‘நான் யார்?' விடைகண்ட ரமண மகரிஷி!
ஸ்ரீ ரமணர் மதுரைக்குக் கிழக்கே முப்பது மைல் தொலைவிலுள்ள திருச்சுழி என்னும் கிராமத்தில் 1879-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் நாள் பிறந்தார். பெற்றோர்கள் சுந்தரமய்யர் அழகம்மை ஆவர். ரமணருக்கு பெற்றோர் வைத்த பெயர் வேங்கட ராமன். அவருக்கு நாகசாமி என்ற மூத்த சகோதரரும் நாகசுந்தரம் என்ற இளைய சகோதரரும் உண்டு. அலமேலு இளைய சகோதரி.
திருச்சுழி பஞ்சாயத்துத் தலைவராயிருந்த சுந்தரமய்யர் இறந்தபோது ரமணருக்கு வயது பதினொன்று. தந்தையின் மரணம் வாழ்வு, சாவு பற்றிய உண்மையை அவருக்கு உணர்த்தியது. ரமணருக்கு விளையாட்டில் இருந்த அளவு விருப்பம் படிப்பில் இல்லாமல் போனது. தந்தையின் மறைவுக்குப் பிறகு சுந்தரமய்யரின் சகோதரர்களான சுப்பையரும், நெல்லையப்பரும் அக்குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ரமணர் மதுரையில் இருந்த சித்தப்பா சுப்பையர் வீட்டில் தங்கிப் படித்தார்.
1896 ஜூலை மாதத்தில் ஒருநாள் வீட்டு மாடியில் இருந்த போது அவரை மரண பயம் கவ்விக் கொண்டது அவர் முழு உணர்வோடு இருந்தாலும் உடல் பிணம் போல் விறைத்துப் போனது. அவருள் ‘நான் என்பது என்ன?’ என்ற கேள்வி எழுந்தது. உடம்பின் செய்கையில் இருந்து வேறுபட்டு இயங்கும் ஓர் ஆற்றல் அது என்று அவர் உணர்ந்தார். அந்த உணர்வு உறுதிப்பட அவருடைய மரணபயம் நீங்கியது. அந்நிகழ்ச்சிக்குப் பிறகு சாதாரண வாழ்க்கை என்பது அவருக்கு இயலாது போயிற்று. அடிக்கடி அவருக்கு சமாதி அனுபவம் ஏற்பட்டது.
ஒருநாள் சுப்பையரைப் பார்க்க வந்த நண்பரொருவர் தாம் திருவண்ணாமலை சென்று வந்ததையும், அருணாசலேஸ்வரர் மகிமையையும் கூறக் கேட்டார் ரமணர்.ரமணர் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அந்த நண்பர் சொன்னதைக் கேட்டதிலிருந்து அவருக்குப் படிப்பில் நாட்டம் குறைந்தது. ஸ்ரீரமணருக்கு மனம் முழுவதும் அருணாசல நினைவாயிருந்தது. திருவண்ணாமலையிலிருந்து தமக்கு அழைப்பு வந்ததாய் அவருக்குத் தோன்றியது.
வீட்டில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்றார். ‘நான் என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவரது உத்தரவின் பேரில் கிளம்பிவிட்டேன். இது நல்ல காரியத்தில் பிரவேசித்து இருக்கிறது. யாரும் இது குறித்து வருந்த வேண்டாம் என்பதே அக்கடிதத்தில் இருந்த செய்தி. தடைகள் பல கடந்து 1896 செப்டம்பர் முதலாம் நாள் அவர் திருவண்ணாமலையை அடைந்தார்.நேராக கோவில் கருவறைக்குச் சென்று ‘அப்பா, நான் வந்து விட்டேன் என்று தன் வருகையை அறிவித்தார்.
சில மாதங்கள் உடலை மறந்து இதயத்தில் மூழ்கி இதய ஆனந்தத்தில் திளைத்தார். முழு மவுனத்தில் இருந்தார். அவ்வப்போது யாரேனும் ஒரு கவளம் உணவை அவருடைய வாயில் திணிப்பார்கள்.அவர் உணவிட்டவரையும் அறியார், தாம் உண்டதையும் அறியார். ரமணரைத் தரிசிக்க பக்தர்கள் திரள் திரளாய் வந்தனர். அது அவருடைய தியானத்துக்கு இடையூறாக இருந்தது.
அவர் பாதாள லிங்கேசுவரர் கோயிலுக்குள் இருந்த குகையில் தியானத்தைத் தொடர்ந்தார். சேஷாத்ரி சுவாமிகள் மூலம் அவரது பெருமை மேலும் பரவலாயிற்று. மீனாட்சி அம்மாள் என்கிற பெண்மணி அவருக்குத் தொண்டு செய்து வந்தார். பிற்பாடு ‘குருமூர்த்தம்’, ‘மாந்தோப்பு’ என்று இடம் மாறி நிஷ்டையில் இருந்தார். பல குன்றுகளிலும், குகைகளிலும் தியானம் செய்தார்.
ரமணரின் இருப்பிடம் தேடி அவரது தாயாரும், மூத்த சகோதரரும் அவரைக் காண வந்தனர். மகான் நிலையில் இருந்தவரைக் கண்டு வியந்தனர். தங்களுடன் ஊருக்கு வரும்படி அழைத்தனர். ஆனால், ரமணர் அவர்களுடைய வேண்டுகோளை மறுத்துவிட்டார்.
கணபதி முனிவர், சிவப்பிரகாசம் பிள்ளை போன்றோர் ரமணருக்கு நெருக்கமாயினர். அருணாச்சல பஞ்சரத்னம், உபதேசசாரம், அட்சரமணி மாலை போன்ற பல நூல்களை ரமணர் இயற்றினார்.அவர் மிகவும் எளிமையானவர். பின்னாளில் ஆசிரமம் அமைத்து வசித்தபோது அங்கே பக்தர்களுக்கு உணவு சமைக்கும் வேலையிலும் உதவுவார். அவர் சிக்கனமானவர். சிறு காகிதத் துண்டையும் தூக்கி எறியாமல் ஏதாவது குறிப்புகள் எழுதப் பயன்படுத்துவார். உணவளிப்பார். பறவைகளிடத்தும் விலங்குகளிடத்தும் அன்பு காட்டி, ரமணரின் புகழ் எங்கும் பரவியது.
வெளிநாட்டவர் பலரும் அவரைத் தரிசிக்க வந்தார்கள். உள்நாட்டிலும் சிலர் அவருடனேயே சீடர்களாய் தங்கிவிட்டனர். எல்லாருடைய சவுகரித்துக்காகவும்தான் ஆசிரமம் அமைக்கப்பட்டது.தனது குடும்ப உறுப்பினர்களுக்கு தீட்சை அளித்தார் ரமணர் .ரமணருடைய மூத்த சகோதரர் இறந்த பின், அண்ணி யாரும் காலமானார். இளைய சகோதரி துறவறம் மேற்கொண்டார். இளையவர் நாகசுந்தரத்தின் மனைவியும் மரித்தார்.
அதனால் ரமணரின் தாயாரும் இளைய சகோதரரும் திருவண்ணாமலைக்கே வந்து விட்டனர். இளையவர் ‘நிரஞ்சனானந்த சுவாமிகள்’ என்கிற தீட்சா நாமத்துடன் (ரமணரால் தீட்சையளிக்கப்பெற்று) ஆசி ஆசிரமப் பொறுப்பேற்றார்.1922 மே மாதம் உடல் நலக் குறைவுற்று தாயார் இறந்த போது ரமணர் அவருக்கு ஹஸ்த தீட்சை அளித்து பிறப்பற்ற முக்தி கிடைக்கச் செய்தார். ரமணர் ஆசிரமம் பெரிய அளவில் வளர்ச்சி கண்டது. அவருடைய நூல்களை வெளியிட்டு விற்பனை செய்ய ஆசிரமத்தில் ஒரு தனிப் பிரிவே இயங்கி வந்தது.
ரமணருக்கு எழுபது வயதானபோது உடம்பில் கட்டிகள் தோன்றின. அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்தும் தொந்தரவு நீங்கிய பாடில்லை. அவருடைய எழுபதாவது வயதைக் குறித்து ரமண ஜயந்தி வெகு விமரிசையாய் கொண்டாடப்பட்டது.
சுவாமிகள் தங்களை விட்டுப் போவதை எண்ணி பக்தர்கள் பெருந்துயரத்துக்குள்ளாயினர்.அவர் சொன்னார், ‘நான் எங்கே போவேன், இங்குதான் இருப்பேன் என்று. அன்று 16.4.1950 வெள்ளிக்கிழமை இரவு மணி 8.47. பகவான் ரமணர் மகா சமாதி அடைந்தார்.
அவர் மரணம் அடைந்த அன்று வானில் ஒளிமிக்க விண்மீனாய் அவர் ஆன்மா ஊர்ந்து சென்றது. அருணாசலத்தின் உச்சியை அடைந்து மறைந்தது. அன்று ஆயிரக்கணக்கானவர்கள் அந்த ஜோதியைக் கண்டனர். இன்று ஒவ்வோர் இதயத்திலும் ஒளிவிடும் விளக்காய் அவர் விளங்குகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக