நுண்ணுயிரியியலின் தந்தை - லூயி பாஸ்டியர் பிறந்த நாள்
* நேரடி மருத்துவராக இல்லாமல் மருத்துவத் துறைக்கும், நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் முதன்மைப் பங்களித்தவர் பிரெஞ்சு அறிஞர் லூயி பாஸ்டியர்.
* இவர் வாழ்ந்த 19 ஆம் நூற்றாண்டில் கால்நடைகளையும் மனித குலத்தையும் நோய்கள் பிடித்து அல்லல்படுத்தின. பாஸ்டியரே தன்னுடைய மூன்றுமகள்களை டைபாய்டு நோய்க்குப் பலிகொடுத்துள்ளார். இந்தப் பின்னணியில்தான் அவருடைய கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
* அவருடைய தாய்நாடான பிரான்சில் வேளாண்மைத் துறை சந்தித்த பெரும் சவால்களைப் பாஸ்டியர்தான் களைந்தார். ஒயினை நொதிக்க வைக்கும்போது சீர்கெட்டுப் போவதற்கான காரணம், பட்டுப் புழு வளர்ப்பைப் பாதித்த பெப்ரீன் நோயிலிருந்து மீட்பு மட்டுமில்லாமல் கோழிகளைத் தாக்கிய காலரா நோய், கால்நடைகளைத் தாக்கிய ஆந்த்ராக்ஸ் நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைக் கண்டறிந்ததற்காக, பாஸ்டியர் கொண்டாடப்படுகிறார்.
* அறிவியல் ஆய்வுகளை, ஆய்வகங்களுக்கு உள்ளேயே அடைபட்டுக் கிடந்து அவர் கண்டறியவில்லை. ஒவ்வொரு புதிய அறிவியல் சவால் அவரை அழைத்தபோதும், நேரடியாகக் களத்துக்குச் சென்றார். உரிய புரிதலைப் பெறுவதற்காக, அது சார்ந்து அனுபவம் பெற்றவர்களை, நேரில் சந்தித்தார். நேரடிக்கள ஆய்வு அவருடைய ஆராய்ச்சியின் அடிப்படை அம்சமாக இருந்தது.
* அவருடைய மிகப் பெரிய பங்களிப்பு வெறிநாய்க் கடிக்கான சிகிச்சை ஊசியைக் கண்டறிந்ததுதான். பாஸ்டியரின் ஆராய்ச்சிக் குழு இதைக் கண்டறிவதற்கு முன்னர்வரை, வெறிநாய்க்கடிக்கு ஆளானவர்கள், இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருந்ததன.
* வெறிநாய் கடித்தால், அந்த நாயைப் போலவே நடந்து கொண்டு, நீருக்குப் பயந்து ஒடுங்கி இருந்து, பரிதாபமாக மக்கள் இறந்து போனார்கள். 'நன்றாகப் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சூடுபோட்டு சதையைக் கொத்தாக வெட்டி எடுத்தல்' என ரத்தம் உறைய வைக்கும் முறைகள் அந்த நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்டன.ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.
* பாஸ்டியர், பல நாய்களின் பின்னால், உயிரை பணயம் வைத்துத் திரிந்தார். அவற்றின் எச்சிலில் இருக்கும் கிருமிகளே நோய்க்குக் காரணம் என்று உணர்ந்தார். நாயின் உமிழ் நீரை, தானே உறிஞ்சி, மருந்தாகப் பயன்படுத்தி, நாய்க்கடியால் தாக்கப்பட்டுப் பதினான்கு இடங்களில் கடிபட்டிருந்த ஜோசஃப் மிஸ்டர் என்கிற ஒன்பது வயதுச் சிறுவனின் உடலில் செலுத்தி, பதினான்கு நாட்களில் அவனைக் குணப்படுத்தினார். ராபிஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி உருவானது.
* தீவிரமான ஆராய்ச்சி, தொடர் உழைப்பு, துணிச்சலான முடிவெடுக்கும் திறன் ஆகியவை அவரது ஆராய்ச்சிகளின் அடித்தளமாக அமைந்துள்ளன. மற்றவர்களால் அவிழ்க்க முடியாத அறிவியல் புதிர்களுக்கு, தன் சிந்தனைத் திறனால் பாஸ்டியர் விடை கண்டறிந்துள்ளார்.
* அறிவியல் ஆய்வு ஒன்றையே முதன்மையாகக்கொண்டு வாழ்நாளெல்லாம் இயங்கியுள்ளார். அதேநேரம் அவருடைய வெற்றி என்பது தனிநபரின் சாதனையல்ல. அவருக்குத் துணையாக, அக்கறையான மனைவி, செயலுறுதி வாய்ந்த உதவியாளர்கள் திறம்படச் செயலாற்றி இருக்கிறார்கள்.
* மது தயாரிப்பில் சில நுண்ணுயிரிகள் ஏற்படுத்தும் விளைவுகளைத் தடுக்க, தயாரிப்பு நடைமுறையின்போது மதுவை வெப்பப்படுத்துதல், பிறகு நுண்ணுயிரிகள் வளர்வதற்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் செய்தல் ஆகிய நடைமுறைகளை அறிவியல்பூர்வமாகப் பரிசோதித்து, பாஸ்டியர் கண்டறிந்தார். இந்த முறை பலனளித்தது. இதுவே, பிற்காலத்தில் பாஸ்டராக்கம் (Pasteurization) என்றழைக்கப்பட்டது.
* பால் போன்ற கால்நடை உற்பத்திப் பொருள்களிலும் நுண்ணுயிரிகள் எளிதில் பெருகுகின்றன. அவற்றைத் தடைசெய்வதற்கான பதப்படுத்தும் நடைமுறையே பாஸ்டராக்கம். மகத்தான அறிவியல் வெற்றிகளைப் பெற்ற பாஸ்டியர்.
* இளம் வயதில் பிரகாசமான மாணவராக இருந்ததில்லை. கல்லூரிப் படிப்புக்குப் பிறகே பரிமளிக்கத் தொடங்கியுள்ளார். இளம் வயதில் ஓவியத்தில் ஆர்வம்கொண்டிருந்த அவர், தோல் பதனிடும் சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்.
* அறிவியலின் செயல்முறைகள் மீது பெருமதிப்பும், தீவிரப் பிடிப்பும் கொண்டவராகவே இருந்திருக்கிறார். மேற்கத்திய நடைமுறைப்படி இருவர் சந்தித்துக் கொள்ளும்போதும் விடைபெறும்போதும் சம்பிரதாயமாகக் கைகுலுக்கிக்கொள்வது வழக்கம். நுண்ணுயிரிகளைப் பற்றி அதிகம் அறிந்திருந்த பாஸ்டியர், அக்காலத்திலேயே, மற்றவர்களிடம் கைகுலுக்குவதை விரும்பாதவர்.
* பாஸ்டியர் இல்லாமல் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் பல செயல்பாடுகள் நகர்வதில்லை. அதேநேரம், மனித குலத்துக்கு தன்னுடைய ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக, பாஸ்டியர். உருவாக்கிய புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான பாஸ்டியர். இன்ஸ்டிடியூட், இன்றைக்கு உலகெங்கும் கிளைகள் பரப்பி இருக்கிறது.
* உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அவரது வழிவந்தவர்கள் மருத்துவத் துறையிலும், அறிவியல் ஆராய்ச்சித் துறையிலும் இன்றைக்கும் பெரும் பங்களித்து வருகின்றனர். அவரது வழிவந்தவர்களில் பத்துக்கும் மேற்பட்டோர் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
* இவர் ஓயாமல் ஆய்வில் மூழ்கி உலகை மறந்திருந்தார். இது எந்த அளவுக்குப் போனது என்றால் இவரைத் திருமண நாளன்று காணவில்லை. எங்கெங்கும் தேடிப்பார்த்தார்கள். ஆளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஓடிப்போய் விட்டார் என்று எண்ணிக்கொண்டு இறுதி முயற்சியாக அவரின் ஆய்வகம் நோக்கிப் போனார்கள். அங்கே எதைப்பற்றிய சிந்தனையும் இல்லாமல் ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
* “உனக்கு இன்றைக்குத் திருமணம்” என்று சொல்லி இழுத்துக்கொண்டு போனார்கள். தன்னலம் மறந்து, மற்றவர்களுக்காக உழைத்தவர் லூயி பாஸ்டியர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக