27 நவம்பர், 2011

மழைக் காகிதம் - சிறுகதை


                                                                      மழைக் காகிதம்

                                                                                                அ.மயில்சாமி
                                                                         First Published : 27 Nov 2011 12:00:00 AM IST

வேலப்பன்... ரெண்டு கைகளையும், முழங்காலுக்குள் வைத்தவனாய்...குறுகிப்போய் இருந்தான்.
""என்ன மாப்ளே தறியெல்லாம் எப்படி ஓடுது?''
ஆறுச்சாமி மச்சான், சொந்த அக்காவான பாப்பாத்தியின் வீட்டுக்காரர், வேலப்பனின் பங்காளி சுப்ரமணியத்திடம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
""ஏதோ,வாரம் போகுது.. ஒண்ணும் சரியில்லீங்க மச்சான். ஆளு பாடு தான் பெரும் பாடு''-புலம்பினான் சுப்ரமணி.
எலெக்சன் முதல் இந்நாள்அரசியல் வரை...ஓடிக்கொண்டிருக்க...
வேலப்பன் மட்டும், நிலத்தையே வெறித்துக்கொண்டிருந்தான். அய்யன் இறந்து மூணாவது நாள்...சாதி சனங்க எல்லாம் விருந்தில் மூழ்கி,சொந்த பந்தங்களைக் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
நாலு நாளுக்கு முன்னாடி,தன்னுடன் வண்டியில் உக்காந்து கொண்டு, ""ஏன்டா வேலப்பா...மூலையில் கெடக்கிற வெறுங்காட்டுல 10 தென்னம் புள்ளய நட்டா என்ன?''
கேட்ட அய்யனின் முகம் நினைவுக்கு வர,கண்களில் நீர் ஆறாய் வழிந்தது.
""ஏம்ப்பா, வேலப்பா,துணியக்கூட மாத்தாம இப்புடி குளிருல உக்காந்துட்டு இருக்கியே...மச்சான் எத்தன தடவ உன்னக் கூப்பிடறது?'' அக்காவின் பேச்சு குலுக்க...எழுந்து, துணியை மாற்றினேன்.
ஆச்சு...பால்,நெய் ஊற்றிவிட்டுத் திரும்பிய கையோடு,காகத்துக்கும் அன்னம் வெச்சாச்சு...ஊரே வடை பாயசத்தோடு கூடிய மதிய விருந்தைப் பாராட்டிக்கொண்டிருக்க...ஒண்ணு ரெண்டு பேர்,பால் கறக்கவேணும்னு சொல்லிட்டு கௌம்பிட்டு இருக்காங்க...
""என்ன இருந்தாலும் கவுண்டர் இப்புடி பொசுக்குனு போனது கஷ்டமாத்தான் இருக்கு. பையனுக்கு காலாகாலத்துல ஒரு கலியாணத்த முடிச்சிருந்தாருன்னா நிம்மதியா இருந்திருக்கும்...ம் நம்ம கையில என்ன இருக்கு?'' - பெரிய தனக்காரர் சேர்மேனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்...
""எல்லாஞ்செரிதான்...இந்த பொட்டக்காட்ட வித்துப்போட்டு,காச பதவிசா பேங்குல போட்டு வெச்சுட்டு நிம்மதியா காலம் தள்ளியிருக்கலாம்...அத உட்டுப்போட்டு இந்தப்பையனையும் இப்புடிப் பண்ணீட்டாரே....'' பதிலுக்கு சேர்மேன் சொல்ல...
வேலப்பனுக்கு "சுர்' என்று தைத்தது. ஆறு மாதங்களுக்கு முன், இதே சேர்மேன் தன்னுடைய காட்டை, காத்தாடிக்காரனுக்கு சலீசான ரேட்டுக்கு வித்துட்டு, இப்போ காரும், பாருமா சுத்தறது அய்யனுக்கு சுத்தமாப் புடிக்கலீங்கறத அய்யன், போனவாரம் சொன்னது இப்போ நினைவுக்கு வந்தது-
எழுபது வயதிலும் அய்யனின் அந்த தீர்க்கதரிசனப் பார்வை,வேலப்பனை நிமிர்ந்து நிற்கச் செய்திருந்தது.
""வேலப்பா, நீ எந்தக் காரணத்தக் கொண்டும்,எனக்குப் பின்னிட்டு இந்தக்காட்ட வித்துடாதப்பா. நீ வேணும்னாலும் மேல இன்னும் படிச்சுக்கோ...வேறதொழில் செஞ்சுக்கோ...அப்பிடியே இந்தக் காட்டயும் பராமரிச்சு வெச்சுகிட்டிரு...இந்தக்காடுதான் நம்ம குல தெய்வம் . நம்முளுக்குன்னு இருக்கிற இந்த 2ஏக்கருல 100,150 தென்னம் புள்ளயப் போட்டாலும் வாழ்நாளுக்கும் நம்மளக் காப்பத்தும்''
அய்யன் சொன்னபோது கண்களில் ஒளிவிட்ட அந்த நம்பிக்கையை,கண்ணீர் சற்று அதிகப்படுத்திக் காட்டியது.
""காட்ட நம்பி, நாம என்ன கண்டோம் காடு முச்சூடும் களை முளைச்சுக் கிடக்கு சுத்தம் பண்ணக்கூட,காசு அசலாருகிட்டத்தான் கேட்கோணும்...''
அம்மா அருக்காணி கூறிய போது,அய்யனின் கண்களில் அதுவரை காணாத கோபம்...அம்மா அடங்கிப் போனாள்.
""அய்யா...நானும் ரெண்டு டிகிரி வாங்கியாச்சு...இன்னும் வேலை கெடச்ச பாடில்ல...பேசாம விவசாயத்துலயே எறங்கிடலாமுன்னு பாக்கிறேனுங்க...''
வேலப்பனின் சொல் அய்யாவின் மனதைத் தைத்திருக்க வேண்டும்...தோளில் கிடந்த ஈரத்துண்டை எடுத்து கால் மேல் போட்டவாறு ""நீ சொல்றது நாயந்தான்... ஆனா இந்த வேலை செய்றவனுக்கு இந்தக்காலத்துலே எவனும் பொண்ணு கூடக் குடுக்க மாட்டேங்கிறானே? என்ன சாமி பண்றது....'' நிமிர்ந்து பார்த்த போது அவரது கண்களில் கண்ணீர் பளிச்சிட்டது.
""அதெல்லாம் வேண்டாம். ஒனக்கு வேல கெடச்சா போயிரு...நான் இருக்கிற வரைக்கும்,ஏதோ காய் ,கசம்பு போட்டு சந்தைக்குக் கொண்டுபோனா,ரெண்டுபணம் கெடைக்கும்...கைச்செலவுக்கு ஆகும்...உனக்கும் பாரம் தெரியாது''-உண்மை கொப்பளித்த வார்த்தைகள், வேலப்பனை ஏற்கச்செய்தன.
கூட்டம் மெதுவாகக் கலையத் தொடங்கியது. நாலுமணிவாக்கில், தெக்கால, மாட்டு வண்டியோரமா நடந்த வேலப்பனின் கண்களில் அய்யன் போட்ட மாட்டுச்சாளை தென்பட்டது.
எத்தனை நேரம்...அவருடன் உக்காந்து பழங்கதைகளைப் பேசியிருப்போம்.ஒருநாள் அக்கா பொண்ணு மணியாள் வந்து அப்புச்சி,செவல மாட்டுக்கன்ன எனக்குக் குடுங்க.நாங்க எங்க ஊருக்குக் கொண்டுபோறோம்னு சொன்னதும்,அன்னிக்கு சாயந்தரமே வண்டிபிடித்து கந்தன்வலசுக்கு அனுப்பிவைத்தது ஞாபகம் வந்தது.இன்னிக்கு அந்தக் கன்னு மூணு ஈத்துத் தள்ளியாச்சு...
அக்கா பாப்பாத்தியும்...சும்மா சொல்லக்லக்கூடாது....அய்யன் பேச்சைத் தட்டாத பொண்ணு...போன எடத்துல பதவிசா நடந்திட்டதால,மச்சாங்க்கிட்டயும்,அவுங்க ஆளுககிட்டயும் நல்ல பேர்.கொலத்துல என்ன விசேசம்னாலும், அக்காவத்தான் மொதல்ல கூப்பிடுவாங்க...அப்படி ஒரு வளர்ப்பு.
சரக்கென்று சத்தம் கேட்க...திரும்பியபோது, தட்டுப்போருக்கிட்டேருந்து சின்னையன், ""அய்யாவின் தம்பி ஏங்கண்ணு, அய்யன் பணம்,கிணம் ஏதாச்சி வெச்சிட்டுப்போயிருக்குதா?''
தன் பங்கில் இருந்த ஒரு சிறிய ஒட்டு நிலத்துக்கும்,சண்டைபோட்டுக்கொண்டு பிரித்துக்கேட்ட அதே சின்னையன்...இப்படிக் கேட்டதில் ஒன்றும் அதிசயம் இல்லை.
""வேலப்பா...உஞ் சித்தப்பனுக்கு,அந்தக் கெணத்தோரத்து துண்டு நெலத்து மேல ஒரு கண்ணு...அவனுக்கு அதக் குடுத்துரலாமா சாமி''னு விவரம் தெரியாத வயசுல அய்யன் கேட்டது இன்னும் நினைவில் இருக்கிறது. நானும் உன் சின்னையனும்,சின்ன வயசுல இங்கதான் வெளயாடுவோம்...சொந்த நெலத்த வெச்சுட்டுப் போகட்டும்னு சொல்லி அதை அவருக்கு சும்மாவே எழுதிக்குடுத்ததும்...அய்யன் முகத்தில்தான் எத்தனை சந்தோசம்...இதத்தான் சகோதரப்பாசம்னு சொல்லுவாங்களோ...
""ஊகூம்... தெரியலீங்க...''என்று பதில் கூறியதும், சின்னையன் முகத்தைத் தொங்கப்போட்டவாறே,கெணத்துப்பக்கம் போய்விட்டார்.
என்ன உலகம் இது...ச்சீய்...மேட்டாங்காடு போகும் பஸ்ஸின் ஆரன் சத்தம் வேலப்பனை உசுப்பிவிட்டது.
வாரம் ஒருமுறை இதே பஸ்ஸுக்கு,அய்யன் மேட்டாங்காடு போகும்போது கையில் மழைக் காகிதப் பை சகிதமாகக் காலைக் கருக்கலிலேயே புறப்பட்டுவிடுவார். போனால்,பொழுதுபோயி 8 மணி பஸ்ஸுக்குத்தான் திரும்புவார்.
ஊருல, சனங்க வந்து ஏதாவது உதவி வேணும்னு கேட்டா,அத முடிச்சுட்டுத்தான் வருவார்.எல்லா ஆபீசுகளும் அவருக்கு அத்துப்படி...வரும்போது கை நெறைய பலகாரம்,பழம்னு ஏதாச்சும் வாங்கிட்டு வந்து,நாங்க இரண்டு பேரும் ஆசையாத் திங்கிறதப்பாத்துச் சந்தோசப்படுவார்...மிச்சம் மீதி இருந்தா அம்மாளுக்கும் குடுத்திட்டு மீதி இருந்தா வைக்கச்சொல்லிடுவார். தான் சாப்பிடமாட்டார்...
உழச்சு ஓடாப்போன ஒடம்பு.தினமும் ரேடியோவில செய்தி கேட்பது தவறாது.அவருக்குத் தெரியாதது ஒண்ணுமில்லே...வேலப்பனின் கண்கள் பனித்தன.
அய்யன் பாகம் பிரித்து தோட்டம் போட்டபோது,உழவுமாடுகூட கிடையாது.வாடகைக்கு மாடு வாங்கி ஓட்டியிருக்கிறார்.களர் மண்ணாய் கிடந்த அந்தக்காடு, காய் கசம்பு போடற அளவுக்கு நறுவிசு பண்ணியது அய்யனும் அம்மாளும் தான்... அம்மாளுக்கு அய்யன விட்டா வேற ஒலகம் தெரியாது...அவர விட அறிவு கம்மின்னு அவளுக்குள் ஒரு நினைப்பு இருந்ததும் ஒரு காரணம்.
அம்மாளுக்கு ஒரு தடவை ஒடம்பு முடியாமப் போனபோது, அய்யன் பட்டபாடு சொல்லிமுடியாது.
மனுசன் நடுராத்தியில மாட்டுவண்டியப் பூட்டிகிட்டு,பக்கத்தூரு வைத்தியர்கிட்டேப் போய்க்காட்டி, மருந்து தந்து அம்மா உக்காந்ததும் தான், அய்யனுக்குப் போன உயிர் திரும்பி வந்தமாதிரி இருந்தது.
""இனிமே... நீ காடு,கரையின்னு அலைய வேண்டா...பேசாம சோத்த ஆக்கி வச்சுட்டு சாளையோட இரு'' -அய்யனின் இந்த உத்தரவு நெடுநாள் நீடிக்கவில்லை.
ஒருநாள்...
""செரி...செரி...நீயும் சாளையில தனியா இருந்து என்ன பண்ணப் போறே பேசாமக் காட்டுக்கு வந்து வேப்பமர நெழல்ல வந்து உக்காந்துக்கோ...''
அம்மாளின் முகத்தில் தோன்றிய அந்தப் "பளீர்' ஒளி வேலப்பனின் மனக்கண்களின் முன் திரைப்படமாய் ஒடியது...
அப்படி ஓர் அன்யோன்யம்...அதே அன்யோன்யத்தை அக்கா மச்சானிடமும் பார்க்கமுடிகிறது-இப்போது...
வேலப்பன் இழுத்து ஒரு பெருமூச்சுவிட்டான்.
அப்படியே மெதுவாய் நடந்து சாளைக்கு வந்து சேர்ந்தாயிற்று.அநேகமாய் கூட்டம் பூராவும் கலைந்திருந்தது...சமையலறையில் தெக்கோட்டு மூலையில் அம்மா கருகலாய், உக்காந்திருப்பது தொந்தது.
பூவும் பொட்டுமாய்,எப்படி இருந்த அம்மா...இன்னிக்கு...
அய்யனின் முகம் மறக்க முடியாதபடி ...மீண்டும் மீண்டும்...
""மாமா...இந்தாங்க காபி...'' அக்கா பொண்ணு மணியாள் - காபியை நீட்டியவாறு. இரு கைகளாலும் அதை வாங்கிக்கொண்டு...அப்படியே சேரில் சாய்ந்தேன்...
""குடி ...சாமி..-''அம்மா அருகில் வந்து நிற்பது தெரிந்தது.
""வெள்ளிக்கிழமைகூட உங்கய்யன் மேட்டாங்காடு போய்ட்டு வந்திருக்குது...என்ன ஏதுன்னு விசாரிச்சயா...?''
அய்யன் மேட்டாங்காடு போகும் அந்த ஒரு நாள்தான் அவருக்கு அந்த வாரம் பூராவும் புத்துணர்ச்சியைத்தரும் என்றுதான் தெரியுமே ஒழிய, என்ன எதுக்குன்னு அவங்க யாரும் கேட்டதும் கெடயாது அவரும் சொல்லியது இல்லை...ஏதோ ஒரு உடன்பாடு போல...
""தெரியலீங்கம்மா...''-கண்ணைக் கட்டிக் காட்டில விட்ட மாதி இருந்தது அவனுக்கு.
இனிமேல்...
நினைத்துப் பார்க்கும் போதே...எல்லாம் தலை சுற்றுவது போலிருந்தது...
கெணத்துல தண்ணி இருந்தாலும் பரவாயில்ல...மழை பொய்ச்சுப் போச்சு...இருக்கிற கொஞ்ச நஞ்ச தண்ணியும் கீகாத்துக்குப் போயிரும் போலிருக்கு...
என்ன செய்றது?
காய் கசம்புக்கே கொஞ்சம் கஷ்டம் தான்...எதிர்காலம் கண்ணுக்குத் தொயாத தூரத்துக்குப் போய் விட்டது போல் தெரிந்தது.
சாலையின் முன்னே கூடு கட்டிய டெம்போ வண்டியில்,நிறைய ஆட்கள் வந்து இறங்குவது தெரிந்தது.கூடவே...ஆபீசர் போன்ற தோரணையில் ஒருவரும்,கதர் வேட்டிக்காரர் ஒருவரும்...
யார் என்று நெகாசு தெரியவில்லை...
""அய்யன் வீடு இதுதானே?'' -அதிகாரி போலிருந்தவர் கேட்டார்...
""ஆமாம். வாங்க...''
""நான் மேட்டாங்காடு போஸ்ட் மாஸ்டர்.இவரு அங்கே சிமண்ட் கடை வச்சிருக்கார்...-பேரு ராமசுப்ரமணியம்.அவங்கல்லாம் கலாசுக்காரங்க...''
ஆச்சரியமாய் இருந்தது....இவுங்களுக்கெல்லாம் அய்யனை எப்படி...
நினைப்பதற்குள், ராமசுப்ரமணியம் பேசத் தொடங்கினார்.
""அய்யன் வாரம் ஒரு முறை நம்ம கடைக்கு வருவாரு... சிமென்ட் லோடு வந்ததும்,மூட்டை இறக்குவார். ரெண்டு மூணு லோடு எறக்கி முடிக்கறதுக்குள்ளெ மணி 3 ஆயிடும்... சாப்பிடக்கூட மாட்டார்...''
வேலப்பனுக்குத் தூக்கிவாரிப் போட்டது...
""விவசாயம் செரியில்லே...பையனைப் படிக்கவைக்கணும்னு ஒரு முறை சொன்னார்...வேலையும் கேட்டார்..கொடுத்துட்டேன். ஆனா வேலையிலே ரொம்ப கறார்...''
அவர் இப்படிச் சொன்னதும் என்னால நம்பவே முடியல்லே- ""சிமென்ட் கடையிலேர்ந்து நேரா போஸ்ட் ஆபீசுக்கு வருவார்.அவர் சம்பாதிச்ச பணத்தையெல்லாம் பி.எல்.ஐ -ல போட்டிருந்தார். 10 லட்ச ரூபாய்க்குப் பாலிசி எடுத்திருக்கார். நீங்க தான் நாமினி...நேத்துத்தான் எனக்கு சேதி கெடச்சது...நல்ல மனுசன் ,பாவம் . நாம குடுத்து வச்சது அவ்வளவுதான்...பாவம்''-போஸ்ட்மாஸ்டர் தொடர்ந்து கூற...
கண்கள் இருட்டிக்கொண்டு வர... யாரோ என்னைத் தாங்குவது தெரிந்தது...
அய்யனோ....
நிமிர்ந்து உக்காந்தபோது,சிமென்ட் தூள் அப்பிய ,அவரது சாயம் போன காவித்துண்டும்,தோளில் ஒட்டுப்போட்ட-வெள்ளைச் சட்டையும்,அவர் வழக்கம் போல் உக்காரும். கயிற்றுக்கட்டிலில் கம்பீரமாய் இருந்தன...
பக்கத்திலே மழைக்காகிதம்-தான் நனைந்து மற்றவர்களைக் காக்கும் அதே மழைக் காகிதம்.http://www.dinamani.com/edition/Story.aspx?

Free Code Script

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...