6 பிப்ரவரி, 2012

06/02/2012


1.  இலங்கை இனப்பிரச்னைக்கு, வெளிநாடுகள் கூறும் யோசனைகளை ஏற்கமாட்டோம் என்று, அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்ச தெரிவித்தார்.
2.  அமெரிக்கப் பொருளாதாரம், உறுதியாகவும், வேகமாகவும் மீண்டெழுவதாக அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
3. ஈரான் மீது, அமெரிக்கா உள்ளிட்ட எதிரி நாடுகள் தாக்குதல் நடத்துவதற்கு, எந்த நாடாவது இடம் கொடுத்தால், அந்நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என ராணுவம் எச்சரித்துள்ளது.
4. இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் உட்பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
5.  புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளியோருக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குருசரண் கௌர் வலியுறுத்தினார்.
6. நமது நாட்டில் மகளிரை,துர்கா, காளி, லட்சுமி போன்ற தெய்வங்களுடன் ஒப்பிட்டு கவுரவிக்கிறார்களே தவிர, அவர்களுக்கு சுதந்திரம் அளிப்பதில்லை என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி, வேதனையுடன் தெரிவித்தார்.
7.  தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனியில் இன்று திருக்கல்யாண வைபவமும், வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகின்றன. இதைத் தொடர்ந்து, நாளை தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுகிறது.
8.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இலவசமாக மனு எழுதுவதன் மூலம், மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளை அறிந்து கொள்ள,பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளின், நாட்டுநலப் பணித் திட்ட மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
9.நம் நாட்டு மக்களுக்கு, அடுத்த 10 ஆண்டுகளில், 50 கோடி வீடுகள் தேவையெ, இந்தியத் தொழிற்சாலை மற்றும் வர்த்தகக் கழக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
10. மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 32 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட, முத்தரப்பு மட்டைப்பந்துத் தொடரின் முதல் ஆட்டத்தில், இந்தியாவை 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.

3 பிப்ரவரி, 2012

03/02/2012


1. சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாதீசுவில், புதிய தூதரை நியமிப்பது என்றும், அதற்கான புதிய தூதரகம் அமைப்பது என்றும் இங்கிலாந்து அறிவித்தது.புதிய தூதரகம் அமைக்கப்படும் வரை, தற்காலிகமாக,கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில், இத்தூதரகம் செயல்படும்.
2.  தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தான் உள்துறை அமைச்சருக்கு பிரதமர் யூசுப் ரசா கிலானி உத்தரவிட்டுள்ளார்.
3. உள்நாட்டுப் போரின் போது நடந்த அத்துமீறல்கள் பற்றிய அறிக்கையை, ஐக்கிய நாடுகள் அவைக்கு அனுப்பப் போவதில்லை என இலங்கை அரசு கூறியுள்ளது.
4. இஸ்ரேலைத் தாக்கும் நோக்கில், 2 இலட்சம் ராக்கெட்டுகள், ஏவுகணைகள் உள்பட சுமார் 100 கிலோ எடை கொண்ட, யுரேனியம் செறிவூட்டப்பட்ட 4 அணு குண்டுகளை, ஈரான் தயாரித்துள்ளதாக, இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
5. 2008-ம் ஆண்டு வழங்கப்பட்ட 122, 2ஜி அலைக்கற்றை உரிமங்களை
உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை நீக்கம் செய்தது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வெளிப்படையாக இருக்கவேண்டும் என்ற, பிரதமரின் அறிவுரை புறக்கணிக்கப் பட்டுள்ளது என்றும், சட்டத்துக்கு முரணான முறையில் அந்த உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கடுமையாகச் சாடியுள்ளது.
6. ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றுவோருக்கு 15 நாள்களுக்குள் சம்பளம் கொடுக்க வேண்டும் என, பிரதமர் கூறியுள்ளார்.
7.  தங்களுக்குச் செலுத்த வேண்டிய பாக்கியை செலுத்தாததால், இந்தியன் ஆயில் உட்பட மூன்று எண்ணெய் நிறுவனங்கள், ஏர் இந்தியாவுக்கு நேற்று எரிபொருள் தருவதை நிறுத்தின.  இந்தப் பிரச்னையால், ஏர் இந்தியா விமானங்கள் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
8.  புவி வெப்பமடைவதைத் தடுக்க வேண்டும் என்பதில் வளர்ச்சியடைந்த நாடுகளிடையே போதிய அக்கறையில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.
9. பாரதியார் பல்கலைக்கழகத்தில் ` 60 கோடியில் 5 மெகாவாட்  திறன் கொண்ட சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
10. இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது 20 ஓவர்கள் கொண்ட, மட்டைப்பந்துப் போட்டி இன்று மெல்போர்னில் நடக்கிறது. தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வரும் இந்திய அணி, இம்முறை, முதல் வெற்றியைத் தேடி களமிறங்குகிறது.

2 பிப்ரவரி, 2012

02/02/2012


1.  சிரியாவில் நிலவி வரும் அரசியல் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இராணுவத் தீர்வு பலன் தராது என்றும், ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
2. சவுதி அரேபியாவில், ஆப்கானிஸ்தான் அரசுடன் பேச்சு நடத்தப் போவதாக, வெளியான தகவல்களை, தலிபான் அமைப்பு மறுத்துள்ளது.
3. இதுவரை, தென் சீனக் கடலில், தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் தீவிரம் காட்டி வந்த சீனா, தற்போது, கிழக்கு சீனக் கடலிலும், தனது தலையீட்டைத் துவக்கியுள்ளதற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
4. தனியார் கூரியர் நிறுவனங்கள் மத்திய அரசுடன் தங்களைப் பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்படும் என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
5. ஈராஸ் என்ற 34 கிலோ மீட்டர் அகலமான, இரண்டாவது பெரிய விண்கல், செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் பூமியைக் கடந்து சென்றது.
6. குஜராத் கலவரம் தொடர்பாக, முதல்வர் மோடிக்கு, அழைப்பாணை அனுப்பி விசாரிக்கும்படி, நானாவதி கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை, அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
7. மேற்கு வங்கத்தில், காவல்துறை சங்கங்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை, அரசு நேற்று நீக்கியது. 
8. கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை வீசிய சூறைக்காற்றின் காரணமாக,கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், திருவள்ளுவர் சிலைக்கு நாள் முழுவதும் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
9. கோவை மாநகராட்சியில் புதிதாக 3,443 பணியிடங்களைத் தோற்றுவிக்க, ஒப்புதல் அளிக்கக் கோரி,தமிழக அரசுக்கு மாநகராட்சி மன்றம் பரிந்துரை செய்துள்ளது.
10. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இருபது ஓவர் மட்டைப்பந்து ஆட்டத்தில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது இந்தியா.

1 பிப்ரவரி, 2012

01/02/2012


1. பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகளில், அமெரிக்கா, ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தி வருவதாக, முதன் முறையாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார். 
2. இலங்கையில், தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்களுக்கு, அதிகாரம் தருவது குறித்த அரசியல் சட்டதிருத்தத்தை, அமல்படுத்துவது குறித்து, நாடாளுமன்றத் தேர்வுக் குழுவே முடிவு செய்யும் என அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்ச தெரிவித்தார்.
3. உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள லிபிய நாட்டுக்கு, இந்தியா, உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட ` 5 கோடி மதிப்பிலான, மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.
4.  நாடு முழுவதும் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
5. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு உதவும் வகையிலான, திட்டங்களை மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
6. முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளதா என்பதை, நேரில் ஆய்வு செய்ய, மத்திய அரசு அதிகாரிகள் வந்துள்ளனர்.
7. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7% உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து இந்த உயர்வு கணக்கிடப்படும்.
8. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பிப்ரவரி 4ஆம் தேதி, யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு நிவாரண உதவிகளை அறிவிக்க உள்ளோம் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார்.
9.  தமிழகத்தில் உள்ள 19 ஆயிரம் அரசுப் பேருந்துகளில், 9,389 பேருந்துகள் சாதாரண கட்டணத்தில் இயக்கப்படுவதாக,தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
10. இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இருபது ஓவர் மட்டைப்பந்துப் போட்டி , ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் புதன்கிழமை நடைபெறுகிறது.

31 ஜனவரி, 2012

31/01/2012


1. அமெரிக்கா - தென் கொரியா நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி, அணு ஆயுதப் போரைத் தூண்டி விடும் என, வடகொரியா எச்சரித்துள்ளது. 
2.தென் அமெரிக்க நாடான பெருவில், நேற்று, ரிக்டர் அளவு கோலில் 6.3 புள்ளிகள் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில்,60 பேர் காயமடைந்தனர். 
3.ஜப்பானின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருவதாகவும், 2060 ஆம் ஆண்டு, தற்போதைய மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு குறைந்து, 8 கோடியே 67 லட்சமாக ஆகி விடும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
4. பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல், அசம்பாவிதங்கள் எதுவுமின்றி அமைதியாக நடந்து முடிந்தது. பஞ்சாபில் 80 விழுக்காடு வாக்குகளும், உத்தரகண்டில்,70 விழுக்காடு வாக்குகளும் பதிவாகின.
5.எந்த அரசு பதவியையும் வகிக்கக் கூடாது என, தனக்கும், மற்ற மூன்று விஞ்ஞானிகளுக்கும் அரசு சார்பில் விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் என, இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். 
6. சங்க இலக்கியத்தில் பெருமை பெற்ற புறநானூற்றுப் பாடல்கள் அடங்கிய ஆங்கில மொழி பெயர்ப்பு நூல், திருவனந்தபுரத்தில் நடந்த விழாவில் சிறப்பாக வெளியிடப்பட்டது.
7. புயலால் ஏற்பட்ட பாதிப்பை போக்க, இடைக்கால நிவாரண நிதியாக ` 500 கோடி மத்திய அரசு வழங்கியதற்கு, தமிழக அரசு நன்றி தெரிவித்துள்ளது.
8.தானே புயலால் கடும் பாதிப்புக்கு உள்ளான கடலூர், மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், `1000 கோடி செலவில், 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9. இன்றைய மாணவர்கள், எதிர்காலத்தில் முதியோர் இல்லங்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என, தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள்.
10. சர்வதேச டென்னிஸ் மகளிர் இரட்டையர் தரவரிசையில், இந்தியாவின் சானியா மிர்சா, மிக அதிகபட்சமாக 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

30 ஜனவரி, 2012

30/01/2012


1. சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசுகளைத் தடுப்பதிலும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும் இந்தியா 125-வது இடம் வகிப்பதாக யேல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.  இந்தியா - பாகிஸ்தான் உறவு சுமுகமாக வேண்டியது மிகவும் அவசியம் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப்ரசா கிலானி கூறியுள்ளார்.
3. சிரியாவில், தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு அருகில் உள்ள பகுதிகளை, எதிர்த்தரப்பினரிடம் இருந்து கைப்பற்றுவதற்காக, அதிபரின் ராணுவம் முழுவீச்சில் இறங்கியுள்ளது.
4.பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநில சட்டசபைத் தேர்தல்கள், பலத்த பாதுகாப்புடன் இன்று நடக்கின்றன. 
5.  மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட்டில், சாதாரண வகுப்புக்கான கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என தெரியவந்துள்ளது.
6.  ஊழலால் விளையும் தீமைகள் குறித்து, பள்ளிப் பாடநூல்களில் புதிய பாடத்திட்டங்களைப் புகுத்தி, மாணவ, மாணவியரிடையே ஊழல் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.
7. இந்திய, ஜப்பான் கடலோரக் காவல் படையினர் இணைந்து, சென்னை அருகே, நடுக்கடலில் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டனர். 
8.  வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில், 141வது தைப்பூச ஜோதி தரிச விழா எதிர்வரும், 7ஆம் தேதி நடக்கிறது. 
9. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சரியாக விளையாடாமல், படுதோல்வி கண்டதன் எதிரொலியாக, டெஸ்ட் தரவரிசையில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர் இந்திய வீரர்கள்.
10. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின், ஆடவர் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
                                                                

28 ஜனவரி, 2012

28/01/2012


1.  ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலை விரிவாக்க வேண்டும் என்ற, ஜி 4 நாடுகளின் பரிந்துரைக்கு, பல நாடுகள் ஆதரவளித்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. 
2. ஆப்கானிஸ்தானில் இருந்து பிரான்ஸ் படைகள் 2013-ம் ஆண்டு இறுதிக்குள் வெளியேறும் என அதிபர் நிகோலஸ் சர்கோஸி தெரிவித்துள்ளார். 
3. சர்வதேச அளவில் உயர்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், 750 மில்லியன் டாலர்களை அளித்துள்ளார்.
4.  பகவத் கீதை மத நூல் அல்ல ;அது வாழும் நெறி எனவும், சமூக நீதி காக்கும் நூல் எனவும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கும் மாநில அரசின் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்புக்கூறியுள்ளது.
5. இந்திய விமானப் படைக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள, லகுரக ஆளில்லா போர்விமானம் லக்ஷயா-2 ,வெள்ளிக்கிழமை இரண்டாவது முறையாக வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.
6. தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, இதுவரை ` 52.41 கோடி வழங்கப்பட்டுள்ளது.
7.  கூடங்குளம் அணுமின் நிலையம் 3 மாதங்களில் செயல்படத் தொடங்கும் என, இந்திய அணுசக்தி ஆணையத் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி கூறினார்.
8. தஞ்சை மாவட்ட விவசாய பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து பிப்ரவரி 5ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
9. நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இந்தியா 6வது இடத்தில் உள்ளதாக ஜி.இ. நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10.அடிலெய்டில் நடைபெற்ற இறுதி மட்டைப்பந்துப் போட்டித் தொடரிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.இத்தொடருடன் ராகுல் திராவிட் ஓய்வுபெறுவார் என நம்பப்படுகிறது.                                                           


Free Code Script

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece