2 ஜூலை, 2012

02/07/2012


1..மெக்சிகோ அதிபர் பெலிபி கால்ட்ரனின் பதவி காலம் முடிவடைவதால், நேற்று அதிபர் தேர்தல் நடந்தது.
2. ஜப்பான் ஃபுகுஷிமாவில் அணுஉலை விபத்து ஏற்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்களை ஆய்வு செய்ததில், பெரும்பான்மையானவர்களின் உடலில் கதிரியக்கம் கொண்ட சீசியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
3. தூக்குத் தண்டனை பெற்றவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது, மிகவும் சிக்கலான விஷயம் என, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
4. அகில இந்திய பணியில் உள்ள அதிகாரிகளில்,சரியாக செயல்படாத அதிகாரிகளுக்கு, ஓய்வு கொடுக்க வேண்டும் என, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
5. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 60 ராக்கெட்டுகளை ஏவுவதற்கு வசதியாக 3ஆவது ஏவுதளத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது.
6.  இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தஜிகிஸ்தான் நாட்டுக்கு 2 நாள் பயணம் செய்கிறார்.
7. மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு மருத்துவக் கல்வித் துறை புதிதாக 3,595 எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்கியுள்ளது.
8. மாணவர்கள் அனைவரும் மரம் நட வேண்டும்; அதிக மரங்கள் நட்டாலே சுனாமி, தானே புயல் போன்ற பேரழிவுகளைத் தடுக்கலாம்  என சட்டப்பேரவைத் தலைவர் டி. ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
9. நேற்று நடந்த விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணியை, ஸ்பெயின் அணி வென்று, யூரோ கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது.
10. விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுக்கு, இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே முன்னேறினார்.

29 ஜூன், 2012

29/06/2012


1. உலகில் எந்த பகுதியையும், ஒரு மணி நேரத்திற்குள் சென்று தாக்கவல்ல, ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லக்கூடிய, நவீன பிரமோஸ் ஏவுகணை, 2017இல் தயாராகும் என, விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.
2. ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ள, விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை சரணடையும்படி, காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
3. பாகிஸ்தானில், இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, 31 ஆண்டு கால சிறைவாசத்திற்குப் பின் விடுவிக்கப்பட்ட சுர்ஜித் சிங், நேற்று, வாகா எல்லைப் பகுதி வழியாக, இந்தியா வந்தடைந்தார். 
4. பொதுமக்கள் தரப்பில் இருந்து வந்த பலத்த கோரிக்கையை அடுத்து, மதுபான விற்பனை இல்லாத நகரமாக திருப்பதியை மாற்ற, ஆந்திர மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
5. பெட்ரோல் விலை லிட்டருக்கு,ரூ.2.46 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
6. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் ரூ. 100 கோடி லாபம் கிடைத்துள்ளது என அந்நிறுவனத் தலைவர் அறிவிப்பு.
7.  சென்னைப் பல்கலைக்கழகத்தில் அனைத்து பி.எச்டி. மற்றும் எம்.பில். ஆராய்ச்சி மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படும் என்று அந்தப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.திருவாசகம் அறிவித்துள்ளார்.
8. தலைமைச் செயலகத்தில் அரசுத் துறைகளில் மின்கசிவு போன்ற காரணங்களால் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுக்க துறைதோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
9. கோவை, திருப்பூர் மாவட்டங்களில், இடைநின்ற மாணவர்களுக்காக, விடுதி வசதியுடன் கூடிய மூன்று சிறப்பு பள்ளிகள் துவங்கப்படவுள்ளதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ.,) பிரபாகரன் தெரிவித்தார்.
10. யூரோ கோப்பை கால்பந்து தொடரின் பைனலுக்கு, நான்காவது முறையாக முன்னேறியது நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் அணி. நேற்று நடந்த அரையிறுதியில் போர்ச்சுகல் அணியை, பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. 

28/06/2012


1. மியான்மர் ஜனநாயக தலைவர் அவுங் சாங் சூச்சிக்கு, பிரான்ஸ் நாட்டின் கவுரவ குடிமகன் விருது வழங்கப்பட்டுள்ளது.
2. இலங்கையில், முன்கூட்டியே தேர்தல் நடத்தும் பொருட்டு, மூன்று மாகாண கவுன்சில்கள் நேற்று கலைக்கப்பட்டன. 
3. ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் மாணவர்களை தேர்வு செய்யும் போது, அனைத்து பள்ளிப் பாடத்திட்டங்களிலும், முதல் 20 விழுக்காடு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய தேர்வு முறையை, ஐ.ஐ.டி., கவுன்சில் உருவாக்கியுள்ளது. இது, அடுத்தாண்டு நடைமுறைக்கு வருகிறது.
4. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டு வருவதால், எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளன. லிட்டருக்கு நான்கு ரூபாய் வரை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
5.  பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்காக ஜூலை 1ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
6. நீலகிரி மாவட்டம் குன்னூர் பாஸ்டியர் நிறுவனம், ஐந்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் செயல்பட துவங்கியது. இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் ஒருங்கிணைந்த நோய் தடுப்பு திட்டத்துக்கு, 15 லட்சம் டோஸ் முத்தடுப்பு மருந்துகள் வெளியிடப்பட்டன.
7.கல்லூரி மாணவர்கள் மற்றவர்களிடம் சகிப்புத் தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும் என்று, கோவை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் உமா கேட்டுக் கொண்டார்.
8.  யூரோ கோப்பை போட்டியில் வியாழக்கிழமை நடைபெறும் 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி-இத்தாலி அணிகள் மோதுகின்றன.
9. விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.

27/06/2012


1.இலண்டனில் உள்ள புகழ்பெற்ற, பிக் பென் கடிகாரக் கோபுரத்திற்கு, இரண்டாவது எலிசபெத் அரசியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2. பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள 315 இந்திய மீனவர்களை வியாழக்கிழமை விடுவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
3. குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
4. குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் பி.ஏ.சங்மா,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, சந்தித்து, தனக்கு ஆதரவு அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
5. சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை ஒப்புயர்வு மையமாகத் தரம் உயர்த்த, 10 கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
6. பொதுத் தேர்தல் நடத்துவது போல், டி.என்.பி.எஸ்.சி., தேர்வை நடத்த, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
7. அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக கடந்த 4 ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த,துணைவேந்தர் மன்னர் ஜவஹர், அந்தப் பதவியிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார்.
8. கோவையில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பயின்று, அப்பள்ளியிலேயே 11ஆம் வகுப்பிற்கு சேர்க்கை வழங்கப்படாத மாணவர் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.
9.  தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, முதல் கட்ட கலந்தாய்வு, ஜூலை 2ஆம் தேதி துவங்குகிறது.
10. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடக்கவுள்ள முதலாவது அரையிறுதியில், நடப்பு சாம்பியன்களான ஸ்பெயின், போர்ச்சுகல் அணிகள் மோதுகின்றன.                                                                     

26/06/2012


1.  வங்கதேசப் போரின் போது தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவையும், அவரது தாயையும் காப்பாற்றிய ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி அசோக் தாராவுக்கு, அந்நாட்டு அரசு உயரிய விருது அளித்து கவுரவிக்க உள்ளது. 
2.  இஸ்ரேலில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் நோபல் பரிசு பெற்ற தேசியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின், 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது மார்பளவு சிலை திறந்துவைக்கப்பட்டது.
3. மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவராகத் தேடப்பட்டு வந்த சையத் ஜபியுதீன் அன்சாரி என்கிற அபு ஜிண்டால் எனும் பயங்கரவாதியை தில்லி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
4. மென்பொருள் தொழிலில் மிக முக்கியமான மையமாக மாறியுள்ள ஆந்திரா, வன்பொருள் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, மின்னணு வன்பொருள் கொள்கையை வெளியிட்டுள்ளது. 
5. குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் மைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இன்று, பிரதமரைச் சந்தித்து, நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகி, நாளை மறுநாள், வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
6. மத்திய அரசின் திட்ட ஒதுக்கீடாக, புதுச்சேரி மாநிலத்திற்கு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
7. மானியத்தில் வழங்கப்படும் உரங்களைத் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
8. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்புக் கல்வி ஆண்டில் (2012- 2013) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 198.50-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
9. கோவை மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற கபடி போட்டிகளில், ஆண்கள் பிரிவில் சுண்டக்காமுத்தூர் அரசு பள்ளியும், பெண்கள் பிரிவில் குளத்துப்பாளையம் அரசு பள்ளியும் சாம்பியன் பட்டம் வென்றன.
10. யூரோ கோப்பை கால்பந்துத் தொடரின் அரையிறுதிக்கு இத்தாலி அணி முன்னேறியது. பரபரப்பான காலிறுதியில்,இங்கிலாந்தை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று இங்கிலாந்து அணியைத் தொடரிலிருந்து வெளியேற்றியது.
                                                                                                                                    

25/06/2012


1. பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து, யூசுப் ரசா கிலானி, தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், முல்தான் தொகுதியில், அவரது மகன் போட்டியிட உள்ளார்.
2. பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில், ஐரோப்பிய கூட்டமைப்புகளின் வர்த்தக மாநாடு, வரும் 28ஆம் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையிலான குழு, சில முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளது.
3. எகிப்து நாட்டில் நடந்த தேர்தலில், சகோதரத்துவ கட்சி வெற்றி பெற்றுள்ளதாக, அந்நாட்டின் தேர்தல் ஆணையம், நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
4. அடுத்த நிதியமைச்சராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
5.சுகாதாரப் பிரச்னைகளை சரிவர நிவர்த்தி செய்யாத பட்சத்தில், அக்னி போன்ற ஏவுகனைகளை செலுத்துவதால் எந்த நன்மையும் ஏற்பட்டுவிடாது, என, மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
6. எதிரி நாடுகளின் ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, டில்லி மற்றும் மும்பையில் ஏவுகணைப் பாதுகாப்புக் கவச முறைகளை நிறுவ, இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர். டி.ஓ.,) முடிவு செய்துள்ளது
7. காஷ்மீரில், இமயமலையில் உள்ள அமர்நாத் குகை கோவிலில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை, நேற்று முறைப்படி துவங்கியது. 
8. விழுப்புரம் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை அப்புறப்படுத்த 4 கோடியே 43 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
9. தெற்காசியாவில் குப்பையில்லா நகரமாக உருவாக்க, இந்தியாவில் சிக்கிம் மற்றும் கோவை மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என, கோவை மாநகர மேயர் கூறினார்.
10. யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி  முன்னேறியது. விறுவிறுப்பான காலிறுதியில் சாபி அலோன்சா 2 கோல் அடிக்க, பிரான்ஸ் அணியை எளிதாக வீழ்த்தியது.                                                           

20/06/2012


1. பிரதமர் கிலானி, பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்ததைத் தொடர்ந்து புதிய பிரதமராக மக்தூம் சகாபுதீன் பெயரை, பாகிஸ்தான் மக்கள் கட்சி பரிந்துரை செய்துள்ளது.
2. விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், இலண்டனில் கைது செய்யப்பட உள்ளதால், ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.
3. மியான்மர் ஜனநாயக தலைவர், ஆங் சாங் சூகிக்கு, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் நேற்று, கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது.
4. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மத்திய, மாநில அரசுகள் பெறும் விண்ணப்பங்களுக்கு, முகமை அதிகாரிகள் எப்படி பதில் அளிக்கவேண்டும் என்பது குறித்து, பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
5.  குருவாயூர் கோவிலுக்கு சொந்தமான, 64 யானைகளின் வருடாந்திர சிகிச்சைக்காக, எட்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை ஒதுக்க, தேவஸ்தான நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
6. இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்தில் ஜூன் 21ஆம் தேதி உலக இசை தினம் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
7. தமிழக அரசின் உத்தரவைப் பின்பற்றி, பொது இடங்களில் விளம்பரத் தட்டிகள் வைக்க கட்டுப்பாடு விதிக்க, உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
8. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், ஆழியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
9. புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை, மருத்துவமனையாக மாற்றுவது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தலையிட முடியாது என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
10. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடக்கவுள்ள முதலாவது காலிறுதியில், போர்ச்சுகல் செக் குடியரசு அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேற, ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி காத்திருக்கிறது.

20/06/2012


1. பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரஸா கிலானியை தகுதி நீக்கம் செய்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
2. ஜி - 20 உச்சி மாநாட்டின்போது, பிரதமர் மன்மோகன் சிங்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சிறிது நேரம் சந்தித்துப் பேசினர்.
3. ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு உதவ இந்தியா 1,000 கோடி டாலர் (சுமார் ரூ. 55,000 கோடி) அளிக்க முன்வந்துள்ளது.
4. தங்களை நாடி வரும் அகதிகளை எந்த நாடும் திரும்ப அனுப்பக் கூடாது என்று சர்வதேச சமூகத்துக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
5. சர் கிரீக் எல்லைப் பிரச்னை தொடர்பாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு தோல்வி அடைந்தது.
6.  இறப்புக்கான இழப்பீடு வழங்கியதில் முறைகேடு செய்ததாக எல்.ஐ.சி. அதிகாரிகள் 3 பேர் மீது சிபிஐ  வழக்குப் பதிவு செய்துள்ளது.
7. மாணவ, மாணவிகளுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார்.
8. டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட, பல நோய்களை உண்டாக்கும் கொசுப் புழுக்களை உண்ணும் மீன்கள், பிச்சனூர் கிராம மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.
9. யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு நடப்புச் சாம்பியன் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் தகுதிபெற்றுள்ளன.

19/06/2012


1. சீனாவின் ஷென்சு-9 விண்கலம், விண்வெளியில் உள்ள, சீனாவின் விண் ஆராய்ச்சி மையத்துடன், நேற்று இணைந்தது.
2. கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸ் நாட்டில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், புதிய ஜனநாயக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
3. மெக்சிகோவிலுள்ள லாஸ் கபோஸ் நகரில், நடைபெற்று வரும் 7வது ஜி-20 உச்சி மாநாட்டில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பலநாட்டு அதிபர்களைச் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
4. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என,மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
5. அப்துல் கலாமின் இந்த அறிவிப்பு எனக்கு மன வேதனை அளிக்கிறது.   “மக்களின் ஜனாதிபதி கலாம்என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
6.நிபந்தனையின்றி போராட்டத்தை கைவிட்டு, வேலைக்குத் திரும்பினால், பணி நீக்கம் செய்யப்பட்ட விமான ஓட்டிகளை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளத் தயார் என, விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் கூறியுள்ளார்.
7. பெட்ரோல் விலையில், இன்னும் சில நாட்களுக்கு மாற்றம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
8. கோவை மாநகராட்சியில் குப்பையில் இருந்து உரம் தயாரித்தும், மீதமுள்ள கழிவுகளை அறிவியல்சார் முறையில், பாதுகாப்பாக மண்ணில் புதைத்தும், தீர்வு கண்டு வருகின்றனர். 
9. யூரோ கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேறியது போர்ச்சுகல். ஒரு வெற்றி கூட பெறாத சோகத்தில் நாடு திரும்புகிறது நெதர்லாந்து.
                                                                                                         

18/06/2012


1. நோக்கியா, பெப்சி, சோனி, யாகூ போன்ற 12க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள், இவ்வாண்டு 71 ஆயிரம் ஊழியர்களை, பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளன.
2. பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.1 எனப் பதிவாகி யுள்ளது.
3. சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை வைத்துள்ள வெளிநாட்டவர்களில், இந்தியர்கள், 55ஆவது இடத்தில் உள்ளனர். 
4.யங்கரவாதிகளின் மிரட்டல் காரணமாக, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலைச் சுற்றியுள்ள நகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும், கண்காணிப்புக் கருவிகளைப்பொருத்த கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.
5. தமிழக, கேரள எல்லையான வாளையார் சோதனைச்சாவடியில், மணிக்கணக்கில் வரிசையாக நிற்கும் வாகனங்களால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
6. தென்மேற்குப்பருவ மழை பெய்யத் துவங்கியதையடுத்து வால்பாறையில் தேயிலை உற்பத்தி வெகுவாக அதிகரித்துள்ளது.
7. இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் தொடரில், இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவிற்குப் பெருமைதேடித் தந்துள்ளார்.
8.யூரோ கோப்பைக் கால்பந்துத் தொடரின் காலிறுதிக்கு ஏ பிரிவிலிருந்து கிரீஸ் அணி முன்னேறியது.

15/06/2012


1. எகிப்தியப் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும், என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் முன்னேறிய பிரிவினர், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு சலுகை பெறுவதற்கான, வருமான உச்சவரம்பை` 4.5 இலட்சத்தில் இருந்து ` 6 இலட்சமாக உயர்த்துவது தொடர்பாக முடிவெடுப்பதை, மத்திய அமைச்சரவை தள்ளிவைத்துள்ளது.
3.  சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள பணம், 2011ம் ஆண்டின் இறுதியில், 12 ஆயிரத்து 740 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
4. தென்மேற்கு பருவமழை கடந்த வாரத்தில் வழக்கத்தை விட, 50 விழுக்காடு குறைவாகப் பெய்துள்ளது என, வானிலை ஆய்வு மையத்தினர் கூறியுள்ளனர். 
5. முதுகலை ஆசிரியர் தேர்வு, முழுக்க முழுக்க, தகுதியின் அடிப்படையில் தான் இருக்கும். ஏமாற்று கும்பலிடம் தேர்வர்கள் ஏமாற வேண்டாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் வலியுறுத்தியுள்ளது. 
6. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில், மன உளைச்சல் காரணமாக மாணவர்கள் தற்கொலை போன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க கலந்தாய்வு மையம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
7.யூரோக் கோப்பைக் கால்பந்துப்போட்டியின் லீக் ஆட்டத்தில்போர்ச்சுக்கல் அணி டென்மார்க் அணியை 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
                                                                                                         

14/06/2012


 1.     ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் நிதி நெருக்கடி காரணமாக, நோபல் பரிசின் ரொக்கத் தொகை, 20 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளது.
2.     இலங்கையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவது, ஒரு குழு மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என, அந்நாட்டு அதிபரின் செயலர் தெரிவித்து உள்ளார்.
3.     ஆண்டுதோறும் நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சி 44 நாட்களுக்குப் பதிலாக, இவ்வாண்டு 55 நாட்கள் நடைபெறும் என, உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
4.     தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவின் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 5 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
5.     பீகார் , உ.பி., ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அடுத்த படியாக புத்த மதத்தை தழுவிய நான்காவது மாநிலமாக அருணாசல பிரதேசம் திகழ்கிறது.
6.     யூரோ கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்ச்சுகல் அணி, டென்மார்க்கை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

16 மார்ச், 2012

17/03/2012


1. லிபியாவில் கடந்தாண்டு நடந்த மக்கள் புரட்சியின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்படி, ஐ.நா  பொதுச் செயலர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்.
2. கடந்த 244 ஆண்டுகளாக உலகின் மிகப் பிரபலமான குறிப்புதவிப் புத்தகமாக விளங்கி வரும், "என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா' தனது புத்தக வடிவ வெளியீடுகளை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது.
3.மாதச் சம்பளம் பெறுபவர்களுக்கு,புதிய வரவுசெலவுத் திட்டத்தில், வருமான வரி விலக்கு வரம்பில் 20 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு, 2 இலட்சம் வரை வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
4. விண்வெளிக்கு செய்மதியைக் கொண்டுசெல்லும் நெடுந்தூர ஏவுகணை ஒன்றை ஏவவுள்ள வடகொரியாவின் திட்டத்தால் மேற்குலக அணி நாடுகள் கவலை அடைந்துள்ளன.
5. ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவந்த ,இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இலங்கையிலுள்ள தமிழ் தேசியக் கூட்டணி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. 
6.  லோக்பால் மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மீண்டும் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்த தயாராவோம் என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
7. கட்டாய தலைக்கவசம் நடைமுறைபடுத்தப்பட்டதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
8. சங்கரன்கோவில் தொகுதியில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
9. கிரிக்கெட் வரலாற்றில் 100ஆவது சதத்தை அடித்து சாதனை நிகழ்த்தியுள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு, பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10. ஆசிய கோப்பை மட்டைப்பந்துத் தொடரின் தகுதி ஆட்டத்தில், இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வீழ்த்தியது.

15 மார்ச், 2012

16/03/2012


1. இலங்கை இறுதிக்கட்டப் போரில் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தின் மீதான விவாதத்தில், இலங்கைக்கு எதிராக 8 நாடுகள் விவாதம் செய்தன.
2.  ஜிம்பாப்வேயில் நிலவிவரும் நிதிப்பற்றாக்குறையால், இங்கு விரைவில் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜிம்பாப்வே நிதியமைச்சர் டெண்டாய் பிட்டி கூறியுள்ளார். 
3.மும்பைத் தாக்குதல் தொடர்பாக விவகாரத்தில், விசாரணை நடத்தி அறிக்கை பதிவு செய்ய, பாகிஸ்தான் நாட்டின் நீதித்துறை கமிஷனைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழு மும்பை வந்தது.  
4. உத்தரப்பிரதேச மாநிலத்தில், சட்டம் ஒழுங்கு, நிர்வாகத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். 
5. தமிழக மக்களவை உறுப்பினர்கள் பற்றி விமர்சனம் செய்ததற்காக டெல்லியில் உள்ள இலங்கை தூதர் கரியவாசம் மன்னிப்பு கேட்டார்
6.இந்தியாவின் வரவு செலவுத் திட்டம், இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியால், முன் வைக்கப்படுகிறது.
7.த்தரப்பிரதேசத்தில், நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறிய வகைக் கணினி வழங்கப்படும் என அம்மாநில முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். 
8. அன்னா ஹசாரே குழுவின் அடுத்தகட்ட போராட்டம் குறித்து, குழு உறுப்பினர்களுடன் ஹசாரே இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 
9. ஆசியக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
10. இந்தியன் வேல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பயஸ் - செக் குடியரசின் ராடேக் ஸ்டெபனெக் இணை தோல்வி அடைந்து வெளியேறியது.

14 மார்ச், 2012

15/03/2012


1. சீனா பெற்று வரும் பொருளாதார நன்மைகளைப் பாதுகாக்க மேலும் அரசியல் சீர்திருத்தங்கள் தேவை என்று அந்நாட்டின் பிரதமர் வென் ஜியா போ கோரியுள்ளார்.
2. தி ஹேகிக்கிலிருந்து செயல்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், காங்கோவின் கிளர்ச்சிக் குழுவின் தலைவரான தாமஸ் லுபாங்கா, போர்க் குற்றங்கள் புரிந்தார் என்று தனது முதல் தீர்ப்பில் கூறியுள்ளது.
3. ஜப்பானின் ஹோக்காய்டோ தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாகப் பதிவானது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. 
4. மத்திய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்கள் மற்றும் சலுகைகளைப் பறித்து ஒழுங்குமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
5. கடந்த மூன்று ஆண்டுகளில் 700 பாகிஸ்தானியர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. 2012--13 ஆண்டிற்கான தொடர்வண்டி வரவு செலவுத் திட்ட்த்தில், அனைத்து வகைப் பயணச் சீட்டுக்கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ள. 
7. காய்கறி மற்றும் புரதச்சத்துப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் பணவீக்கம் 6.95 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
8. மத்திய கப்பல் துறை அமைச்சகம் நிர்ணயம் செய்த 260 லட்சம் டன் குறியீட்டு இலக்கை கடந்து வஉசி., துறைமுகம் சாதனை படைத்துள்ளது.
9. கோயமுத்தூர் காந்திபுரம் பகுதியில், விரிவான,ஒருங்கிணைந்த பேருந்து நிறுத்தமும், பல்லடுக்கு வாகன நிறுத்த வளாகமும் கட்டி, நகரின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
10. அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்தியன வேல்ஸ் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - செக் குடியரசின் ராடேக் ஸ்டீபனெக் இணை காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

13 மார்ச், 2012

14/03/2012


1. வட மற்றும் தென் கொரிய நாடுகளின் இடையே உள்ள சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு இம்மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா செல்ல உள்ளார். 
2. உலகம் முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்னை விசுவரூபம் எடுத்து வருவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பெரும் அபாயங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. இலங்கையில் போர் முடிந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இன்னும், மனித உரிமை மீறல்கள் தொடர்வதற்கான ஆதாரங்கள் இருப்பதாக,அம்னஸ்டி இண்டர்நேசனல் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
4. கிங்பிர் விமான நிறுவனத்துக்கு புதிதாக கடன் வழங்கும் திட்டமில்லை, என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். 
5. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக உ.பி., மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி மனுத்தாக்கல் செய்தபோது, தனக்கு  . ` 111 கோடி அளவிற்கு சொத்துக்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
6. 2012-2013 ஆம் ஆண்டிற்கான மத்திய தொடர்வண்டி வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்படுகிறது.
7. சித்த, ஆயுர்வேத கல்லூரிகளை ஒரு வாரத்திற்குள் தொடங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 
8. கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. 
9. ` 731.151 கோடி மதிப்பிலான கோவை மாநகராட்சியின் வரவு செலவுத் திட்டத்தில் ` 27.71 கோடி அளவிற்கு பற்றாக்குறை உள்ளதாக மாநகரத் தந்தை அறிவிப்பு.
10. ஆசியக்கோப்பை மட்டைப்பந்துத் தொடரில், இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கையை 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது,

12 மார்ச், 2012

13/03/2012


1. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள, அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் அருகில் உள்ள கிராமத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 16 பேர் பரிதாபமாக பலியாயினர். 
2. அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், தற்போதைய அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது.
3. தலிபான்கள் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுடன், சமாதான பேச்சு வார்த்தை நடத்த பாகிஸ்தான் அரசு இன்று அழைப்பு விடுத்துள்ளது. 
4. உத்தரகாண்ட் முதல்வராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜய் பகுகுணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
5.  உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி இருந்தபோதிலும், இந்தியாவின் பொருளாதாரம் உறுதியாக உள்ளது என்று, குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
6. ஓசோன் படலம் எவ்வாறு அமைந்துள்ளது, சுற்றுச்சூழல் பாதிப்பின்மூலம் அது எவ்வாறு தேய்வடைகிறது என்பதை விளக்கி, வேதியியலுக்கான நோபல் பரிசுபெற்ற அறிவியலாளர், எஃப் ஷேர்வூத் ரெளலண்ட் காலமானார். 
7. அணுமின் நிலைய பாதுகாப்பு விஷயத்தில், எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என, குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தெரிவித்தார்.
8. காஷ்மீரின் வடமேற்கில் உள்ள கில்ஜித்தை மையமாகக்‍ கொண்டு,நேற்று முற்பகல் ஏற்பட்ட நிலநடுக்‍கம், ரிக்‍டர் அளவுகோலில், 5.6ஆக பதிவானது.
9.  தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
10. இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், சர்வதேச டென்னிஸ் போட்டியில் தனது 600ஆவது வெற்றியைப் பதிவு செய்தார். 

Free Code Script

12/03/2012


1. ஜப்பானில், 16 ஆயிரம் பேரை பலிவாங்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் முதலாண்டு நினைவு நாள், நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. 
2.  பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ந்துக்களை வலுக்கட்டாயமாக முஸ்லிம்களாக மதமாற்றம் செய்வது அதிகரித்துள்ளதாக,பாகிஸ்தானுக்கான மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
3.  சீனாவின் விண்வெளி நிறுவனம், 2015 ஆம் ஆண்டுக்குள் 100ஏவுகணைகள், செயற்கைக் கோள்களை ஏவத் திட்டமிட்டுள்ளது.
4. குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையுடன் நாடாளுமன்ற வரவு செலவுத் திட்டக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
5. பருத்தி ஏற்றுமதிக்கான தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
6.  நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்கியதில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார்.
7. இந்தியாவில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் செயல்படும் அமைப்புகள் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு ` 10 ஆயிரம் கோடிக்கு மேல் பெறுகின்றன.
8. உத்தரப் பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
9.  நிலநடுக்கம், சுனாமி, அணுமின் நிலைய விபத்து ஆகிய மூன்று பேரழிவுகளிலிருந்தும் மீண்டு, ஜப்பான் ஓராண்டுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாக, சென்னையிலுள்ள ஜப்பான் துணைத் தூதர் தெரிவித்தார்.
10.  ஆசிய கோப்பை மட்டைப்பந்துப்போட்டியின் முதல் ஆட்டத்தில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்.

8 மார்ச், 2012

09/03/2012


1. சிரியாவில்,எந்தவொரு வெளிநாட்டு இராணுவத் தலையீடும், நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று, சிரியாவுக்கான தூதுவரான கோபி அனான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. ஈரான் தனது அணுசோதனை குறித்து வல்லரசு நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்குச் சம்மதம் தெரிவித்திருப்பதற்கு, இஸ்ரேல் வரவேற்புத் தெரிவித்துள்ளது.
3. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது பிராந்தியச் சீர்குலைவுக்கு வழிவகுக்கும் என்று இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.
4. ஐ. நா.வின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை குறித்த ஒரு தீர்மானம் அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
5.  ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில்,அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தின் மீது, இந்தியா, தமிழர்களின் நலனை மனதில் கொண்டு, ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் என,மைய அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.
6. அரசியலில் பங்கேற்கும் மகளிர் அதிகம் கொண்ட நாடுகள் எது என்ற பட்டியலில், உலக அளவில் இந்தியாவுக்கு 105 ஆவது இடம் கிடைத்திருக்கிறது. 
7. நாட்டின் எல்லைப்பாதுகாப்பு படையைத் தரம் உயர்த்த, `11 கோடி செலவில் நவீன வகை போர்விமானங்கள், உலங்கு வானூர்திகளை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
8. அரசு அலுவலர்கள் 100 விழுக்காடு தமிழில் தான் கையெழுத்திட வேண்டும் என, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சம்பத் தெரிவித்துள்ளார்.
9. இக்கட்டான போட்டிகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி,அணியைக் காக்கும் டிராவிட்டின் ஓய்வு, இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும் என நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
10. ஆஸ்திரேலியாவில நடைபெற்ற, காமன்வெல்த் வங்கி முத்தரப்பு மட்டைப்பந்துத் தொடரின்  இறுதிப் போட்டியில், இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...