இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள்
* நாடெங்கும் பசுமைப் புரட்சி தீவிரமாகப் பரவிய அதே காலகட்டத்தில், இயற்கை விவசாயம் தொடர்பாகத் தனது வாழ்நாள் பயணத்தைத் தொடங்கினார் நம்மாழ்வார். அதற்காக, தான் பார்த்துவந்த அரசு வேலையான மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனப் பணியையும் உதறினார்.
* பசுமைப் புரட்சியின்போது அரசு உரங்களை ஊக்குவித்துக்கொண்டிருந்த காலம் அது. நம்மாழ்வார் கால்நடையாகக் கிராமந்தோறும் சென்று விவசாயிகளைச் சந்தித்தார். உரப் பயன்பாட்டால் மண்ணின் காரத்தன்மை கூடி, அது அளவுக்கு அதிகமான தண்ணீரை உறிஞ்சுகிறது என்பதைச் சிறிய செயல்விளக்கம் மூலம் நிரூபித்துக் காட்டினார் நம்மாழ்வார். இன்றைக்கு இயற்கை விவசாயம்பற்றி தமிழகத்தில் ஓரளவேனும் விழிப்புணர்வு இருக்கிறது என்றால், அதற்கு நம்மாழ்வாரின் படிப்படியான செயல்பாடுகளே காரணம்.
* பலரும் நினைப்பதுபோல் நம்மாழ்வார் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எதிரானவர் அல்லர்.பயோடெக்னாலஜியின் அத்தனை பரிமாணங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார் நம்மாழ்வார். இது அவரது வானகம் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்பவர்களுக்கு நன்கு தெரியும். மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மூலம் மண்ணுக்கு, மனிதனுக்குக் கேடு ஏற்படும் என்பதால்தான் நம்மாழ்வார் எதிர்த்தார்.
* கேடு விளைவிக்கும் மரபணு மாற்றுப் பயிர்களை எதிர்த்த நம்மாழ்வார், நமது பாரம்பரிய ஒட்டுரகங்களை ஆதரித்தார். இவரது வழிகாட்டுதலில் ஒரு புதிய ஒட்டு எலுமிச்சை ரகத்தையே உருவாக்கினார் புளியங்குடி அந்தோணிசாமி.
* ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் நெல் நடவு என்பது உலக அளவில் பிரபலமானது. ஒற்றை நாற்று நடவு அல்லது செம்மை நெல் சாகுபடி என்றழைக்கப்படும் மடகாஸ்கர் நெல் நடவு 1960-களில் வெளியே தெரிந்தது. ஆனால், விதை, நீர், நேரம் அனைத்தையும் குறைத்து, மகசூலை மட்டும் அதிகமாகக் கொடுத்த ஒற்றை நாற்றுநடவை உலகுக்கே அறிமுகப்படுத்தியது தமிழர்கள்தான் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தவர் நம்மாழ்வார். இன்றைக்குத் தமிழகத்தில் ஒற்றை நாற்று நடவு பிரபலமாகி, ஏக்கருக்கு 27 மூட்டைகள் வரை நெல் மகசூல் ஈட்ட முடிகிறது என்றால் அதற்குக் காரணகர்த்தா நம்மாழ்வாரே!
* 1960 மற்றும் 70-களில் கலப்பின ரகங்கள் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது கலப்பினங்களைப் பற்றிப் படித்தவர்கள், அனுபவம் வாய்ந்த விவசாயிகளிடையேகூடப் பெரிதாக விழிப்புணர்வு இல்லை. அந்த நேரத்தில் “கலப்பினம் மற்றும் வீரிய ரகங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் உற்பத்தியைப் பெருக்குவதற்காக அல்ல; மாறாக, ரசாயன உரங்களை விற்பனை செய்வதற்கான அரசியலே பசுமைப் புரட்சி பெயரிலான கலப்பின ஊக்குவிப்பு” என்று அன்றே சொன்னார் நம்மாழ்வார்.
* நம்மாழ்வார் வேளாண் விஞ்ஞானி மட்டும் அல்ல... மிகச் சிறந்த சுற்றுச்சூழலியலாளரும் ஆவார். மேற்குத்தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகள் அழிவை எதிர்த்துக் கடைசி வரை போராடினார். சோலைக்காடுகள் இல்லை எனில், ஆறுகள் உற்பத்தி கிடையாது.சோலைக்காடுகள் இல்லை எனில், மனிதனுக்குச் சோறு இல்லை என்பதைத் தனது பிரச்சாரங்களில் வலியுறுத்திவந்தார்.
* நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு - தனது எந்த ஒரு கூட்டத்திலும் இந்த வசனத்தைப் பேசத்தவறியதே இல்லை நம்மாழ்வார்.
* நம்மாழ்வாரின் தமிழ் பெரும்பாலும் பாமரத் தமிழ்தான். ஆனாலும், தமிழ் இலக்கியம் தொடங்கி ஆங்கில இலக்கியம் வரை அவருக்குப் பரிச்சயம். பெரியாரியம் தொடங்கி மார்க்சியம் வரைக்கும் பாமரத் தமிழில் சொன்னால்தானே ஏழை விவசாயிக்குப் புரியும் என்பார்.
* விவசாயிகளிடம் சென்று பப்பாளி, கொய்யா, வாழை, நாவல் போன்றவை பயிரிடுங்கள் என்பார். தனது கூட்டங்களிலும், ‘‘ஆப்பிள் அரை கிலோ 60 ரூபாய். அதைவிட அதிகம் சத்து இருக்கிற கொய்யா அஞ்சு கிலோ அம்பது ரூபாய். எதைச் சாப்பிடப்போறீங்க?’’ என்று நமது பாரம்பரியப் பழங்களையே வலியுறுத்துவார். ஆப்பிள், ஆரஞ்சு போன்ற அந்நியப் பழங்களைச் சாப்பிடுவதையும் இயன்றவரை தவிர்த்தே வந்தார்.
* பி.டி. கத்திரியை இந்தியாவில் அறிமுகம் செய்யலாமா என்று அன்றைய மத்திய சுற்றுச்சூழல்அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் நடத்திய கருத்துக்கேட்புக் கூட்டங்களில் தனது பிரதிநிதிகளை அனுப்பி பி.டி-க்கு எதிராகப் பேசச் செய்தார் நம்மாழ்வார். அதேபோல் நம்மாழ்வாரின் நண்பர்களான அரச்சலூர் செல்வம், டாக்டர் சிவராமன் ஆகியோர் அன்றைக்குத் தமிழக முதல்வராக இருந்த கலைஞர்.மு.கருணாநிதியிடம் நேரில் சென்று பி.டி-யின் கேடுகளை எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் அதற்குத் தடை உத்தரவும் பெற்றனர்.
* தொடக்கத்தில் சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம் தொடர்பாகப் பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக இயங்கிவந்தன. ஆனால், நம்மாழ்வார் ஆசைப்பட்டதாலேயே பூவுலகின் நண்பர்கள், ரிஸ்டோர், தமிழ்நாடு வணிகர்கள் சங்கம், பெண்கள் இணைப்புக் குழு, இந்திய நல்வாழ்வு நல்லறம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் ஒன்றிணைந்து பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு 2008 இல் தொடங்கப்பட்டது.
* 1990-களில் ஊடக விளம்பரங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பிரச்சாரங்கள் எனத் துரித உணவுக் கலாச்சாரம் இந்தியாவை மென்று தின்றுகொண்டிருந்தன. அப்போது இத்தாலி நாட்டில் நடந்த துரித உணவுக்கு எதிரான ஒரு பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திரும்பிய நம்மாழ்வார், இங்கு ஆரம்பித்ததுதான் ‘ஸ்லோ ஃபுட் மூவ்மெண்ட்’. இன்றைக்கு, பளபளக்கும் பல்பொருள் அங்காடிகளில் கெலாக்ஸ்களுடன் நமது பாரம்பரியத் தானியங்களான சாமையும் கம்பும் போட்டிபோட முடிகின்றன என்றால், அதற்குக் காரணம் நம்மாழ்வாரே!
* தனது வாழ்நாளில் அலோபதி மருத்துவத்தை வேண்டாம் என்று ஒதுக்கியவர், கடந்த மூன்று ஆண்டுகளாக அக்குபஞ்சர் மருத்துவத்தில் ஆர்வம்காட்டினார். அதில் நிறையக் கற்றுக்கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்.
* நம்மாழ்வாருக்கு நல்ல குரல் வளம். வயலில் இறங்கிவிட்டால் பாட்டு தானாக வந்துவிடும். பட்டுக்கோட்டையாரின் தத்துவப் பாடல்கள், பாரதியின் ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?’ போன்றவை அவர் அடிக்கடி ராகமிட்டுப் பாடும் பாடல்கள்.
* நம்மாழ்வார் பகலில் பெரும்பாலும் உறங்குவது இல்லை. அவர் துயில் எழுந்தால் அது அதிகாலை 4.30 மணி என்று உறுதியாகச் சொல்லலாம். எழுந்ததும் வேப்ப மரப்பட்டையால் பல் துலக்கிவிட்டு, தலைகீழாக நின்று சிரசாசனம் செய்வார். பிறகு, மூச்சுப் பயிற்சி. அதன் பின்தான் அவரது வழக்கமான அலுவல்கள் தொடரும்.
* தன் வாழ்நாளின் இறுதிவரை, இளைஞர்களை அதிகம் நம்பினார் நம்மாழ்வார். கரூர் மாவட்டத்தில் இருக்கும் அவரது வானகம் பண்ணையில் சுமார் 6,000 இளைஞர்கள் இயற்கை விவசாயப் பயிற்சியை முடித்திருக்கிறார்கள்.
* காந்தியைப் போன்றே மேலாடையைத் துறந்தவர் நம்மாழ்வார். கடைசிவரை தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர், கடும் பனிக்காலத்திலும்கூட சட்டை அணிய மாட்டார்.
* வாழ்நாளின் பெரும்பாலான நாள்களைப் போராட்டங்களிலும் பயணங்களிலுமே செலவிட்டார். எங்கு சென்றாலும் பேருந்து, ரயில் என பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தினார்; மற்றவர்களுக்கும் அதையே வலியுறுத்தினார். அவரது நண்பர்கள், நலம்விரும்பிகள் அவருக்கு கார் வாங்கித் தர முன்வந்தும் “என்னால முடிஞ்சவரைக்கும் சூழல் கேட்டைக் குறைச்சுக்குறேனே” என்று தவிர்த்துவிட்டார்.
* அவர் தனது வாழ்க்கைத்துணை சாவித்திரியை 50 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஒருமையில் அழைத்தது கிடையாது. “வாங்க… போங்க” என்று மரியாதையுடன்தான் அழைப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக