23 நவம்பர், 2021

உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினம்



 

 “கவிதை எழுதுவது எளிய செயலில்லை. அதற்கு ஆழ்ந்த படிப்பும் கடின உழைப்பும் வேண்டும். கவிதை எழுதுவதற்குப் பதிலாக ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை கொடுத்தால் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்.” - சுரதா 


       இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை பாரதியாரால் மறுமலர்ச்சி பெற்றது. பாரதியார்பால் கொண்ட பற்றின் காரணமாகவே புதுவைக்காரரான சுப்புரத்தினம் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார். 

    தாசன் என்பதற்கு அடியவர், தொண்டர் என்று பொருள். தாசன் என்று முடியுமாறு புனைப்பெயர் வைத்துக்கொள்வது அன்றைய போக்காக இருந்தது. அதனால்தான் முத்தையா என்பவர் கண்ணதாசன் ஆனார். கம்பதாசன், வாணிதாசன் என மேலும் சில பெயர்கள் நினைவுக்கு வருகின்றன.

    செய்யுள் மரபு மாறாமல் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர் சுரதா (இராசகோபாலன்). இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர். 

    “ஓடப்பராய் இருக்கும், ஏழையப்பர்,உதையப்பராகி விட்டால் ஓர்நொடிக்குள், ஓடப்பர் உடையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ” 

என்பவை பாரதிதாசனின் புகழ்பெற்ற வரிகள். 

நாகப்பட்டினத்தை அடுத்த பழையனூரில் 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாளில் பிறந்த இராசகோபாலன் அவ்வரிகளைக் கேட்கிறார். அந்நொடியில் இளைஞர் இராசகோபாலன் அதனை இயற்றிய பாரதிதாசன்மேல் பற்றுக்கொண்டு ‘சுப்புரத்தினதாசன்’ ஆனார். 

 பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா.

அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார். தலைவன் இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார்.

கவிஞர் திருலோக சீதாராமின் சிவாஜி இதழில் தொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன.

திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. 1944ம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார் 100க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். 

 கப்பல் கவியரங்கம், படகுக் கவியரங்கம், முழுநிலாக் கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம், விமானக் கவியரங்கம் என்று பலவாறு முயன்றவர். 'கவிஞர் காலண்டர்' ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில்கூட இருந்தார்.   

சுரதா எழுதிய திரைப்பாடல்கள் எண்ணிக்கையில் முப்பது. எம்ஜிஆரின் 'என் 'தங்கை திரைப்படத்திற்கு எழுதிய 

 “ஆடும் ஊஞ்சலைப் போலவே அலை ஆடுதே” என்பதுதான் சுரதாவின் முதற்பாட்டு. முதல் பாடலின் முதல்வரியே உவமைதான். 

“அமுதும் தேனும் எதற்கு? நீ அருகினில் இருக்கையிலே எனக்கு, ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே, 

ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா, கண்ணில் வந்து மின்னல்போல் காணுதே” 

போன்ற பாடல்கள் சுரதாவினுடையவை. 

 “கவிதை என்பது வரப்பிரசாதமில்லை. கற்றுக்கொண்டு உழைத்தால் வருவது” என்பதில் உறுதியான கருத்துடையவர்.

 தம்மை ’மொழிப்பற்றாளர்’ என்று கூறுவதையும் அவர் ஏற்கவில்லை. “இது மொழிப்பொறுப்பு. பற்று வைத்தல் இன்னொன்றைச் சிறப்பாகக் கண்டவுடன் மாறிவிடக்கூடியது” என்றார். 

எதனைப் பற்றியும் அஞ்சாமல் தடாலடிக் கருத்துகளைக் கூறுபவர் சுரதா. அவற்றில் உண்மையும் இருந்ததால் மறுப்பதும் கடினம்.

“புதுக்கவிதைக்கு வடிவம் இல்லையே, வடிவம் இல்லாதது எப்படி நிலைக்கும்?” என்றார். “மரபு வடிவம் இல்லாமல் இருப்பதால் இப்போதைக்குப் புதிதாகத் தெரிகிறது” என்பது அவரது கணிப்பு.

அது உண்மையும்கூட. தற்போது தம் புதுமையை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்ற இக்கட்டில் புதுக்கவிதையுலகம் இருக்கிறது. மரபுக்கவிதை என்பது தமிழின் தோற்ற வடிவம். அதன் வடிவம் மாறாமல் காப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...