியை விடுதலை செய்யும்படி கோரி மக்கள் கிளர்ச்சி செய்தார்கள். அவரது உடல் நிலை மோசம் அடைவதைக் கண்ட அரசு அவரை விடுவித்தது. காந்தியடிகள் உப்புச் சத்தியாக்கிரகப் போரை அறிவித்த போது, போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே நேதாஜி கைது செய்யப்பட்டார். பின்பு அரசுடன் காங்கிரஸ் தலைவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். 

     1931 ஜனவரி 25 ஆம் நாள் நேதாஜி விடுதலை செய்யப்பட்டார். உடல் நலத்தைக் கருதி சுவிட்சர்லாந்து சென்றவர், அங்கிருந்து ரோம், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். முசோலினி, டிவேலரா (அயர்லாந்து) போன்ற தலைவர்களைச் சந்தித்தார். இந்தியா திரும்பியவரைக் கைது செய்த அரசு ஒன்றரை ஆண்டு சிறை வைத்தது. 

     மாகாண சுயாட்சி சட்டம் பற்றிய விவாதத்தில் காந்திஜியுடன் நேதாஜிக்குக் கருத்து மோதல் ஏற்பட்டது. 1939 இல் நேதாஜியே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஒருதரப்பினர் ஒத்துழைக்க மறுத்தனர். இதனால், நேதாஜி பதவியை உதறியதோடு, கட்சியைவிட்டு வெளியேறினார். 1940 இல் ‘பார்வர்டு பிளாக் என்று ஒரு புதிய கட்சியைத் துவக்கினார். 

    தம்முடைய தீவிரப் போக்கின் காரணமாய் நேதாஜி மீண்டும் சிறை செல்ல நேர்ந்தது. சிறையில் இருந்தபோது அவர் ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டிருந்தார். காந்தியின் அகிம்சைப் போராட்ட முறைக்கு மாறான ஒரு வழிமுறையை சுபாஷ் சந்திரபோஸ் தேர்ந்துகொண்டார். இந்தியா விடுதலை பெற வேண்டும் என்பதில் இருவருக்கும் இடையே எந்தக் கருத்து மாறுபாடும் இல்லை. அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட வழிமுறைகள் மட்டுமே வேறு வேறு. 

    விடுதலை பெற்ற இந்தியாவில் வெவ்வேறு சமய நம்பிக்கைளைச் சேர்ந்தவர்களும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றே இருவருமே மனதார விரும்பினார். அது வெளிநாடுகளின் ஆதரவோடு ஆங்கிலேயரை விரட்டியடிப்பது என்ற தீர்மானம். ஐந்து மாத சிறை வாசத்துக்குப்பின் வீடு திரும்பினார். அவருடைய வீட்டைச் சுற்றிலும் காவல் படையின் ரகசியக் கண்காணிப்பு இருந்தது.1941 ஜனவரி 14. அன்று நேதாஜி ஒரு முஸ்லீம் சந்நியாசி போல் வேடமிட்டு, வீட்டிலிருந்து வெளியேறினார். 

    பீகார் சென்று அங்கிருந்து, பெஷாவர், காபூல், மாஸ்கோ, இத்தாலி என்று பயணித்து ஜெர்மனியை அடைந்தார். பல இடையூறுகளைக் கடந்து 73 நாட்கள் பயணித்திருந்தார் அவர். ஹிட்லருடன் நடந்த சந்திப்பு பலனளிப்பதாயிருந்தது. 

    ஜெர்மனியில் ஹிட்லரை சுபாஷ் அவர்கள் சந்தித்து, இந்திய சுதந்திரத்திற்கு உதவி கேட்டார். என்னதான் உதவி கேட்கச் சென்றிருந்தாலும், சுபாஷின் தேசப்பற்று அவரை கோபமடையச் செய்தது. இந்தியர்களை காட்டுமிராண்டிகள் என்று ஹிட்லர் தனது புத்தகத்தில் குறிப்பிட, அதை எதிர்த்துப் பேசிய போஸ், அவ்வாக்கியத்தை திரும்பப் பெறச்சொன்னார்.

     “இந்தியா சுதந்திரம் பெறுவது கடினம்” என்று ஹிட்லர் கூற, “எனக்கு எவனும் அரசியல் சொல்லித் தரத் தேவையில்லை என்று உங்கள் அதிபருக்குக் கூறுங்கள்”

    என்று மொழிபெயர்ப்பாளரிடம் சொல்லிவிட்டு கோபமாக வெளியேறினார் சுபாஷ். உலகின் மிகப்பெரிய சர்வாதிகாரி ஹிட்லர் முன் முதல்முறையாக அப்படி ஒருவர் பேச, சுபாஷின் திராணியை நினைத்து வியந்தனர்

    ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்.அப்போது பிரிட்டிஷ் அரசுக்காகப் போரிட்ட இந்தியப் படைவீரர்கள் ஜெர்மனியிடம் தோற்று, ஜெர்மனியிடம் யுத்தக் கைதிகளாயிருந்தனர். நேதாஜி அவர்களைக் கொண்டு ‘இந்திய சுதந்திரச் சங்கம்’ என்ற அமைப்பையும், அதன்கீழ் ஒரு தேசிய ராணுவத்தையும் உருவாக்கினார். 

    விவேகானந்தர், தாகூர், அரவிந்தர் போலவே நேதாஜியும் தமிழகத்தின் மனம்கவர்ந்த வங்க ஆளுமை. சென்னைச் சிறையில் சுபாஷ் அடைக்கப்பட்டது, இந்திய தேசிய ராணுவம் உருவாவதற்கு ஓர் வலுவான அடித்தளத்தை உருவாக்கியது. 


    இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயப் படைக்கு எதிரான நாடுகள், குறிப்பாக ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் ஆதரவுடன் இந்தியச் சுதந்திரத்தை அடைய விரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அந்நாடுகளிடம் உதவி கேட்டார். ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது போகவே, ஜப்பான் செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் சென்று, ராணுவ ஜெனரல் டோஜோவைச் சந்தித்து உதவி கேட்டார்.
 

    ஆங்கிலேய அரசுக்கு எதிராக உருவாகி, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்குப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது.


    1943 அக்டோபர் 21 இல் சிங்கப்பூரில் போஸ், ”ஆசாத் இந்த்” என்ற சுதந்திர அரசுப் பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ஆம் தேதி அரசின் தலைவராக, தேசியக் கொடியை ஏற்றினார். அதை, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன.

      ஹிட்லரின் உதவியாளர்கள். இந்தியாவிலுள்ள ஆங்கிலேய அரசுடன் போரிட அவர் தருணம் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஜெர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் போர் மூண்டுவிட்டது. அதனால் அவருடைய திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது. அங்கிருந்து அவர் 1914 இல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் இந்தோ-பர்மா எல்லை வழியே இம்பால் (நாகாலாந்து) வரை முன்னேறியது. ஆனால் பிரிட்டீஷ் அரசு, அந்தப் போர் முயற்சியை முறியடித்து அவர்களைச் சிறை பிடித்தது. 

     நேதாஜி ஜப்பானிய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காகச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் நேதாஜி மரணமடைந்ததாக, ஜப்பானிய அரசு அறிவித்தது. இந்தியாவுக்கு வெளியிலேயே, ஓர் இந்திய அரசாங்கம் அமைத்து, படை நடத்திய தீரர் அவர். இந்த மண்ணின் வீரம், அவரைப் போன்றவர்களால்தான், உலக அளவில் உன்னதம் பெற்றது. 

     இன்று, பள்ளிகள் முதல் போர் முனைகள் வரை ஒவ்வொருவரும் சொல்லிவரும், ‘ஜெய் ஹிந்த்’ சுலோகத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் நேதாஜி தான். 

    இந்த வார்த்தையைச் சொல்லும்போதெல்லாம் நமக்குள் எழும் அந்த தேசப்பற்றுதான், அந்த மாபெரும் மனிதனுக்கு நமது காணிக்கை.

     நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களது பிறந்த  நாள்  “பராக்கிரம தினமாக”க் கொண்டாடப்படுகிறது

22 ஜனவரி, 2022

மருத்துவ அறிவியல் வெற்றி

     மருத்துவ அறிவியல் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்துவதற்கு முன்னோட்டம் நடத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த மனித இனத்துக்குமே வரப்பிரசாதமாக அமைய இருக்கும் அந்தச் சாதனை, அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கிறது.

    நியூயாா்க்கிலுள்ள மருத்துவமனை ஒன்றில் இதயம் செயலிழந்து மரணத்தின் விளிம்பில் இருந்த 57 வயது நோயாளி ஒருவருக்குப் பன்றியின் இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டிருக்கிறது. 

    செயலிழக்கும் மனித உறுப்புகளுக்குப் பதிலாக, விலங்கினங்களின் உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்துவதற்கு ‘செனோடிரான்ஸ்பிளாண்ட்’ 

Xenotransplantation (Xenos- from the Greek meaning "foreign" or strange)
என்று பெயா். அமெரிக்காவின் பால்டிமோரைச் சோ்ந்த டேவிட் பென்னட், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்ட முதல் மனிதராக வரலாற்றில் அறியப்படுவாா்.

    17-ஆவது நூற்றாண்டு முதலே விலங்கினங்களின் ரத்தத்தை மனிதா்களுக்கு செலுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜீன் பேப்டைஸ் டெனிஸ் என்கிற பிரெஞ்ச் மருத்துவா், செம்மறி ஆட்டின் ரத்தத்தை சிறுவன் ஒருவனுக்குச் செலுத்தியதுதான் பதிவாகி இருக்கும் முதலாவது ரத்த மாற்று முயற்சி. 


    19-ஆவது நூற்றாண்டு முதலே விலங்கினங்களின் தோல் பகுதிகளை மனிதா்களுக்குப் பொருத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 1838-இல் முதன்முறையாக பன்றியின் விழிவெண்படலம் (காா்னியா) ஒருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.

    20-ஆம் நூற்றாண்டில் பல்வேறு ‘செனோடிரான்ஸ்பிளாண்ட்’ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1960-இல் நியூ ஆா்லியன்ஸில் ரீம்ட்ஸ்மா என்கிற அறுவைச் சிகிச்சை மருத்துவா், மனித குரங்குகளின் சிறுநீரகத்தை, அறுவை மாற்றுச் சிகிச்சை மூலம் 13 பேருக்கு பொருத்திச் சோதனை நடத்தினாா். அதில் ஒரே ஒருவா் மட்டும் அந்த சிறுநீரகத்தை ஏற்றுக்கொண்டு மூன்று மாதங்கள் வாழ்ந்தாா். 1964-இல் மனிதக் குரங்கின் இதயம் ஒருவருக்குப் பொருத்தப்பட்டு, அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

    நியூயாா்க்கில் நடந்திருக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னோடிச் சோதனை, இந்தியாவில்தான் நடந்தது. 1996-இல் பரூவா என்கிற அறுவை சிகிச்சை மருத்துவா், 32 வயது பூா்னோ சைக்யா என்பவருக்கு பன்றியின் நுரையீரலையும், இதயத்தையும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முற்பட்டாா். அந்த நோயாளி இறந்தாா் என்பது மட்டுமல்ல, முன் அனுமதி இல்லாமல் சோதனை நடத்தியதற்காக மருத்துவா் பரூவா கைது செய்யப்பட்டு, தனது மருத்துவா் பட்டத்தையும் இழக்க நோ்ந்தது. உலகில் அதுதான் பன்றியின் இதயத்தை மனிதா்களுக்குப் பொருத்தும் முதல் முயற்சி.

    கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம், நியூயாா்க் பல்கலைக் கழகத்தின் லங்கோன் மருத்துவ மையத்தில், முற்றிலுமாக மூளை செயலிழந்துவிட்ட ஒருவருக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மனித உடலிலுள்ள எதிா்ப்பு சக்தி அந்நியப் பொருள்கள் எதையும் ஏற்றுக்கொள்ளாது என்பதால், பன்றிகள் மரபணு மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. அதன் மூலம் பொருத்தப்படும் உறுப்புகள் நிராகரிக்கப்படாமல் வேலை செய்யும் என்பது எதிா்பாா்ப்பு.

    ஏனைய விலங்கினங்களைவிட, பன்றியின் உறுப்புகள் மனித உறுப்புகளுடன் பொருந்துவதாக, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக அறியப்படுகிறது. இதற்காகவே ரெவிவிகாா் என்கிற அமெரிக்க நிறுவனம் ஒரு பண்ணையை ஏற்படுத்தி அதில் மரபணு மாற்றப்பட்ட பன்றிகளை வளா்க்கிறது. மருத்துவப் பரிசோதனைக்காக இந்தப் பன்றிகள் வழங்கப்படுகின்றன. இதேபோல வேறு சில பண்ணைகளும் அமெரிக்காவில் உருவாகியிருக்கின்றன.

    பன்றியின் உறுப்புகள் நிராகரிக்கப்படாமல் இருப்பதற்காக அதன் 10 மரபணுக்கள் மாற்றப்படுகின்றன. அவற்றில் நான்கு செயலிழக்கச் செய்யப்படுகிறது. மனிதா்களின் ஆறு மரபணுக்கள் பன்றிக்குச் செலுத்தப்பட்டு அதன் மூலம் நிராகரிப்புக்கான வாய்ப்பைக் குறைக்கிறாா்கள். இவையெல்லாம் தொடா்ந்து நடைபெறும் சோதனை முயற்சிகள்.

    பன்றி உள்ளிட்ட விலங்கினங்களின் உறுப்புகளை மனிதா்களுக்குப் பொருத்தும் முயற்சியில் சில ஆபத்துகளும் இருக்கின்றன. எத்தனை காலத்திற்கு அந்த உறுப்புகள் மனித உடலில் செயல்படும் என்பது தெரியாது. அதனால், பக்கவிளைவுகள் ஏற்படுமா என்பதும் தெரியாது. அதன் மூலம் இதுவரை மனிதஇனம் அறியாத, புதிய நோய்கள் அந்த விலங்கினங்கள் மூலம் மனிதா்களுக்கு பரவும் அபாயமும் நிறையவே உண்டு.

    சாா்ஸ், கொவைட் 19, பறவைக் காய்ச்சல் போன்ற விலங்கினங்களிலிருந்தும், பறவைகளிலிருந்தும் நோய்த்தொற்றுப் பரவல் காணப்படும் நிலையில், இதுபோன்ற முயற்சிகள் தேவைதானா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. மனிதா்களைக் காப்பாற்றுவதற்காக விலங்கினங்களை பலியிடலாமா என்கிற கேள்விக்கு, பெரும்பாலான மக்கள் விலங்குகளைக் கொன்று மாமிசமாக உட்கொள்ளும்போது மனிதா்களைக் காப்பாற்றுவதற்காக விலங்குகளின் உறுப்புகளை பொருத்துவதில் தவறில்லை என்கிறாா்கள் மருத்துவா்கள்.

    இந்தியாவில் மட்டுமே ஆண்டொன்றுக்கு சுமாா் 30,000 கல்லீரல் தேவைப்படும் நிலையில், 1,500 மாற்று அறுவை சிகிச்சைகள்தான் நடத்த முடிகிறது. 50,000-க்கும் அதிகமானோருக்கு இதய மாற்று சிகிச்சை தேவைப்படும் நிலையில், அதிகபட்சம் ஆண்டொன்றுக்கு 15 இதய மாற்று சிகிச்சைகள்தான் நடத்த முடிகின்றன. உலக அளவில் பல லட்சம் சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுகிறது.

    அறிவியல் சோதனைகள் தொடா்வது மனிதஇனத்தின் நன்மைக்காக என்றால், அதை வரவேற்பதுதான் ஆக்கபூா்வ அணுகுமுறை.

நன்றி : தினமணி (22 ஜனவரி 2022)  பட உதவி : Google

21 ஜனவரி, 2022

எம்.எஸ்.உதயமூர்த்தி நினைவுநாள்

     "உன்னால் முடியும் தம்பி" என்ற தாரக மந்திரத்தைச் சொல்லி இளைஞர்களின் இதயத்தில் தன்னம்பிக்கைப் பயிரை விதைத்து வளர்த்தவர் எம்.எஸ்.உதயமூர்த்தி. மயிலாடுதுறை சு.உதயமூர்த்தி என்பதன் சுருக்கமே எம்.எஸ்.உதயமூர்த்தி. 

    முன்னேற்ற உளவியலைப் பற்றி, தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக, இதழ்களில் கட்டுரைகள் எழுதியதோடு ஏறத்தாழ 40 நூல்களாகவும் வடித்திருக்கிறார். சிறந்த ஆசிரியருக்கான விருதும், Fulbright Scholar என்ற கெளரவமும் பெற்றவர். 

    இயக்குனர் பாலசந்தர் உதயமூர்த்தியின் மேல் உள்ள அபிமானத்தினால்  ‘உன்னால் முடியும் தம்பி’ என்ற திரைப்படத்தை எடுத்ததுடன், படத்தின் நாயகனுக்கு உதயமூர்த்தி என்றே பெயரிட்டார். இளைஞர்கள், தவறான திசையில் செல்லாமல் நெறிப்படுத்த, எழுத்து மூலமும், பேச்சு மூலமும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம் .

    எம்ஜிஆரால், அழைத்துப் பாராட்டப்பெற்றவர், தமிழக அரசால் விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டவர். அன்பானவர், மென்மையானவர், பழகுவதற்கு இனிமையானவர். ஏராளமான இளைஞர்களின் மனத்தில் தன்னம்பிக்கை விதை விதைத்தவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி. தமிழில் சுயமுன்னேற்ற நூல் பற்றிக் கேள்விப்படாத அந்த நாள்களிலேயே இவரது நூல்கள் பல மனங்களில் ஒளி பாய்ச்சியுள்ளன. 




    'பிரச்சனைகளுக்குத் தீர்வு  காண்பது எப்படி?, 'உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்', 'எண்ணங்கள்', 'நீதான் தம்பி முதலமைச்சர்' உட்படப் பல நூல்களை எழுதியவர். “எண்ணங்கள்” புத்தகம் கிட்டத்தட்ட 10 லட்சம் பிரதிகள் விற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    தமிழ்ச் சமூகம் தலை நிமிர, வாழ்வின் இறுதி மூச்சுவரை சிந்தித்தவர், உழைத்தவர். இன்று தன்னம்பிகையாய் நடைபோட்டு சமூக அக்கறையுடன் களப்பணி செய்யும் இளைஞர்கள் பெரும்பாலும் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் தாக்கம் இல்லாமல் இருக்க முடியாது.நதிகளை இணைப்பதன் மூலம் நாட்டை வளம் கொழிக்கச் செய்யலாம் என்று விரும்பியவர். 

    பல சுய முன்னேற்ற நூலாசிரியர்களுக்கு,  இவரே முன்னோடியாவார். "ஐயாவின் நூல்கள்தான் என்னை வழிநடத்தியவை" என்று இன்றைக்கும் பலர் நெஞ்சாரக் கூறுவதை கேட்கமுடியும். கிராமத்தில் பிறந்த முதல் பட்டதாரி மாணவர்கள் பலர் இவரின் நூல்களைப் படித்து, தொழில் துறையிலும், வாழ்க்கையிலும் பல்வேறு வெற்றிகளை ஈட்டி, இன்று வெற்றியாளர்களாக இருப்பதே இதற்குச் சான்று. 

    தமிழர்களின் காவிரிப் பிரச்சினை,  மதுவிலக்கு, நதிநீர் இணைப்பு போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளில் மிகவும் தெளிவான சிந்தனையுடன் களப்பணி செய்தவர். சமூக அக்கறை உள்ள இளைஞர்கள் இவரது நூல்களை ஒருமுறை படித்தால் இன்று தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு நடைமுறை சிக்கல்களையும் அதற்கான தெளிவான தீர்வையும் பற்றிய தெளிவு கிடைக்கும். 

    விளநகர் என்ற குக்கிராமத்திலிருந்து அமெரிக்கா சென்றவர், 25 ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றினார். 'சிறந்த தொழிலதிபர்' என்று அமெரிக்க நிறுவனங்களாலும், பத்திரிகைகளாலும் பாராட்டப் பெற்றவர். 


    தாய்மண்மேல் கொண்ட பற்றால் இந்தியாவுக்குத் திரும்பி மக்கள் பணியாற்றியவர். 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற அமைப்பை 1988 இல் தொடங்கியவர். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கில் இந்த இயக்கம் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே விழிப்புண‌ர்வை ஏற்படுத்தி வந்தது. இளைஞன் ஒருவன் முரசறைவது ‌போன்ற படம் இந்த இயக்கத்தின் சின்னம் ஆகும்.

    செம்பனார்கோயில் பகுதிகளில் இருக்கும் வற்றிய நீர்நிலைகளில், தொண்டர்களுடன் சேர்ந்து தூர்வாரி நீர்வளத்தைப் பெருக்கிக் காட்டியவர். இதன் மூலம் சாமான்ய மக்கள் ஒன்று சேர்ந்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதற்கு சான்றாக விளங்கியவர். இவரது இந்த செயலுக்கு பிறகுதான் பல கிராமங்களில் மக்கள் அரசை எதிர்பார்க்காமல் தாங்களே தங்களது கிராமத்திற்கான பாதையை போட்டுக் கொண்டனர், சாலைகளைச் சீரமைத்துக் கொண்டனர்.
---------------------------------------------------------------------------------------------------------------

    அவர், அடிக்கடி கீழ்க்காணும் மூன்று கருத்துக்களை, தொடர்ந்து வலியுறுத்தினார்:

1.நாம் இந்த மண்ணிலே பிறந்ததிற்கு இந்த மண்ணிற்கு ஏதாவது நல்லது செய்தாக வேண்டும்.

2.நாம் இந்த மண்ணை விட்டுச் செல்லும்போது, சில நல்ல அடையாளங்களை இந்த மண்ணில் விட்டு விட்டுச் செல்ல வேண்டும்.

3.நமக்கும்,பிறருக்கும்,இந்த சமுதாயத்திற்க்கும் ஆன வாழ்க்கையே முழுமையான வாழ்க்கை.உனக்காக மட்டும் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

---------------------------------------------------------------------------------------------------------------------------- 

    தூய்மையான அரசியலுக்கு அடிகோலியவர், அரசியலில் சூது, தந்திரம் அறியாதவர். தனது அறிவுக்கும், திறமைக்கும் ஏற்ற ஒரு புதிய சமுதாயத்தை தமிழகம் பெறவேண்டும் என்று விரும்பி 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற அமைப்பை உருவாக்கி, அதன் வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட்டார். 

    நேர்மையான அரசு அமைய வேண்டுமென்றால் அரசியலில் ஆர்வம கொண்ட இளைஞர்கள் தன்னம்பிக்கை, ஒழுக்கம், சமுதாய ஈடுபாடு என்ற மூன்று நிலைகளில் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர் இவர். இதற்காகப் பல நிகழ்ச்சிகளை இளைஞர்களிடையே அவர் நடத்தினார்.

    அவரது எண்ணங்கள் இன்று வரை தமிழகத்திற்கு வழி காட்டுகிறது. எம்.எஸ்.உதயமூர்த்தி 80வது வயதில்  ஜனவரி 21- 2013 அன்று காலமானார்.

    தானும் நிமிர்ந்து நின்று, தமிழர்களையும் தலை நிமிர்த்த முயன்ற, டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்திக்கு நமது அஞ்சலியைக் காணிக்கையாக்குவோம்.

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece