24 மார்ச், 2022

உலக காசநோய் தினம் (மார்ச் 24)

     உலகில் வேகமாக பரவும் நோய்களில் காசநோய் முக்கியப் பங்கு வகிக்கிறது. உலக அளவில் இந்நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 2 ஆவது இடத்தில் உள்ளதாக ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

     ஒவ்வொரு நாளும், 4000 பேர் காச நோயினால் இறந்துவிடுகிறார்கள். மனிதனின் நகம், தலைமுடி தவிர மற்ற பாகங்களில் இந்நோயின் தாக்கம் உள்ளது. குறிப்பாக, நுரையீரல் புற்றுநோயே, பலரின் இறப்புக்குக் காரணமாகிறது.

    சிகிச்சை நல்ல பலன் அளிக்கும் என்பதனைப் போல் சிகிச்சை இன்மை ஆபத்தான விளைவுகளையும் அளிக்கும் என்பதனை உணர்த்துவதும் ‘உலகக் காச நோய் தினத்தின்’ நோக்கம் ஆகும். 

    இந்நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் பெயர் "பையோ பாக்டீரியம் டியூபர்க்ளோஸிஸ்" என்பது ஆகும். உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் எண்ணத்துடன் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

 உலக காசநோய் நாள் உலக சுகாதார அமைப்பினால்   அதிகாரப்பூர்வமாகக் கடைப்பிடிக்கப்படும் எட்டு உலகளாவிய பொதுநலனுக்கான நாள்களில் ஒன்றாகும். உலகச் சுகாதார நாள், உலகக் குருதிக் கொடையாளர் நாள், உலக நோய்த்தடுப்பு வாரம், உலக மலேரியா நாள், உலகப் புகையிலை எதிர்ப்பு நாள், உலகக் கல்லீரல் அழற்சி நாள், உலக எயிட்சு நாள் ஆகியவை ஆகும். 

 காச நோய் அறிகுறிகள்: 

1. இரண்டு வாரத்திற்கு மேல், இருமல், காய்ச்சல்
2. சளியுடன் கூடிய இருமல்
3. இருமும்போது சளியுடன் ரத்தம் வெளியேறுதல்
4. பசியின்மை
5. எடை குறைதல்
6. இரவில் வியர்வை 

 சிகிச்சை:  'மான்டோ’ பரிசோதனை மூலம் காச நோய் கிருமித் தொற்றைக் கண்டறியலாம். பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்தால் அவர்களுக்குக் காச நோய் உள்ளது என்று அர்த்தம். இவர்களுக்கு, மேலே சொன்ன அறிகுறி இருந்தால், உடனடியாகச் சிகிச்சை எடுக்க வேண்டும். முறையான, சரியான நேரத்தில் பரிசோதனை, 6 மாதத் தொடர் சிகிச்சை, சத்தான உணவுகள் மூலம், இந்நோயிலிருந்து மீளலாம்.

காசநோயாளிகள் தவிர்க்க வேண்டிய பொருள்கள் 

காசநோயாளி, பீடி, சிகரெட், புகையிலை, மதுபானம் அல்லது மற்ற போதை தரக்கூடிய பொருட்கள் உட்கொள்வதைத் தவிர்க்கவேண்டும். குளிர்ச்சியான பொருட்களை தவிர்த்தல் வேண்டும்.

காச நோய் - செய்யவேண்டியதும் மற்றும் செய்யக்கூடாததும் 

செய்யவேண்டியவை

  • மூன்று வாரங்களோ அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து இருமல் இருந்தால் சளி பரிசோதனை செய்யவேண்டும். இந்த பரிசோதனை இலவசமாக அரசு சளி நுண்ணுயிர் மையத்தில் செய்யப்படும்.
  • அனைத்து மருந்துகளையும் தொடர்ந்து முழுகால அளவுகளுக்கு எடுக்கவேண்டும்.
  • டி.பி. குணப்படுத்தக்கூடியது என்பதை புரிந்து கொள்ளவும்.
  • தும்மல் மற்றும் இருமல் ஏற்படும் பொழுது கைக்குட்டையை உபயோகப்படுத்தவும்.

செய்யக்கூடாதவை

  • மூன்று வாரங்களோ அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து இருமல் இருந்தால் மருத்துவ உதவியை தவிர்க்க கூடாது.
  • டி.பி.-யை கண்டுபிடிக்க எக்ஸ்ரேயை மட்டும் சார்ந்து இருக்கக்கூடாது.
  • மருத்துவர் அனுமதியில்லாமல் மருந்துகளை நிறுத்தக்கூடாது.
  • டி.பி. நோயாளிகளிடம் பாகுபாடு காட்டக்கூடாது.
  • கண்ட இடங்களில் எச்சில் துப்பக்கூடாது.

12 மார்ச், 2022

உலக சிறுநீரக தினம்

 


சிறுநீரகம் காக்கப் பத்துக்கட்டளைகள்:

உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்களால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். நாள் ஒன்றுக்குத் தேவையான சமையல் உப்பின் அளவு 5 கிராம் மட்டுமே. உப்பு நிறைந்த ஊறுகாய், கருவாடு, அப்பளம், உப்புக் கண்டம், சமையல் சோடா, வடாம், வத்தல், சிப்ஸ், சாஸ், பாப்கார்ன், பாலாடைக்கட்டி, புளித்த மோர், சேவு, சீவல், சாக்லேட், பிஸ்கட், 'ரெட் மீட்' என்று சொல்லக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், உடனடி உணவுகள், செயற்கை வண்ண உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துங்கள்.

சிறுநீரை அடக்கி வைக்கக்கூடாது. சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே கழித்து விட வேண்டும்.

தினமும் குளிக்கும்போது இனப்பெருக்க வெளி உறுப்புகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.

மது அருந்தாதீர்கள்.

தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்.

புகை பிடிக்காதீர்கள்.

தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக கடைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடாதீர்கள்.

3 மார்ச், 2022

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் பிறந்தநாள்

      அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக , இவர் கொண்டாடப்படுகிறார்.


     தனது இளமைப் பருவத்தில் பிரித்தானியக் குடிமகனாக இருந்தார். பின்னர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்." இவரது தாயாரும் மனைவியும் செவிப்புலன் குறைவுடையவர்கள். இவரது ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம்.இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.

     கிரகாம்பெல்லின் கடந்த கால அனுபவம்தான் டெலிபோனை உருவாக்கப் பயன்பட்டது. இவர் 1874ல் இரும்பு மற்றும் காந்தத்தை பயன்படுத்தி ஒரு மின்சுற்றை உருவாக்கி, பின் மின்சாரம் இல்லாமல் காந்தத்தை பயன்படுத்தி ஒலியை அதிர வைத்தார்.

     1876 ஆம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசி பேசியது பெல் அவருடைய உதவியாளர் வாட்சன் என்பவரிடம் பேசினார். அவர் முதலில் தொலைபேசியில் பேசிய சொற்றொடர் " வாட்சன் இங்கே வாருங்கள். உங்களைக் காண வேண்டும்."(Watson, come here, I want to see you) என்பதுதான். இந்தச் சொற்களை வாட்சனால் தெளிவாகக் கேட்க முடிந்தது.

      ஆனால் பெல் கண்டுபிடித்த தொலைபேசியைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை அதனால் அவர் மிகவும் சோர்வடைந்தார். பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்தார். அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்துப் பயன்படுத்திய பின்னர் தான் தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது. அமெரிக்காவில் உள்ள தனது மாமனாரின் உதவியுடன் 1876 மார்ச்சு 7 ஆம் தேதி தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்றார்

       பெல்லுக்குப் புத்தாக்க உரிமை வழங்கப்பட்ட பின்பு, மிக விரைவிலே அவர் பிலடெல்பியாவில் நடைபெற்ற நூற்றாண்டு விழாக் கண்காட்சியில் தொலைபேசியைக் காட்சிக்கு வைத்தார். அவரது கண்டுபிடிப்பில் மக்கள் பேரார்வம் கொண்டனர். இவரது கண்டுபிடிப்பிற்குப் பரிசும் கிடைத்தது. எனினும், இந்த கண்டுபிடிப்புக்கான உரிமைகளை 1,000,000 டாலருக்கு ‘Western union telegraph company’ என்ற நிறுவனத்திற்கு வழங்க பெல் முன் வந்தபோதும், அதை வாங்க அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. 

       அதனால் பெல்லும் அவரது நண்பர்களும் சேர்ந்து 1877 ஆம் ஆண்டு, தங்களுடைய சொந்த நிறுவனத்தை நிறுவினார்கள். இதுதான் இன்றைய ‘அமெரிக்க Telephone மற்றும் Telegraph company’ இன் மூதாதையாகும். இவருடைய தொலைபேசிக்கு உடனடியாக பெருமளவில் வணிகமுறையில் வெற்றிகிட்டியது. இவர் நிறுவிய நிறுவனம் இன்று உலகிலேயே மிகப்பெரிய தனியார் வணிக நிறுவனமாகத் திகழ்கிறது.

      இந்தக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி நாம் பேசும் ஒலிஅலைகளை, காந்த அலைகளாக மாற்றி, மீண்டும் ஒலியாக மாற்றினார். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டெலிபோனை உருவாக்கினார். கிரகாம்பெல் வாழ்க்கை குறிப்பு:-

* 1876ல் டெலிபோன் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெற்றார்.

* 1877ல் “பெல் டெலிபோன்’ கம்பெனியை உருவாக்கினார்.

* 1879ல் இது பிரிட்டன் டெலிபோன் நிறுவனத்துடன் இணைந்தது.

* 1880ல் “அமெரிக்கன் பெல் டெலிபோன் கம்பெனி’ என மாற்றப்பட்டது.

* 1881 ஜனவரியில், 25 தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் பெல் இணைந்து ஓரியன்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை உருவாக்கினர்.

* 1922 இல் கனடாவில் உள்ள நோவல் நகரில் கிரகாம்பெல் இறந்தார்.

     தொலைபேசியைக் கண்டுபிடித்ததன் காரணமாக பெல் ஒரு பணக்காரராக ஆனபோதிலும் அவர் தமது ஆராய்ச்சியைக் கைவிடவில்லை. வேறு பல சாதனங்களையும் அவர் கண்டுபிடித்தார். அவர் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டுடிருந்தார். 

        1882 ஆம் ஆண்டில் பெல் அமெரிக்க குடிமகன் ஆனார். கிரகம்பெல் தனியாக மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து 15க்கும் மேற்பட்ட அறிவியல் சாதனங்களைக் கண்டுபிடித்தார். 

உலகக் காட்டுயிர் தினம் (World Wildlife Day)

      அருகிவரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவர இனங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வோராண்டும், மார்ச் 3 அன்று உலகம் முழுவதும் உலகக் காட்டுயிர் தினம் (World Wildlife Day) அனுசரிக்கப்படுகிறது. 

    2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 68 ஆவது அமர்வில் “காட்டு விலங்குகள், மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்” (CITES) மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக தாய்லாந்தினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இம்முயற்சியில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு திரைப்பட விழா, விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை ஐ. நா நடத்திவருகிறது.

       காட்டுயிர்களைச் சுரண்டுவது என்பது 130.000 – 70.000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்கள் வெளியேறிய காலத்தில் இருந்தே மனிதனின் குணவியல்பாக இருந்துவருகிறது. உலகம் முழுவதும் தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்களின் அழிவு விகிதம் கடந்த சில நூறு ஆண்டுகளாக மிகவும் அதிகமாக இருக்கிறது. இதனால் நாம் இந்த உலகில் ஹோலோசீன் பெருமளவு அழிவு எனப்படும். 

      ஆறாவது பெரும் அழிவு நிகழ்வில் இருப்பதாகப் பரவலாகக் கருதப்படுகிறது. காட்டுயிர் அழிப்பு எப்பொழுதும் குறிப்பிட்ட இனங்களின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதில்லை. எனினும் பூமி முழுவதும் எண்ணற்ற இனங்களின் குறிப்பிடத்தக்க இழப்பு, காட்டுயிரை அழித்தலின் திறனாய்வில் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கிறது. 

    திரும்பக்கிடைக்காத வன எண்ணிக்கைகளுக்கு சேதம் விளைவித்தலின் நிலையாக இந்த அழிவு இருக்கிறது. அதிகப்படியாகக் கொல்லுதல், இருப்பிடத்தை அழித்தல் மற்றும் துண்டாக்குதல், அறிமுகப்படுத்தப்பட்ட இனங்களின் தாக்கம் மற்றும் தொடர் அழிவு உள்ளிட்ட நான்கு மிகவும் பொதுவான காரணங்கள் காட்டுயிரை அழித்தலுக்கு வழிவகுக்கின்றன.

     காட்டில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் அதனைச் சுற்றி வாழும் மற்ற உயிர்களுடன் உட்சுற்றுப் பிணைப்பைக் கொண்டுள்ளன. நீர்யானை போன்ற பெரிய தாவர உணவு உண்ணி விலங்குகளில், நீர் யானையில் வளரும் பல ஒட்டுண்ணி பூச்சிகளை பூச்சியுண்ணுகின்ற பறவைகள் உணவாக உட்கொள்கின்றன. இந்த நீர்யானையானது இறப்பதற்கும் கூட இந்தப் பறவைகளின் கூட்டம் காரணமாகிவிடுகிறது. 

       மேலும் இது பறவைகளைச் சார்ந்திருக்கும் மற்ற இனங்கள் பாதிக்கப்படுவதன் மூலமாக தொடர்ந்து அழிவுக்கு வழிவகுக்கிறது. டோமினோ விளைவு எனவும் குறிப்பிடப்படும் இந்தத் தொடர் விளைவுகளின் தொடர்ச்சி, சூழ்நிலையியல் சமூகத்தில் ஏற்படக்கூடிய மிகவும் அழிவு ஏற்படுத்தக்கூடிய செயல்பாட்டிற்கு வெகுதொலைவில் இருக்கிறது. மற்றொரு எடுத்துக்காட்டாக இந்தியாவில் காணப்படும் இரட்டைவால் குருவிகள் மற்றும் உண்ணிக் கொக்குகள், கால்நடைகளின் உடல் மேற்பகுதியிலிருப்பவற்றை உண்கின்றன. 

     அதனால் அவற்றை கிருமி நீக்கம் செய்யப்பட்டவையாக இருக்க விடுகின்றன. ஒரு வேளை நாம் இந்தப் பறவைகளின் இருப்பிடங்களை அழித்தால் அதனால் கால்நடைகளின் எண்ணிக்கையில் இழப்பு ஏற்பட ஏதுவாகலாம். ஏனெனில் அவற்றால் சில நோய்கள் பரவ வாய்ப்பு ஏற்படலாம். பாம்புகளை அழிப்பதால்,எலிகளின் எண்ணிக்கை பெருகி, உணவுப்பஞ்சம் ஏற்படலாம். பறவைகளைக் கொல்வதால், பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.தவளைகளின் அழிவு கொசுக்களின் எண்ணிக்கைப் பெருக்கம்.


    எனவே உயிர்களுக்கிடையே உள்ள பிணைப்பு, உணவுச் சங்கிலியின் இன்றியமையாமை ஆகியவற்றை அறிந்து., வன உயிர்களைக் காப்பது இப்பூவுலகில் வாழும் ஒவ்வொருவரின் கடமையாகிறது.


1 மார்ச், 2022

தினமணி ஏ.என்.சிவராமன்

 தினமணி ஏ.என்.சிவராமன்

    சிவராமன் திருநெல்வேலி மாவட்டத்துக்காரர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்துக்கு அருகில் உள்ள ஆம்பூர் இவரது சொந்த ஊர். இவர் ஆரம்பக் கல்வியை எர்ணாகுளத்தில் பயின்றார். பின்னர் தம் சொந்த ஊரான ஆம்பூருக்குக் குடிபெயர்ந்து, உயர்கல்வியை அம்பாசமுத்திரம் தீர்த்தபதி பள்ளியில் பயின்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் பயின்றபோது, அப்போது மகாத்மா காந்தி சிவில் ஒத்துழையாமை இயக்கத்தில் (1921) கலந்து கொள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். மகாத்மாவின் அழைப்பை ஏற்று விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். அதனால் அவருக்கு பதினெட்டு மாத சிறை தண்டனை கிடைத்தது. அதன் காரணத்தால் அவருடைய கல்லூரி படிப்பு தடைப்பட்டது.

    சிறைத் தண்டனைக்குப் பின் சிவராமன் முன்னணி தமிழ் பத்திரிக்கையாளரான டி. எஸ். சொக்கலிங்கத்தின் தலைமையில் 'காந்தி' பத்திரிகையில் சேர்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் ராஜாஜியின் வேதாரண்ய உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்பதற்காக பத்திரிக்கை வேலையை கைவிட்டார். மீண்டும் சிறை சென்ற சிவராமன் இருபது மாதங்களில் விடுதலையானார். விடுதலையான சிவராமன் 'காந்தி ' பத்திரிக்கையில் மறுபடியும் பணியில் சேர்ந்தார்.    

    1934 ஆம் ஆண்டு தினமணி இதழ் ஆரம்பிக்கப்பட்ட போது, சொக்கலிங்கம் ஆசிரியராகவும் ஏ.என்.சிவராமன் உதவி ஆசிரியராகவும் பணியில் சேர்ந்தார்கள். 1944 இல் சொக்கலிங்கம் தினமணியை விட்டு வெளியேறியபோது, ஏ.என்.சிவராமன் தினமணியின் ஆசிரியராக ஆனார். அதன் பின்னர் தொடர்ந்து 44 ஆண்டுகள் 1987 வரை, தினமணி பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

    'கணக்கன்', 'ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழி', 'குமாஸ்தா', 'அரைகுறை வேதியன்', ‘அரைகுறை பாமரன்(அகுபா) போன்ற புனைப்பெயர்களில் கட்டுரைகள் நிறைய எழுதியிருக்கிறார்.

    தீவிர காங்கிரஸ்காரர், மேலும் காமராசரின் பற்றாளராகத் திகழ்ந்தார். இருந்தபோதும், 1967 தேர்தலை ஒட்டிய காலகட்டத்தில் காங்கிரசுக்கு எதிராக சிவராமன் எழுதிய கட்டுரைகள் ஆட்சி மாற்றத்திற்கு உதவியதாக அறிஞர் அண்ணாதுரை குறிப்பிட்டிருக்கிறார்.

    மொழிகளைக் கற்பதிலும், புத்தக வாசிப்பிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட சிவராமன் தனது 93ஆவது வயதில் புதுக்கல்லூரி பேராசிரியர் உதவியுடன் அராபிய மொழியையும் கற்றிருக்கிறார்.

    பத்திரிக்கையாளனாக இருப்பதற்கு விருது இடையூறாக இருந்து விடக்கூடாதென்பதற்காக நடுவண் அரசின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்மபூஷன் ஆகியவற்றை ஏற்க மறுத்து விட்டார். ஆனால், திருக்கோவிலூரில் 'கபிலர் விருதை'யும், பத்திரிக்கைப் பணியை பாராட்டி அளிக்கப்பட்ட பி.டி.கோயங்கோ (1988) விருதையும், அண்ணா பல்கலைக்கழக வளர்தமிழ் மன்ற விருதையும் (நிறுவியவர் வா.செ.குழந்தைசாமி) ஏற்றுக் கொண்டார்.

    இவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ் ஆக்கப் பணி விருதைப் பெற்றுள்ளார்.

படைப்புகள்

சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணயம்

ரஷ்யப்புரட்சி 17 ஆண்டு அனுபவம்

இந்தியாவின் வறுமை பற்றி கணக்கன் ஆராய்ச்சி

அப்பல்லோ கண்ட விண்வெளி விஞ்ஞானம்

சுதந்திரப் போராட்ட வரலாறு

மேற்கோள்கள்

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece